அர்ச்சுனா! சன்யாசம், தியாகம் இவை இரண்டிலும் முதலில் தியாகத்தைப் பற்றி என்னுடைய கொள்கையை கேள். தியாகம் சாத்வீக, ராஜச, தாமசம் என்ற பிரிவுகளோடு மூன்று விதமாகக் கூறப்பட்டுள்ளது.
வேள்வி, தானம், தவம் ஆகிய கர்மங்கள் துறக்கத் தக்கனவல்ல. அவை கட்டாயம் செய்யப்பட வேண்டியவை தான். ஏனெனில், வேள்வி, தானம், தவம் இம்மூன்றும் அறிவுடையவர்களைப் பரிசுத்தப்படுத்தக் கூடியவை ஆகும்.
எனவே, வேள்வி, தானம், தவம் இம்மூன்று கர்மங்களும். மேலும், செய்ய வேண்டிய கடமைகளும், பற்றையும், பயன்களையும் தியாகம் செய்து கட்டாயமாகச் செய்யப்பட வேண்டியன என்பது என்னுடைய தீர்மானிக்கப்பட்ட உயர்ந்த கொள்கை யாகும்.
விதிக்கப்பட்ட கர்மத்தைச் செய்யாமல் விடுதல் தகாது. ஆகையால் அறியாமையினால் அதை தியாகம் செய்தல் தாமச தியாகம் என்று சொல்லப்படும்.
தாமச குணம் மனிதர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் ஆகும். மனிதனை பிறவியில் இருந்து விடுவிக்காது, மாறாகப் பாவத்திற்குக் காரணமாவதால் வீழ்ச்சியைத் தரும்.
எது செய்ய வேண்டிய கர்மமோ அதைத் துன்பம் என்றே நினைத்து, உடல் வருத்துமே என்ற பயத்தினால் ஒருவன் செய்யாமல் விடுவானே ஆனால் அவன் ராஜச தியாகத்தைச் செய்து தியாகத்திற்கு உரிய பயனை அடைய மாட்டான்.
அதாவது, உடல், மனம் புலன்களில் அவனுக்கு மமகாரமும், பற்றும் உள்ள வரையில் கர்ம பந்தத்தில் இருந்து விடுதலை கிடைக்க விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றாமல் விட்ட பாவத்தையும் அடைவான் என்கிறார்.
சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட எந்தக் கர்மம் கட்டாயம் செய்யப்படத்தான் வேண்டும் என்ற கருதிப் பற்றையும், பயனையும் விடுத்துச் செய்யப் படுகிறதோ அதுவே, சாத்விகமான தியாகம் என்று மதிக்கப்படுகிறது.
மேலும், எந்த மனிதன் நன்மை பயக்காத கர்மத்தை வெறுக்காமல், நன்மை தரக்கூடிய கருமத்தில் பற்றும் கொள்ளாமல் இருக்கும் சுத்தமான சத்வ குணம் நிறைந்தவன் தான் சந்தேகம் நீங்கப் பெற்றவனும், அறிஞனும், உண்மையான தியாகியும் ஆவான்.
ஏனெனில், உடல் பெற்ற மனிதன் யாராலும் முற்றிலும் கர்மங்கள் அனைத்தையும் தியாகம் செய்வது சாத்தியமன்று.
ஆகையால், எவன் கர்மத்தின் பயனைத் துறக்கிறானோ, அவனே தியாகம் செய்தவன் என்று சொல்லப்படுகிறான்.