14-உணவு உண்ணும் போது:- குழந்தைக்கு உணவு கொடுக்க பொறுமை அதிகம் வேண்டும். நாம் கொடுக்கும் உணவை குழந்தை உடனே சாப்பிடுவது இல்லை.
சில குழந்தைகள் வாயில் வாங்கி மிக மெதுவாக சாப்பிடும். சில குழந்தைகள் தண்ணீர் சிறிது, சாதம் சிறிது என வாங்கி முழங்கும். சில குழந்தைகள் சாப்பாட்டை வாயில் அப்படியே வைத்துக்கொண்டு விளையாடும்.
சில குழந்தைகள் வாயில் வேகமாக வாங்கி பூ…பூ.என துப்பும் இப்படி எத்தனையோ ரகங்கள் குழந்தைகள் சாப்பிடுவதில்.
ஒவ்வொரு தாய் மார்களுக்கும் உள்ள பெரிய கவலையே குழந்தை சாப்பிட மாட்டேன் என்கிறது என்பதுதான்.
சில தாய்மார்கள் குழந்தைக்கு மிட்டாய், பிஸ்கட் ,ராகிமால்ட் ,பால் எப்படி ஏதோ ஒன்று கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். குழந்தைக்கு இதுவே வயிறு நிறைந்துவிடும்.
இதற்கு மேல் சாப்பாட்டை போட்டு சாப்பிடு என திணிப்பார்கள்.
அந்தக் குழந்தை வாயில் வாங்கிக் கொண்டு முழங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல். ஓ…ஓ..என உமட்டிக் கொண்டு கண்ணில் நீர் மழ்க அம்மாவைப் பார்க்கும்.
தின்னு… முழுங்கு… என ஆதட்டும் அம்மாவைப் பார்த்து வாந்தி எடுத்து விடும்.
சனியன்! சனியன்! இப்படியே தான் உயிரே வாங்கும் தின்னு தொலைத்தால் என்ன ?என திட்டிக்கொண்டே முதுகில் இரண்டு அடி போட்டு போய் தொலை என விட்டு விட்டு சுத்தம் செய்வார்கள்.
பிறகு நாள் பூராவும் புலம்புவார்கள் என் குழந்தை சாப்பிடவே மாட்டேன் என்கிறான். அதற்கு ,என்ன செய்வது எனப் பார்ப்பவர்களிடம் எல்லாம் ஆலோசனை கேட்பார்கள்.
இது சரியான முறையா? என்றால் இல்லை. எந்த உணவு கொடுத்தாலும் காலை ஏழு அல்லது எட்டு மணிக்குள் கொடுக்க வேண்டும். இடையில் சிறிது பால், தண்ணீர் போதும் தீனிகள் கொடுத்துக் கொண்டே இருக்கக் கூடாது.
12 மணிக்குள் மதிய உணவு கொடுத்து விட வேண்டும்.இரவில் 7:00 மணிக்குள் சாப்பிட கொடுத்து விட வேண்டும்.
குழந்தைங்களுக்கு எது பிடிக்கும். என்பதை தெரிந்து விளையாட்டு காட்டியே உணவு ஊட்ட வேண்டும். அவர்களுக்கு பிடித்தமானதாக மிகச் சிறிதே சாப்பிட்டாலும் வயிறு நிறைந்துவிடும்.
அதட்டி, மிரட்டி சத்தான ஆகாரம் என அதிகமாக கொடுத்தாலும். மன நிறைவு இல்லாமல் சாப்பிடுவதால் அந்த உணவு உடலில் தங்குவதில்லை .
பார்த்து… பார்த்து கொடுக்கிறேன் அப்படி இருந்தும் நோஞ்சான் மாதிரி இருக்கிறது. என சில பெற்றோர்கள் குறைபடுவார்கள்.
நீங்கள் உணவை பார்த்து பார்த்து கொடுத்தாலும் ஏன் குழந்தை நன்றாக சாப்பிட்டு ஆரோக்கியமாக இல்லை என்றால் உங்கள் பராமரிப்பில் கவனக் குறைவு இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
உணவை கொடுத்து விட்டால் மட்டும் ஆரோக்கியமாக குழந்தை இருந்துவிடும் என்பது தவறு.
எடுத்துக்காட்டாக குழந்தைக்கு பால் கொடுக்கும் சில தாய்மார்கள் குழந்தை பால் குடிக்கும் போது சட்டையில் சிந்தி கொள்ளும் உடனே தண்ணீர் தொட்டு துடைத்து அவ்வுடையை மாற்றி வேறு உடை அணிய வேண்டும்.
சோம்பல் படும் தாய்மார்கள் உடனே, அவ்வாறு செய்ய மாட்டார்கள். ஈரத்துடன் இருக்கும் குழந்தைக்கு அந்த ஈரம் நெஞ்சில் பட்டு பட்டு நெஞ்சு சளி பிடித்து விடும் சளி பிடித்தால் அதனுடன் போகாமல் இருமல் காய்ச்சல் என அடுத்தடுத்து வந்து குழந்தையின் ஆரோக்கியம் கெட்டு விடும்.
சிறிது கவனக்குறைவால் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நலம் இல்லாமல் போய்விடும் குழந்தை வளர்ப்பு என்பது எளிதான காரியம் அல்ல. மிகவும் கவனமாகப் பார்த்து செய்ய வேண்டிய ஒன்று.
தாயின் வயிற்றில் இருந்து கொண்டே நாராயணனின் கதையை கேட்டு பக்தி கொண்டான் பிரகலாதன். கருவில் இருக்கும் போது இருந்தே குழந்தை நம் உணர்வுகளை உணர ஆரம்பித்து விடுகிறது.
நாம் சிந்திப்பது நடந்து கொள்வது எல்லாமே நல்ல விதமாக இருக்க வேண்டும். குழந்தையா அதற்கு என்ன தெரியும் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. நம் உணர்வுகளை தொப்பில் கொடி மூலம் குழந்தை உணர்ந்து கொள்கிறது.