கேசவா! வேதங்களில் உள்ள சந்தங்களில் காயத்ரியில் நான் இருக்கிறேன் என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! எல்லா வேதங்களின் சாரம் என்று கூறுவது காயத்ரி உபாசனையைத்தான். பிரம்மா முதலான தேவர்களும் அந்தி நேரத்தில் காயத்ரியை தியானித்து ஜபிக்கிறார்கள்.
எல்லா வேதங்களிலும் காயத்ரி உபாசனை நித்யம் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதை கைவிடுபவர்களுக்கு வீழ்ச்சி ஏற்படும்.
காயத்ரியை ஜபிக்கின்ற பிறப்பாளன் விரும்பிய லோகத்திற்குச் செல்வான் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும்.
காயத்ரி வேதத்தின் தாய். காயத்ரி பாவங்களை அழிக்க வல்லது. இவ்வுலகிலோ, பரலோகத்திலோ தூய்மைப்படுத்துவதற்கு காயத்ரி மந்திரத்தை விடச் சிறந்தது எதுவுமே கிடையாது.
நரகத்தில் விழ்பவர்களைக் கை தூக்கிக் கரையேற்றக் கூடியது பாவங்களைப் போக்குவதில் காயத்ரியை விட சிறந்தது கிடையாது. பிரணவத்துடனும், மூன்று வியா கிருதிகளுடனும் கூட காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
இதிகாசங்கள், புராணங்கள், சாஸ்திரங்கள் எல்லாவற்றிலும் ஆங்காங்கு காயத்திரியின் பெருமை வெகுவாக நிறைந்து விளங்குகிறது. எனவே, காயத்ரி எனது ரூபமாக விளங்குகிறது என விவரிக்கிறார் கிருஷ்ணன்.
கங்கைக்கு நிகரான தீர்த்தம் இல்லை. விஷ்ணுவுக்கு நிகரான தெய்வம் இல்லை. காயத்ரியை விட ஜபிக்க மந்திரம் இல்லை. இருந்ததும் இல்லை, இருக்கப் போவதுமில்லை என்கிறார்.
நான் வஞ்சகர்களுள் அவர்களது சூதாட்டமாகவும், திறமை படைத்தவர்களுடைய திறமையாகவும் இருக்கிறேன்.
வெற்றி கொள்பவரது வெற்றியாக இருக்கிறேன். தீர்மானம் செய்யும் சக்தி உள்ளவர்களின் தீர்மானமாகவும், சத்வ குணம் படைத்தவர்களிடம் சத்வ குணமாகவும் இருக்கிறேன்.
நான் விருஷ்ணி குலத்தோருள் வாசுதேவனாகவும். அதாவது, உனது நண்பனாகவும் பாண்டவர்களுள் அர்ச்சுனனாகவும். அதாவது நீயாகவும், முனிவர்களுள் வேத வியாசராகவும், கவிஞர்களுள் சுக்ராச்சாரியார் கவியாகவும் இருக்கிறேன்.
அடக்கி ஆளப்பட முடியாத அர்ச்சுனா! நீ தான் பகவான். நான் நானே ஹரிநாராயணன். ஒரு சமயம் நாம் இருவரும் நர நாராயணர்கள் என்ற இரு ரிஷிகளாகத் தோன்றினோம்.
அர்ச்சுனா! நீ என்னைத் தவிர வேறல்ல. நானும் உன்னைத் தவிர வேறல்ல. பரத குலச் செம்மலே, நம்மிடையே வேற்றுமை கிடையாது. இது யாருக்கும் தெரியாது, புரியாது என்கிறார் கிருஷ்ணன்.
மேலும், பகவானின் சுய ரூபத்தையும், வேதம் முதலிய சாஸ்திரங்களின் நுட்பங்களையும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் முனிவர்கள்.
வேதவியாசர் எல்லா வேதங்களையும் நன்கு ஆராய்ந்து அவற்றை வகைப்படுத்தித் தந்தார். மகாபாரதம், புராணங்கள் முதலான பல சாஸ்திரங்களை இயற்றினார்.
என்னுடைய அம்சமான வியாசர் முனிவர் கூட்டத்தில் முக்கியமானவர். நற்பண்புகளை உடைய வியாசர் என் ரூபமே என்றவர்,
கற்றறிந்தவர், மதிநலம் படைத்தவர் கவி ஆவார். சுக்ராச்சாரியர் பிருகு குலத் தலைவர். எல்லாக் கல்விகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்.
சஞ்ஜீவினீ வித்தையை அறிந்தவர். கவிகளுள் முக்கியமானவர். ஆகவே, என் ரூபமாக அவர் விளங்குகிறார் என்றவர் மேலும் கூறுகிறார்.
அடக்குபவர்களின் அடங்கும் சக்தியாக இருக்கிறேன். வெற்றி பெற விரும்புவர்களின் நியாய உணர்வாக இருக்கிறேன்.
மறைத்து வைக்கப்பட வேண்டியவற்றைக் காப்பாற்ற மௌனமாகவும், ஞானிகள் உடைய தத்துவ ஞானமாகவும் நானே தான் இருக்கிறேன்.
அர்ச்சுனா! எல்லா உயிரினங்களும் தோன்றுவதற்கு காரணமான விதையும் நான்தான்.
ஏனெனில், நான் இன்றி எது இருக்கக்கூடுமோ, அத்தகைய இயக்கமும், இயங்காதது மான உயிரினம் எதுவும் இல்லை.
எதிரிகளை வாட்டுபவனே! என்னுடைய தெய்வீகமான விபூதிகளுக்கு, பெருமைகளுக்கு முடிவு இல்லை.
எனது விபூதிகளினுடைய இந்த விரிவும் கூட உனக்காகவே ஓரளவு தான் சுருக்கமாகத் தான் உனக்கு கூறுகிறேன்.
