அந்தணரே! நான் பக்தனுக்கும் கட்டுப்பட்டவன். எனக்கு சுதந்திரம் கிடையாது.

என்னையே முழுமையாக ஆட்கொண்டு பரமகதி என்று சரணடைந்துவிட்ட பரம பக்தர்களான சாதுக்களின் முன்னே என்னுடைய ஆத்மாவையும், லட்சுமியையும் கூட பொருட்டாகக் கொள்ள மாட்டேன்.

என் நிமித்தமாக தன் மனைவி, மக்கள், வீடு, சுற்றம், செல்வம், உயிர், இவ்வுலகப் போகம், பரலோக போகம்  எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு என்னையே ஒரே இலட்சியமாக அடைந்துவிட்ட பக்தர்களை எப்படி நான் கைவிட முடியும்.

கற்புடைய மனைவி தன்னுடைய இணையற்ற பிரியத்தால் தன் கணவரை வசப்படுத்தி விடுவது போல பயன் கருதாது தமது பக்தியினால் என்னை பக்தர்கள் வசப்படுத்தி விடுகிறார்கள்.

அழியக் கூடிய சொர்க்கம், என் உலகில் வாழ்வது, என்னைப் போல உருவம் பெறுவது, என்னிடமே ஒன்றி விடுவது போன்ற மோட்சம் கிடைத்தாலும் அவர்கள் ஏற்க மாட்டார்கள்.

என் பிரியத்துக்கு முன்னே அவை எல்லாம் மிகவும் அற்பமானவை என்று மதிப்பார்கள்.

அந்தணரே! நீர் உண்மைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால்! உமக்கு மங்களம் உண்டாக வேண்டுமானால்,

அந்த மகா பாக்கியவானான
அம்பரீஷசனிடமே செல்லுங்கள். அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள். அப்பொழுதுதான் உமக்கு அமைதி கிடைக்கும் என்று கூறினார் கிருஷ்ணன்.

பகவானுடைய ஆணையை ஏற்ற துர்வாசர் மன்னனைப் பார்க்க திரும்பினார்.

துர்வாசரைத் துரத்திக் கொண்டு சக்கரம் சென்றது முதல் அரசர் துர்வாசருக்கு ஏற்பட்ட துன்பத்தை நினைத்து மிகவும் வருந்தினார் அம்பரீஷன்.

  “ஐயோ! பாவம் அந்தணர் பசியோடு வந்தாரே! அவருக்கு என் பொருட்டு மரண பயமே வந்துவிட்டதே! எங்கெல்லாமோ ஓடும்படி ஆகிவிட்டதே, இந்த நிலையில் நான் எப்படி உண்ண முடியும்? “ என்று எண்ணினார்.

அது முதல் அவர் உண்பதைத் துறந்தார். நீர் அருந்தியே உயிரை காத்தார். துர்வாசர் திரும்பி வருவதற்கு முழுமையாக ஓராண்டு ஆகிவிட்டது அம்பரீஷனின் விரதம் குலையவில்லை.

துர்வாசர் ஓடி வந்து அரசனின் கால்களைப் பிடித்துக் கொண்டார்.

Share.

Leave A Reply