கேசவா,பகவான் தனிப் பெருங்கருணையாளர் ஆயிற்றே ,கொடியவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களது இயல்பை ஏன் மாற்றக் கூடாது.தண்டனை  கொடுப்பதேன் எனக் கேட்கிறான் அர்ஜுனன் .

     அர்ஜுனா , கொடியவர்களுக்கு தண்டனை அளிப்பதும்., அசுர உடலில் இருந்து  அவர்களை விடுவிப்பதும் , கருணை இல்லை என எண்ணி விடக் கூடாது.

     குழந்தைகளுக்கு கையிலோ, காலிலோ கொப்புளம் கட்டி  வந்தால் பெற்றோர் முதலில் மருந்து கொடுத்துப் பார்ப்பார்கள் .

      தீராவிட்டால், தாமதம் செய்வதால் இந்த விஷம் மற்ற உறுப்புகளுக்கும் பரவும் என்று தெரிந்தவுடன் மற்ற உறுப்புகளை காப்பாற்றும் நோக்கத்துடன் , விஷம் பட்ட உறுப்பில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கிறோம் .அல்லது வெட்டி  எடுக்க அனுமதிக்கிறோம்.

      இதற்கு காரணம் குழந்தையிடம் உள்ள பரிவுதானே அதுபோலத்தான் அசுரனிடம் உள்ள தீய குணங்களை களைவதற்காக முதலில்  நீதியை எடுத்துக் கூறுகிறேன்.

    உதாரணத்திற்கு  துரியோதனனுக்கு அறிவுரை கூறியது போல தண்டனை நேரும் என்றும் அச்சுறுத்துகிறேன்.\

   பயனளிக்காது போகவே கொடுமைகள் மேலும் வளரும்போது அவர்களை வதம் செய்து அவர்களின் பாவத்தின் பலனை அனுபவிக்கச் செய்கிறேன்.

    சிலர் முற்பிறவியில்  புண்ய கருமங்கள் செய்திருந்து இப்பிறவியில் கெட்ட சேர்க்கையினால் பாவச் செயலில் இறங்கி , பாவங்கள் செய்யும்போது எனது கரங்களினால் வதம் செய்து உய்விக்கிறேன்.இத்தனை செயல்களிலும் எனது கருணை தான் மேலோங்கி இருக்கிறது  என விவரிக்கிறார் கிருஷ்ணன் .

    கேசவா,” தர்மத்தை நன்கு நிலைநாட்டுவது” என்பதை விவரித்துக் கூறுங்கள் எனக் கேட்கிறான் அர்ஜுனன் .

    அர்ஜுனா , சாஸ்திர  முறைப்படி தர்மங்களைக் செயல்முறையில் கடைப்பிடிக்கவும், தர்மத்தின் பெருமையை எடுத்துக் காட்டவுமே அவதாரம் எடுக்கப்படுகிறது .

   அவ்வாறு  எடுக்கும் போது மக்களின் உள்ளங்களில் பதியும் வகையில் மிகவும் கவரக்கூடிய சொற்களால் உபதேசம் செய்கிறேன்  பின் ஆணையிடுகிறேன்.

    எல்லோருடைய உள்ளங்களிலும் , வேதங்கள், சாஸ்திரங்கள், மறுமை, பெரியோர்கள்பாலும் மரியாதையும், நம்பிக்கையும் ஊட்டுகிறேன்.

   நற்பண்புகளிலும் , நல்ல நடத்தைகளிலும் நம்பிக்கையையும் பிரியத்தையும் ஊட்டி வழிகாட்டி மக்களிடம் இவற்றில் திடமான உறுதியை வளர்ப்பதன் வாயிலாக தர்மத்தை நிலை நாட்டுகிறேன் என்கிறார் கிருஷ்ணன் .

    கேசவா, நல்லோர்களைக்  காப்பது தீயவர்களை அழிப்பது, தர்மத்தை நிலை நாட்டுவது என்ற மூன்றுக்கும் சேர்ந்தார்போலத் தேவை ஏற்படும் போதுதான்  அவதாரம் நடக்கிறதா, இல்லை ஏதாவது ஒரு காரணத்துக்காக மட்டும் நிகழுமா ? எனக் கூறுங்கள் எனக் கேட்கிறான் அர்ஜுனன் .

       அர்ஜுனா மூன்றும் சேர்ந்தல்தான் அவதாரம் செய்ய வேண்டும்  என்ற கட்டாயம் இல்லை. ஏதோ ஒரு இலட்சியத்திற்காகவும் கூட அவதாரம் நேரும் என விவரிக்கிறார் கிருஷ்ணன் .

    கேசவா, தாங்கள்  சர்வ வல்லமை படைத்தவர் ஆயிற்றே .அவதாரம் எடுக்காமலே இக்காரியங்களைச்  சாதிக்கலாமே, அவதாரம் செய்வதற்கு அவசியம் என்ன என்பதை விவரியுங்கள் எனக் கேட்கிறான் அர்ஜுனன் .

    அர்ஜுனா, இது முற்றிலும் சரிதான். அவதாரம் எடுக்காமலே அனாயசமாக  எல்லாம் செய்ய முடியும், செய்யவும் செய்யலாம்.

    ஆனால், ”மக்களிடம் உள்ள பரிவினால் அவர்கள் தரிசனம் செய்யட்டுமே, நம்மைத் தொட்டுப் பார்க்கட்டுமே, நம்மோடு பேசட்டுமே, எளிதாக நம்மை அண்டி ஆனந்தம் அடையட்டுமே” என்று மக்கள்  மேன்மை பெற வாய்ப்பு அளிப்பதற்காகவும்…..

   ….பரம பிரியமுள்ள பக்தர்கள் தமது தெய்வீகமான லீலைகளை  அனுபவிக்கட்டுமே என்ற கிருபையினாலும் திவ்யமங்கள ரூபங்களில் வெளிப்படுகிறேன் .

     அந்த அவதாரங்களில் எடுத்த ரூபங்களையும் , திருக்கல்யாண குணங்களையும், பிரபாவங்களையும், திருநாமங்களையும் , பெருமைகளையும்  , திவ்ய லீலைகளையும் கேட்டும் , பாடியும் , நினைத்தும் மகிழ்ந்தும் எளிதாக சம்சாரக் கடலைக் கடந்து கரை ஏறட்டும் என்ற திருவுள்ள அவதாரமே அது என விவரிக்கிறார் கிருஷ்ணன் .

    கேசவா,” நான் யுகம் தோறும் அவதரிக்கிறேன்” என்பதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன்

    அர்ஜுனா, நான் ஒவ்வொரு யுகத்திலும் தர்மங்களை விட அதர்மங்கள் அதிகமாகும் போது தேவைக்கேற்ப திரும்பத் திரும்ப  அவதரிக்கிறேன் .

   ஒரு யுகத்தில் ஒரு முறை தான் அவதாரம் நிகழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்கிறார் கிருஷ்ணன் .

    கேசவா, ஆதார செயல்கள் தெய்வீகமானவை என்பதைத் தத்துவரீதியாக  எவ்வாறு உணரலாம் எனக் கேட்கிறான் அர்ஜுனன் .

   அர்ஜுனா, அவதார லீலைகளில்  சுயநலம் இருக்காது. உலகத்தாருக்கு  அருளவே பல அவதாரங்கள் எடுக்கப்படுகிறது .

   ‘தாம் கர்த்தா’ என்ற அபிமானம் இருக்காது. தன்னை அதில் பந்தப்படுத்துவதும்  இல்லை .பயனில் சிறிதும் பற்று இருக்காது.

    ஒவ்வொரு செயலிலும் உலக நன்மை நிறைந்திருக்கும்.ஆண்டவனாக இருந்தபோதும் அனைத்து ஜீவராசிகளுடனும் கர்வமில்லாத தயாள  குணம் இருக்கும் .

    எவ்விதம் வழிபடுவார்களோ., அவ்விதம்  அருள்கிறார் .சம்சாரக் கடலில் இருந்து கரை சேர்ப்பதற்காக  தாமே படகோட்டி ஆகிறார் .

    அகங்காரம், பற்று, ஆசை முதலிய மாசுகள் அறவே இருக்காது.நீதி , தர்மம்,பக்தி முதலியவற்றை பிரசாரம் செய்வதற்காகவே நிகழ்கின்றன .

   இந்த கர்மங்களில் சிறிது கூட சம்பந்தமில்லாமல் இவற்றிற்கு அப்பாற்பட்டு பொய் என உரைக்காமல் பூரணமாக நம்பி நடப்பதே தெய்வீக செயல்கள் என உணர்வதற்கான அடையாளங்கள்.

   இவற்றை அறிந்து கொண்டவர்களுடைய செயல்கள் கூட பரிசுத்தமாகவும், உலகியலுக்கு அப்பாற்பட்டதாகவும்  இருக்கும்.

    கேசவா, இவற்றை தெரிந்து கொண்டு நடந்தால் பிறவியில் இருந்து விடுபட முடியுமா என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .

     அர்ஜுனா ,” அவர் என்னை அடையும் போது” மறுபிறவி கிடையாது .இதுவே சித்தாந்தமாகும்  என்கிறார் கிருஷ்ணன் .

   கேசவா, உயிரோடு இருக்கும் இப்பிறவியிலேயே  அந்தப் பேறு கிடைக்குமா என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .  

   அர்ஜுனா ,உயிரோடு  இருக்கும் இந்தப் பிறவியிலேயே பகவானுடைய பிறப்பும், செயலும் தெய்வீகமானவை என்று முழுமையாக உணர்ந்தவருக்கு  அதே கணம் காட்சி தருகிறேன் .

    அவ்வாறு உணர்ந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது. உடலை விட்டு உயிர் பிரிந்து பிறகு என்னையே அடைவார்கள்.

    விருப்பம், பயம், கோபம், இவை அறவே அற்றவர்கள் வேறெதிலும் நாட்டமில்லாமல் என்னையே நினைத்து மனதாலும்  செயலாலும் ஒன்றியவர்கள் பலரும் ஞானம் என்னும் தவத்தினால் தூயவர்களாகி என்னை அடைகிறார்கள் என்கிறார் கிருஷ்ணன் .

   கேசவா, விருப்பம் பயம், கோபம் அற்றவர்கள் எவ்வாறு  நடந்து கொள்வார்கள் என்பதனை விவரியுங்கள் எனக் கேட்கிறான் அர்ஜுனன் .

    அர்ஜுனா, ஆசைதான் விருப்பம். துயரம் நேருமோ என்று மனதில் உண்டாகும் பதற்றம் தான் பயம். தனக்கு இங்கு விளைவித்தவர் மீதும் நீதிக்கும்,மனப்பாங்கிற்கும் விரோதமாக நடப்பவர் மீது ஏற்படும் கோபம் குரோதமாகும். இவைகள் அற்றுப் போனவர்கள் என்னுடைய தெய்வீகமான பிறப்பையும் செயல்களையும் உண்மையாக அறிந்து கொண்டவர்களுக்கு …

   ..என்னைத் தவிர வேறு எதிலும் அவர்களுக்கு சிறிது கூட ஆசை இருக்காது  எங்கும் நான் இருக்கிறேன் என்ற அனுபவத்தினால் .

   அவர்கள் ஒரு போதும் எதற்காகவும் பயப்பட மாட்டார்கள்,. அவர்களுக்கு யாரால் எது நேர்ந்தாலும் அது என்னுடைய லீலை என்று அறிவார்கள் .

   ஆகவே , எக்காரணம் கொண்டும் அவர்களுடைய உள்ளத்தில் குரோதம் உண்டாகாது .

    இப்படி என்னுடைய  பிறப்பையும், செயல்களையும், பற்றிய உட்பொருளை தெரிந்து கொண்ட பக்தர்களிடம் என்னுடைய அருளினால் எல்லாத் தீய இயல்புகளும் அறவே அற்றுப் போய் விடும் என விவரிக்கிறார் கிருஷ்ணன் .

                                                                      (தொடரும் )

Share.

Leave A Reply