கேசவா! மற்ற தெய்வங்களை பூஜிப்பது என்பதையும், அது பகவானுடைய விதிமுறை அற்ற பூஜையாகும் என்பது பற்றி விவரியுகள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! இந்த ஆசை நிறைவேறுவதற்காக இந்த தெய்வத்தை வணங்கலாம் என்று சாஸ்திரங்களில் முறை வகுக்கப்பட்டு இருக்கிறது.
அந்த தெய்வங்களை அந்த முறைப்படி வணங்குவது தான் மற்ற தெய்வங்களை வணங்குவதாகும்.
எல்லா தெய்வங்களுமே பகவானுடைய அங்கங்கள் தான். பகவானே எல்லா தெய்வங்களுக்கும் எஜமானன். பகவான் தான் அந்தந்த தெய்வங்களின் ரூபத்தில் வெளிப்படுகிறார்.
இந்த உண்மை அறியாது அந்த தெய்வங்கள் பகவானிடம் இருந்து வேறுபட்டவை என நினைத்து பயனில் பற்றுடன் அந்த தெய்வங்களை வணங்குவது தான் பகவானுக்கு செய்யும் விதிமுறை அற்ற பூஜையாகும் என விவரிக்கிறார் கிருஷ்ணன்.
எடுத்துக்காட்டாக
ரத்திதேவ மகாராஜன் வரலாற்றை கூறுகிறேன் கேள் அர்ச்சுனா…
ரத்திதேவ மகாராஜன் தம்மிடம் வந்தவர்களையும், பகவானுடைய சுயரூபம் என்று மதித்து, தம் பசியைப் பொறுத்துக் கொண்டு, அன்னதானம் செய்து, பற்றின்றி பகவானை வணங்கி வந்தான்.
அதன் பயனாக பகவானை அடைந்து விட்டான். அது போல், எந்த மனிதனும் தெய்வம் குரு, தாய், தந்தை, அதிதி, தேடி வந்து உதவி கேட்பவர் இவர்களை பகவானுடைய சுயரூபம் என்று நினைத்து அவர்களுக்கு சேவை செய்தால் அவர்களுக்குச் செய்த சேவை பகவானுக்குச் செய்த பூஜையாகும். அதன் பயனாக பகவானை அடையலாம் என விவரிக்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா!எல்லா யாகங்களையும் ஏற்றுக் கொள்பவனும், தேவர்களை அடக்கி ஆளும் மகேஸ்வரனும் நானே.
ஆனால்,அவர்கள் பரமாத்மாவான என்னை இந்த தத்துவ ரீதியில் அறிவதில்லை. ஆகையால் வீழ்ச்சி அடைகிறார்கள்.
பூதங்களை வழிபடுபவர்கள் பூதங்களை அடைகிறார்கள். ஆனால், என்னை வழிபடுபவர்கள் என்னையே அடைகிறார்கள் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! எவன் பக்தியோடு எனக்கு இலை, மலர், பழம், நீர் முதலியவற்றை அர்ப்பணம் செய்கிறானோ, தூய பக்தியுடன் பயனை எதிர்பார்க்காமல்…
பக்தி நிறைந்த அந்த பக்தனுடைய பக்தி உடன் அர்ப்பணம் செய்யப்பட்ட காணிக்கையான இலை,மலர்களை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! எவருடைய உள்ளம் பரிசுத்தமானதோ அவன் எனக்குப் பிரியமானவன்.
அர்ப்பணம் செய்கிறவனுடைய மனோபாவம் சுத்தமாக இல்லாவிட்டால் நல்ல ஆசாரம் உள்ளவர் ஆனாலும் எவ்வளவு உயர்ந்த மதிப்புள்ள பொருளை எனக்கு அர்ப்பணம் செய்தாலும் அதை நான் ஏற்க மாட்டேன்.
துரியோதனன் அழைப்பை ஏற்றுக் கொள்ளாத நான் மனோபாவம் சுத்தமாக இருந்த விதுரர் வீட்டிற்குச் சென்று அன்புடன் உணவு அருந்தினேன் என்கிறார் கிருஷ்ணன்.
சுதாமா (குசேலர்) கொடுத்த அவலை மிகவும் விருப்பத்துடன் ஏற்று சுவைத்து உண்டேன்.
திரௌபதியின் பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த கீரையை உண்டேன். உலகமே திருப்தி அடைந்தது.
கஜேந்திரன் அர்ப்பணம் செய்த பூவை, அளித்த கனிகளை ஏற்றுக் கொண்டேன்.
சபரியின் குடிசைக்குச் சென்று அவள் அளித்த கனிகளை ஏற்றுக் கொண்டேன். ரந்திதேவன் அளித்த நீரையும் ஏற்றுக் கொண்டேன். கடமையைச் செய்தவனாக அவனை ஆக்கினேன்.
இவ்விதம் ஒவ்வொரு பக்தனும் அன்புடன் அர்ப்பணம் செய்வதையும் நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன் என்கிறார் கிருஷ்ணன்.
