கேசவா! பவித்ரம் ஓம்காரம் என்று கூறிக் கொள்வதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! தானே பரிசுத்தமாக இருந்து பிறருடன் பாவங்களைக் களைந்து அவர்களையும் பரிசுத்தப்படுத்துபவன் ‘பவித்ரன்’ ஆவான்.
பவித்ரமானவனுடைய தரிசனம், பேச்சு, நினைவு இவற்றால் மனிதன் புனிதன் ஆகிறான். மேலும், ஜபம், தவம், விரதம், தீர்த்தம் போன்ற தூய்மை செய்யக்கூடிய பொருட்கள் அனைத்தும் பரிசுத்தப்படுத்தும் சக்தி என்னுடையது தான்.
‘ஓம்’ பகவானுடைய பெயர் பிரணவம் என்பது பிரம்மம். இங்கு பெயரும், பெயருக்கு உரியவரும் நானே! எனவே ‘ஓம்காரம்’ என்று கூறிக் கொள்கிறேன் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! அடைய தக்க பரமபதம், காத்து யாசிப்பவன், எல்லோரையும் ஆள்பவன். நல்லன, தீயன ஆகியவற்றைப் பார்ப்பவன் அனைத்திற்கும் இருப்பிடமும் நானே! புகழிடமும் நானே!
கைமாறு எதிர்பார்க்காமல் உதவி புரியும் நண்பன் நானே! அகில உலகமும் தோன்றுவதற்கும், ஒடுங்குவதற்கும் காரணம் ஆன நிலையாசைத் தாங்கு பவனும் நானே!
நிதானம், பிரளய காலத்தில் அனைத்து உயிரினங்களும் நுண்ணிய வடிவில் அடைக்கலம் அடையும் இடமும், அழிவில்லாத விதை ஆகிய அனைத்தும் நானே என்கிறார் கிருஷ்ணன்.
கேசவா புகழ் அடையும் இடம் என்று சொல்வதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்
அர்ச்சுனா!” நான் உன்னை சார்ந்தவன்” என்று ஒரு முறையாவது கூறி என்னைச் சரணடைந்து என்னிடம் இருந்து அபயம் வேண்டுபவனுக்கு எல்லா பிராணிகளிடம் இருந்தும் அபயம் அளிப்பேன்.
இது எனது விரதம். இதுவே, என்னை சரண் அடைந்து புகழ் அடையும் இடமாகும் என விவரிக்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! சூரியனுடைய வடிவில் வெப்பம் அளிக்கிறேன். மழையை உள்ளிழுத்து தடுத்து நிறுத்துகிறேன், பொழியவும் செய்கிறேன்.
இரவாப் பெருநிலையும் படைத்தவற்றை அழிக்கும் மகாகாலானும் நானே! அழியாததும், அழியக் கூடியதும் எல்லாமே நான் தான் என்னுடைய சுயரூபம் நான் தான் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! நாம் மூன்று வேதங்களிலும் வர்ணிக்கப் பட்டுள்ள முறைகளின் படி பயனை நல்கக் கூடிய கர்மங்களைச் செய்து யாகத்தில் சேமம் என்ற ரசத்தை அருந்தி பாவங்கள் அகன்று தூய்மை பெற்றவர்கள்….
என்னை யாகங்களால் உபாசித்து சொற்கலோகம் அடைவதை வேண்டுகிறார்கள். அவர்கள் புண்ணியத்தின் பயன் வடிவான அமரர் உலகை அடைந்து தெய்வீகமான, தேவதைகள் அனுபவிக்கும் போகங்களை அனுபவிக்கிறார்கள்.
அவர்கள் அந்தப் பரந்து விரிந்துள்ள சொர்கலோக சுகத்தை அனுபவித்துவிட்டு புண்ணியம் தீர்ந்து போனவுடன் இறப்புக்கு உரியதான மண்ணுலகை அடைகிறார்கள்.
இவ்வாறு சொர்க்கத்தை அடைவதற்கு சாதனமானவையும் மூன்று வேதங்களில் கூறப்பட்டவையும் பயனை நல்கக் கூடியவையும் ஆன கர்மங்களைச் சார்ந்து இருக்கின்ற போகத்தில் பற்று உள்ளவர்கள்…
திரும்பத் திரும்பப் பிறந்து இறத்தலை அடைகிறார்கள். அதாவது, புண்ணியத்தினால் சொர்க்கத்தையும், புண்ணியம் தீர்ந்து போவதால் மறுபடியும் மண்ணுலகையும் அடைகிறார்கள்.
வேறு எதிலும் நாட்டம் இல்லாத பகவான் ஒருவரிடமே அதிகப் பிரியம் கொண்டவர்கள் ஆன எந்த பக்தர்கள் பரமேஸ்வரனான என்னை தியானித்துக் கொண்டு எவ்விதப் பயனையும் எதிர்பார்க்காமல் உபவாசித்துக் கொண்டு…
இடைவிடாது என்னையே நினைத்துக் கொண்டும் இருக்கின்ற அவர்களுடைய யோகா சேமத்தை நானே அடையச் செய்கிறேன் என்கிறார் கிருஷ்ணன்.
