கேசவா! பக்தி இல்லாதவனுக்கு ஒரு போதும் இதை உபதேசம் செய்யக்கூடாது என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா ! நம்பிக்கையும், பிரியமும், மதிப்பும் பரமாத்மாவிடம் இல்லாமல் தன்னையே பெரியவனாக நினைத்துக் கொண்டே நாஸ்திகன் இக்கீதா உபதேசத்தைக் கேட்டால் பக்தி இன்மையால் இக்கருத்துக்கள் அவனுக்குப் புரியாத காரணத்தால் மனதில் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்கிறார்.
கேசவா! என்னிடம் குறை காண்பவனுக்கு ஒரு போதும் சொல்லக்கூடாது என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
கீதா சாஸ்திரத்தைக் கேட்க விருப்பம் இல்லாதவர்க்கு உபதேசத்தைக் கூறக்கூடாது.
ஏனெனில், உலகம் உய்விப்பதற்காக சகுண சுயரூபமாக வெளிப்பட்டுள்ள பரமாத்வான என்னிடம் யார் குறை காண்கிறார்களோ, என்னுடைய குணங்களைக் குற்றமாகக் கருதி என்னை நிந்திக்கிறார்களோ அத்தகையவருக்கு எந்த நிலையிலும் கீதையை உபதேசிக்க கூடாது.
“என்னுடைய குணங்களிலும் பிரபாவங்களிலும், ஆளுமையிலும் அவர்களுக்கு ஏற்படும் பொறாமையின் காரணமாக இவ்வுபதேசத்தைக் கேட்டு முன்னிலும் அதிகமாக என்னை அவமதித்துப் பாவத்தைச் சேர்த்துக் கொள்வார்கள்” என்று எச்சரிக்கிறார் கிருஷ்ணர்.
கேசவா! இந்த நான்கு குற்றங்களும் சேர்ந்தாற் போல் இருப்பவர் களுக்குத்தான் இதை சொல்லக்கூடாதா? அல்லது ஒன்று இரண்டு மூன்று குற்றம் இருந்தாலும் கூடச் சொல்லக்கூடாதா? என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! இந்த நான்கு குறைகளில் ஒன்று கூட இல்லாதவர்தாம் இந்த உபதேசம் பெற முற்றிலும் தகுதி பெற்றவர் ஆவார். இவரைத் தவிர சுயதர்மத்தை கடைபிடிப்பதில் சற்றுக் குறை இருந்தாலும் மற்ற மூன்று குறைகள் இல்லாவிட்டாலும் அவருக்கும் இதைக் கேட்கத் தகுதி உண்டு.
சுயதர்மம் என்ற தவம் செய்யாவிட்டாலும், பகவானிடம் பூரண பக்தி இல்லாவிட்டாலும், கீதையைக் கேட்க வேண்டும் என்று விருப்பம் இருந்து விட்டால் அவர் ஓரளவு தகுதி பெற்றவர் தான்.
ஆனால், பகவானிடமே குற்றம், குறை காண்பவனுக்கும், அவரை இகழ் பவனுக்கும் கீதையைக் கேட்க சற்றும் தகுதி கிடையாது. அவனுக்கு ஒருபோதும் சொல்லக்கூடாது.
அர்ச்சுனா! எந்த மனிதன் என்னிடம் உயர்ந்த பிரியமான பக்தியைச் செய்து இந்த உயர்ந்த ரகசியமான கீதா சாஸ்திரத்தை என்னுடைய பக்தர்களுக்குச் சொல்லுவானோ அவன் என்னையே அடைகிறான். இதில் சந்தேகம் இல்லை என்கிறார்.