கேசவா! நம்பிக்கைஅற்ற மனிதர்கள் என்னை அடையாமல் மரண வடிவான சம்சார சக்கரத்தில் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்ற கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! 84 லட்சம் பிறவிகளில் மாறி மாறிப் பிறந்து உழலும் ஜீவனுக்கு எப்பொழுதாவது பகவானுடைய கிருபையால் இந்த சம்சார சக்கரச் சுழலில் இருந்து விடுபட்டு பகவானை அடைவதற்காக மானிடப் பிறவி கிடைக்கிறது.
பகவானை அடையச் செய்யும் தகுதி உள்ள எளிதில் கிடைக்காத இந்த மானிடப் பிறவியைப் பெற்றும் கூட
பகவானுடைய வசனங்களில் நம்பிக்கை இல்லாத காரணத்தால்….
பஜனை, தியானம் முதலிய சாதனைகளைப் புரியாததால் பகவானை அடையாமல், பிறப்பு, இறப்பு சுழலான இந்த சம்சார சக்கரத்தில் சிக்கிக்கொண்டு முன் போலவே உழல்கிறார்கள் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! உருவமற்ற பரமாத்மாவான என்னால் இந்த அனைத்து உலகமும் பனிக்கட்டியில் நீர் போல் நிறைந்து உள்ளது. எல்லா உயிரினங்களும் என்னுடைய சங்கல்பத்தின் பலத்தினால் நிலை பெற்றுள்ளன.
ஆனால், உண்மையில் நான் அவற்றில் நிலைபெற்று இருக்கவில்லை.
கேசவா! நான் அவற்றில் இல்லை என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! கனவில் கனவு காண்பவன். காணப்படும் பொருட்களுக்கும், ஜீவர்களுக்கும் அப்பாற்பட்ட தனியாக இருப்பது போல அகில உலகமும் பகவானுடைய ஒரு பகுதியான படியால் பகவான் அவற்றில் நிறைந்து இருந்தாலும், அதன் எல்லைக்குள் அடங்கியவர் அல்லர்.
கனவு காண்பவன், கனவில் ஒட்டாதவன், கனவிற்கு முன்பும், கனவு காணும் நேரத்திலும், கனவு கலைந்த பிறகும் உள்ளவன்.
அதுபோல, இந்த உலகிற்கு ஆதாரமானாலும், அதற்கு அப்பாற்பட்டவர் ஆனாலும், உலகம் அவரே ஆனபடியாலும் அவர் அதற்குள் இல்லை.
உலகத்தில் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்து இருந்தாலும், உண்மையில் அவற்றில் இல்லை. தாமே தம் மகிமையில் இருக்கிறார் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! அண்ட சராசரங்கள் அனைத்தும் என்னுள் இருப்பவை அல்ல. என்னுடைய ஈஸ்வரத் தன்மை உடைய யோக சக்தியைப் பார் அனைத்து உயிரினங்களையும் தாங்குகின்றவனும், உண்டாக்கு கின்றவனுமாக இருந்த போதும் என்னுடைய ஆத்மா உண்மையில் உயிரினங்களில் நிலைபெற்று இருப்பதில்லை என்கிறார் கிருஷ்ணன்.
