கேசவா! முன்பு எல்லா பூதங்களும் தம்மிடம் உள்ளன என்று கூறினீர்கள். இப்போது தம்மிடம் இல்லை என்கிறீர்கள். முரண்பட்ட கருத்தை கூறுவதன் நோக்கம் என்ன என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதன் மூலம் எனது ஈசுவரத் தன்மையான யோக சக்தியை அறிந்து கொள்.
மனிதனுடைய நோக்கில் உலகம் என்று ஒன்று இருக்கும் வரை அவை எல்லாம் என்னிடமே உள்ளன. என்னைத் தவிர இவ்வுலகிற்கு வேற ஆதாரம் இல்லை.
ஆனால், மனிதனுக்கு என்னுடைய தரிசனம் கிடைத்து விடும் போது அவன் நோக்கில் என்னைத் தவிர வேறு ஒன்றுமே கிடையாது. அப்பொழுது என்னிடம் இந்த உலகம் இல்லை என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! எங்கும் வீசுகின்ற பெருங்காற்று எவ்வாறு ஆகாயத்தில் எப்பொழுதும் உள்ளதோ, அவ்வாறே எல்லா உயிரினங்களும் என் சங்கல்பத்தில் உண்டாவதால் என்னிடம் உள்ளன என்று அறிந்து கொள் என்கிறார்.
கேசவா! இங்கு வாயு எங்கு செல்லக்கூடியது. பெரியது என்று கூறுவதன் கருத்தை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! வாயு எங்கும் சஞ்சரிப்பது போல் பிராணிகளும் பல பிறவிகளிலும் பிறந்து சுழல்கின்றன. எப்படி வாயு பெரிதாக எங்கும் பரவி இருக்கிறதோ, அதுபோல பிராணி வர்க்கமும் மிகவும் விரிந்தது என்ற பொருள் பட விவரிக்கிறார் கிருஷ்ணன்.
கேசவா! எப்பொழுதும் வாயு ஆகாயத்தில் இருப்பது என்ற கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! வாயு ஆகாயத்திலேயே உண்டாவது, அதிலேயே நிலைபெற்று, அதிலேயே லயமடைவது என்பதைக் காட்டுவதற்காகத்தான் எப்பொழுதும் என்கிறார்.
கேசவா!வாயு ஆகாயத்தில் உள்ளது போல எல்லா பிராணிகளும் என்னிடம் உள்ளன. என்பதன் கருத்தை விவரியுங்கள் என்கிறார் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! ஆகாயத்தைப் போலவே பாகவானும் ஒரே சீரானவர். உருவம் அற்றவர், செயல் புரியாதவர், முடிவற்றவர், ஒட்டாதவர், விகாரமற்றவர், வாயுவைப் போல் எல்லாச் சராசரங்களும் பகவானிடம் உண்டாகிய நிலைபெற்று லயமடைவான் என்கிறார்.
மேலும், பிராணி வர்க்கங்களும் எப்பொழுதும் பகவானிடமே நிலைபெறுகின்றன. ஆயினும் பகவான் அவற்றிற்கு முற்றிலும் அப்பாற்பட்டவன். அவற்றால் பகவானுக்கு எப்பொழுதும் எந்தவிதமான விகாரமும் கிடையாது.
அர்ச்சுனா! எல்லா உயிரினங்களும் கல்பங்களின் முடிவில் என்னுடைய பிரகிருதியை அடைகின்றன.
பிரகிருதியில் தன்மயமாகி விடுகின்றன. அவற்றைக் கல்பத்தின் ஆரம்பத்தில் நான் திரும்பவும் தோன்றச் செய்கிறேன் என்கிறார் கிருஷ்ணன்.
கேசவா! கல்பட்சயம் என்பதன் காலத்தை விவரியுங்கள் என்கிறார் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! பிரம்மாவின் ஒரு பகல்’ கல்பம்’ என்று சொல்லப்படுகிறது. அதே அளவு நீண்ட காலம் கொண்டது ஓர் இரவு.
இந்தப் பகல், இரவு கணக்குப்படி பிரம்மாவின் நூறாண்டுகள் நிறைவு பெற்று அவர் ஆயுள், அந்த கால கணக்கை குறிப்பிடுகிறது கல்பட்சயம் என்ற சொல்.
கல்பங்களின் முடிவு மகா பிரளயம் என்று அழைக்கப்படுகிறது என்று விவரிக்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! இயல்பின் ஆற்றலினால் தன்
வசமிழந்த இந்த அனைத்து உயிர் தொகுதிகளையும் திரும்பத் திரும்ப என்னுடைய பிரகிருதியை ஏற்றுக்கொண்டு அவரவர் வினைக்கேற்றவாறு படைக்கிறேன்.
அந்தக் கர்மங்களில்
பற்றில்லாமலும், ஒதுங்கியவனைப் போன்றும் இருக்கின்ற பரமாத்மாவான என்னை அந்தச் செயல்கள் பந்தப் படுத்துவதில்லை என்கிறார் கிருஷ்ணன்.
