கேசவா! மார்க்கங்களுக்கு “சுக்ல” “கிருஷ்ண” என்று பெயர் வைத்திருப்பதன் கருத்தை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! பரமாத்மாவினுடைய பரம
பதத்திற்குச் செல்லும் மார்க்கம் ஒளிமயமானது திவ்யமானது. அதை ஆளும் தேவதைகளும் ஒளிமயமானவர்கள்.

அதில் செல்லும் சாதகர்களுடைய உள்ளங்களிலும், எப்பொழுதும் ஒளிமயமான ஞான ஒளி வீசிக் கொண்டிருக்கும் ஆகவே, அந்த மார்க்கம் “சுக்லம்” ஒளிமயமானதாகும். 

நரக லோகங்கள் இருள்மயமானது. அதில் வருகின்ற தேவதைகளும் இருண்ட சுயரூபம் கொண்டவர்கள். அதில் செல்பவர்களும் அஞ்ஞான இருள் சூழ்ந்தவர்கள்.
ஆகவே,அதற்கு ‘கிருஷ்ணம்’ இருள் மயமானது என்று பெயராகும்.

கிருஷ்ண மார்க்கத்தில் செல்லும் மனிதன் எந்த உலகங்களுக்குச் சென்றாலும் எல்லாம் அழியக் கூடியவை. ஆகவே, இந்த மார்க்கமாகச் செல்கின்றவன் மனித உலகிற்குத் திரும்பத்தான் வேண்டும் என்கிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! இந்த இரண்டு மார்க்கங்களையும்
தத்வரீதியாக அறிந்த எந்த யோகியும் மோகம் அடைவதில்லை. அவன் பற்றற்ற நிலையிலேயே சாதனையைச் செய்வான்.

ஆசையில் சிக்கிக் கொள்ள மாட்டான். ஆகையால், அர்ச்சுனா! எல்லா காலங்களிலும் சமபுத்தி என்னும் யோகத்தோடு கூடியவனாக ஆகிவிடு எப்பொழுதும் என்னை அடைவதற்காகவே சாதனைகளைச் செய்பவனாக இரு என்கிறார் கிருஷ்ணன்.

கேசவா! தத்வரீதியாக அறிந்து கொள் என்பதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! இரண்டு மார்க்கத்தையும் இதை குறிக்கின்றன. பயனில் பற்றுடன் நல்ல கர்மங்களை செய்து, தெய்வத்தை உபாசிக்கும்  புண்ணியாத் மாக்கள் கிருஷ்ண மார்க்கத்தில் சென்று தம் கர்ம வினையின்படி தேவ லோகங்களைப் போய் சேருகிறார்கள்.

தம் புண்ணியங்கள் எஞ்சி இல்லாமல் தீர்ந்து போனதும் திரும்பி விடுகிறார்கள்.

கர்ம உபாசனைகளைச் செய்பவர்களான கர்மயோகிகளும், தான் கர்த்தா என்ற அபிமானம் இல்லாத சாங்கிய யோகிகளும் சுக்ல மார்க்கத்தின் வழியே பகவானுடைய பரமபதத்தை அடைவார்கள்.

அங்கிருந்து அவர்கள் என்றும் திரும்பி வர வேண்டியது இல்லை. இந்த விசயத்தை சிரத்தையோடு நன்றாகத் தெரிந்து கொள்வது தான் இந்த இரண்டையும் தத்துவ ரீதியாக அறிந்து கொள்வது ஆகும் என்கிறார் கிருஷ்ணன்.  

Share.

Leave A Reply