சில வகையான மனிதர்கள் இருப்பார்கள், எப்போதும் எதையாவது தேடிக் கொண்டே இருப்பது அவர்களின் வேலை. 1000 புத்தகத்தை படித்திருப்பார்கள், 500 சொற்பொழிவுகளை கேட்டு இருப்பார்கள், ஆனால், இன்னும் ஏதோ ஒன்றை தேடிக்கொண்டே இருப்பார்கள்.
உண்மையா சொன்னா, எதை தேடறோமுன்னு தெரியாம தேடிகிட்டே இருப்பாங்க. இவங்களோட வாழ்கை, காலையில இருந்து தூங்கப் போகிற வரை பயங்கர பிஸியா இருக்கும், ஒரு 10 நிமிடம் இவங்களால நிதானமா பேசக்கூட முடியாது, நிக்காம தேடிக்கிட்டே இருப்பாங்க.
இவங்க படிச்ச புத்தகத்தில் இருந்த விசயங்களை, இவங்க கேட்ட விசயங்களைப் பத்தி, கூட இருக்கிறவக கிட்ட, இப்படி பண்ணினா நல்லா இருக்கும், அப்படி பண்ணினா நல்லா இருக்கும், அந்த மகான் இப்படி சொன்னாரு, என எதையாவது சொல்லிகிட்டே இருப்பாங்க. எதையாவது வாழ்க்கையில சாதிச்சே ஆகணும், நம்ம புள்ளைக கஷ்டப்படக் கூடாது, நம்ம குடும்பம் கஷ்டப்பட கூடாதுன்னு ஓடிக்கிட்டே இருப்பாங்க.
நம்மள்ள எத்தனை பேரு நம்ம வாழ்க்கையில நடக்கிற விசயங்களுக்கு அடுத்தவங்க மேல பழி போடுறோம், இன்னும் நல்ல நேரம் வரலை, சோசியக்காரங்க மேல, கடவுள் மேல, இப்படி எதுமேலயாவது பழியைப் போட்டு நம்மளை நாமே ஆறுதல் படுத்திக்கிறோம்.
உலகத்தில் தலை சிறந்த ஆசிரியர் யார்? நம்ம வாழ்க்கைதான் மிக சிறந்த ஆசிரியர், வாழ்க்கை கற்றுத்தாரத பாடத்தையா மற்றவர்கள் கற்றுத்தரப் போறாங்க. நமக்குத்தெரியுதோ, தெரியலையோ வாழ்கை நமக்கு எதையாவது ஒரு செய்தியைச் சொல்லிக் கொடுத்துக்கிட்டே தான் இருக்கு. நாம தான் வாழ்க்கை சொல்லித்தரும் பல விசயங்களை கத்துக்கிறது இல்லை., சொல்லப்போன, நம்ம வாழ்க்கையிலே என்ன நடந்தது/நடக்குதுன்னு பாக்கிறது கூட இல்லை. அடுத்தவங்க வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு பாக்கறதுக்கு நேரம் இல்லை, அப்புறம் எங்க நம்ம வாழ்க்கையிலே என்ன நடக்குதுன்னு யோசிக்கிறது.?
வாழ்க்கையினா என்ன ?
நிகழ்வுகளின் தொகுப்புத் தான் வாழ்கை
அப்போ நிகழ்வுகள்?
நம்ம எடுக்கிற முடிவுகள் தான் நிகழ்வுகள் (நிகழ்ச்சிகள்)
அப்போ நம்ம வாழ்கை என்பது நம்மள சுத்தி நாம எடுக்கற முடிவுகள் தான். உண்மையாகச் சொன்னா நீங்கதான் உங்களுக்கு பாஸ், தலைவன் , கடவுள் எல்லாமே. நீங்க எடுக்கிற ஒவ்வொரு முடிவும் தான் உங்கள் வாழ்கை எப்படி பயணிக்கிறதுன்னு முடிவு செய்கிறது. வாழ்க்கையோட நிதர்சனமான உண்மை இதுதான். உங்க வாழ்க்கையோட சந்தோசமோ, துக்கமோ அதோட கடைசி துளி வரை அனுபவிக்கிறது என்னமோ நீங்கதான்.
இரண்டு விசயத்தை இந்த மாதம் முயற்சி பண்ணலாம்,
- உங்க குழந்தைக்கு ஒரு கருத்தை தெளிவா சொல்லிக்கொடுங்க, குழந்தைகள் செய்யிற செயலுக்கும் அதற்கான பின் விளைவுகள், நல்லதா கெட்டதா என்பதை புரியவையுங்கள் .உதாரணத்துக்கு, பள்ளி செல்லும் குழந்தைகள் ஏதாவது தப்பு பண்ணினா, யார் யாருக்கு என்ன என்ன மன உளைச்சல் வந்தது, அந்த தப்பால் என்ன நடந்ததுன்னு புரிய வையுங்க.
ஒரு பையன் செல் போனை கீழே தூக்கி போட்டு ஒடைச்சிட்டான்னு வச்சிக்குவோம் . அவனை நல்லா திட்டி, முடிஞ்ச அளவுக்கு நல்லா மிரட்டி, அடிச்சு இனிமேல் என்னோட செல் போனை தொட்டா அவ்வளவுதான் என பையனை மிரட்டும் போது ,இந்த விசயத்துல இருந்து அந்த பையன் தெரிஞ்சுகிறது எல்லாம் அடி, திட்டு ஒருவித பயம்.
அதே நேரம், அந்த பையனுக்கு செல் போனை யாரும் சும்மா கொடுக்கலை டா, செல் போனை காசு கொடுத்து வாங்கணும், ஒடஞ்சா செல் போனை சரிசெய்ய எவ்வளவு செலவாகும். இவ்வளவு செலவு செய்ய அப்பா இவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு வேலை செய்யணும். நீ தூக்கி வீசுனதால இவ்வளவும் நடந்திருக்கு. இனிமேல் இப்படி பண்ணாதே. இதையே, 10 நாளைக்கு செல் போனை பார்க்கும் போது எல்லாம் அந்தப் பையனுக்குச் சொல்லுங்க. இப்போ, அந்த சின்னப் பையனோட மனசுல தெளிவாகப் புரியும், நம்ம தூக்கி வீசுனதாலே தான் செல் போன் ஒடஞ்சது, எனவே அப்பாவுக்கு செலவு. இனிமேல் நாம இப்படி பண்ணக்கூடாது என்று யோசிப்பார்கள்
இன்னிக்கு குழந்தையா இருக்கிறவங்க தான் நாளைக்கு அவுங்களுடைய வாழ்க்கையை வாழனும். அவுங்களோட வாழ்க்கையில நடக்கிற ஒவ்வொரு விசயங்களையும் தீர்மானிக்கணும் அதுக்கு பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கணும்.
2) ஒரு 10 நிமிஷம் மொபைல் போன், டிவி, ரேடியோ, புள்ளைக, மனைவி, கணவன் எல்லாத்தையும் கொஞ்சம் தள்ளி வச்சிட்டு. கண்ணை மூடி அமைதியா, இருட்டை பாருங்கள். உங்களுக்காக சில மணித்துளிகள் செலவு செய்யுங்கள். உங்க வாழ்க்கையில என்ன நடந்துக்கிட்டு இருக்குன்னு யோசித்துப் பாருங்க. முடுஞ்சா உங்க மனசுக்கிட்டே கொஞ்சம் மனம் விட்டு பேசுங்க? அப்போது நீங்கள் செய்வது சரியா ?தவறா ? என்பது புரியும் மனம் அமைதி அடையும்.
முயற்சி பண்ணித்தான் பாருங்களேன். வாழ்கை கற்றுத்தராத பாடத்தையா மற்றவர்கள் கற்றுத்தரப் போறாங்க. நமக்குத் தெரியுதோ, தெரியலையோ வாழ்கை நமக்கு எதையாவது ஒரு செய்தியைச் சொல்லிக்கொடுத்துக்கிட்டே தான் இருக்கு. வாழ்கை சொல்லித்தரும் பல விசயங்களைக் கத்துக்கிறதுக்கு முயற்சி பண்ணலாமே.