(குழந்தை ஏழாம் திங்களில்
நாவசைத்து பேச முற்படும் அப்போது தாய் பாடும் தாலாட்டை கவனிக்கும் பருவம். பாட்டின் ஈற்றடி “தாலே தாலேலோ” என்று முடியும்.)
1-விண்ணவர் மண்ணில் வந்த வரவால்
மண்ணவர் போற்றப் பிறந்த செல்லமே
பண்ணவனே பணிந்து பதமலர் காண
கல்லும் முள்ளும் தாண்டி வருவர்
புண்ணியன் புண்டரிகன் பெற்ற மகனே
புண்ணியம் செய்தோம் நாங்கள் காண
மண்ணில் பூத்த புதுவரவே மணிகண்டா
கண் வளர்வாய் தாலே தாலேலோ!
2-காலைப் பனியில் எழுந்து குளித்து
கடவுள் உன்னை காண நடந்து
மாலை போட கோயில் வந்து
கார்த்திகை முதல் தேதியில் அணிந்து
காலை மாலை குளித்து வணங்கி
விரதம் இருந்து காண வருவர்
பாலைக் குடிக்கும் குழந்தை மணிகண்டா
கண் வளர்வாய் தாலே தாலேலோ!
3-புலன் அடக்கி மனம் அடக்கி
புத்துணர்வு பெற உன்னைக் காண
வலம் வந்து சாமியை வணங்கி
தரிசனம் கண்டு மெய் மறந்து
தலம் யாவும் சுற்றிச் சுற்றி
இறை தரிசனம் நிம்மதி கொண்டோம்
நலம் காக்கப் பிறந்த பிள்ளாய் கண் வளர்வாய் தாலே தாலேலோ!
4-காடு மேடு சுற்றி வந்து
காலில் மிதியடி அணியாது வந்து
சூடுதல் கருப்பு அணி தரித்து
சூழல் பொறுத்து சுகம் விலக்கி
பாடுதல் உன் நாமமாகி ஐயப்பா
சரண கோசம் போட்டு ஓதி சோடு பற்றி நாடி வருவர்
கண் வளர்வாய் தாலே தாலேலோ!
5-சாதி மத பேதம் இன்றி
சரணடைந்து பக்தர் கூட்டம் பாடி
நாதி ஐயப்பன் என்று காட்டுவழி
நாடிவருவர் பயபக்தி நெறியைப் பற்றி
பாதி உடலைத் தந்த சிவன்
மைந்தன் விநாயகர் முருகன் அருளுடன்
சோதி தரிசனம் காண வருவர்
கண் வலர்வாய் தாலே தாலேலோ!
6-அன்னை அன்பிற்கும் கட்டுப் பட்டு
அரக்கியை வாழ வைத்த மணிகண்டா
உன்னதம் வரப்புலிப் பால் கொண்டு
வர கானகம் சென்ற மணிகண்டா
கன்னியாக வாழ்வு ஏற்று சபரி
மலைக்குச் சென்று அமர்ந்த ஐயப்பா
சந்நிதி நாடி கன்னிச்சாமி வருவர்
கண் வளர்வாய் தாலே தாலேலோ!
7-பதினெட்டு படி ஏறி வருவர்
பகலவன் சூரியன் போல்
ஒளிகாண
கதிர் பட்ட அருள்பெற்று வருவர்
ஐயப்பன் பொன்மேனி தரிசனம் கண்டு
மதிமயங்கி மெய் மறந்து
வருவர்
மறவாது மறுபடியும் படியேற வருவர்
கதியென்று சரணப் பாட்டுக் கேட்டு
கண் வளர்வாய் தாலே தாலேலோ!
8-பசித்து அழும் பால மணிகண்டா
சுவைத்துக் குடிக்க பால் தருகிறேன்
ஆசியம் துடைத்து சிரித்த
முகம்கண்டு
தூரியில் ஆட்டு கின்றேன் மணிகண்டா
நாசியில் போகாமல் தோளில் கிடத்தி
முதுகில் தடவி தூரியில் ஆட்டுகிறேன்
நேசிக்கும் தாய்மை அன்புடன் பாடுகிறேன்
கண் வளர்வாய் தாலே தாலேலோ!
9-பழச் சாரும் தருகிறேன் மணிகண்டா
பழச் சுளையும் தருகிறேன் உண்டு
சுழன்று விளையாடும் சிறு பிள்ளையாய்
கண் சுழன்று வருகுது மணிகண்டனுக்கு
சுழல் பாதம் ஆட்டும் போது
சலங்கை ஒலி தூக்கத்தை கலைக்க
குழல் ஊதும் கண்ணன்
இசைகேட்டு
கண் வளர்வாய் தாலே தாலேலோ!
10-புலியில் பிறந்த பூரணச் சந்திரனே
ஒளிச் சுடரே ஓவியமே சித்திரமே
கவின் அழகு ஒளிவீசி எதிர்பட்டு
ஏழு வண்ண நிறங்கள் காட்டுதே
குவிதல் அறிவு முழுமை பெற்று
திரண்டு ஒரு முகப் படுத்துதே
சீவிதம் வடிவமாக உன்னை சரணம்பாட
கண் வளர்வாய் தாலே தாலேலோ.