கேசவா! சிற்றின்ப போகங்களுக்காகவே நீதிக்குப் புறம்பான முறைகளில் செல்வம் சேர்க்கிறார்கள் என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! சிற்றின்பங்களை நுகர வேண்டும் என்பதற்காகக் காமத்திற்கும், கோபத்திற்கும் ஆட்பட்டு திருட்டு, புரட்டு, கொள்ளை, பொய், கபடம், வஞ்சனை, பகட்டு, அடிதடி, நயவஞ்சகம், சூதாட்டம், ஏமாற்று வேலைகள்.
விஷம் வைப்பது, பொய் வழக்குத் தொடுப்பது, அச்சுறுத்துவது போன்ற நெறிமுறைகளுக்குப் புறம்பான முறைகள் மூலம் பிறருடைய செல்வத்தைக் கவர்வது தான் சுகபோகத்திற்காக நீதிக்குப் புறம்பான முறையில் செல்வம் சேர்ப்பதாகும் என விவரிக்கிறார் கிருஷ்ணன்.
மேலும், இவர்கள் எல்லாம் தன்னால் தான் நடக்கிறது என எண்ணுவார்கள். அதனால், என்னால் இன்று இது அடையப்பட்டது மேலும் இந்த விருப்பத்தையும் பூர்த்தி செய்து கொள்வேன்.
எனக்கு இவ்வளவு செல்வம் உள்ளது. மேலும், இவ்வளவு கிடைக்கப் போகிறது என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் விரும்பிய இந்தப் பொருளை நானாகவே என் சொந்த முயற்சிகளினால் அடைந்து விட்டேன். அடுத்து மனம் விரும்புகிற மற்றொரு பொருளையும் என் முயற்சியினால் அடைந்தே தீருவேன்.
என்னிடம் இவ்வளவு செல்வம், அதிகாரமும் சேர்ந்து விட்டது. இனிமேலும் இவ்வளவு சேர்ந்து விடும். என்றெல்லாம் மேலும்… மேலும் திட்டம் தீட்டுவார்கள் என்கிறார்.
இந்தப் பகைவன் என்னால் கொல்லப்பட்டான். மேலும், மற்றவர்களையும் நான் கொல்வேன். நானே ஈஸ்வரன், நானே செல்வ சுகபோகங்களை அனுபவிப்பவன், எல்லா சித்திகளையும் பெற்றவன் வலிமை மிக்கவன், சுகம் உடையவன் என தவறாக நினைத்து வாழ்வான்.
சிற்றின்பமே வாழ்க்கையின் குறிக்கோள் என்று நினைக்கும் அசுரத் தன்மை படைத்தவர்கள் காமத்திற்கும், கோபத்திற்கும் ஆட்பட்டவர்கள் ஈஸ்வரன், தர்மம்,கர்மபலன் இவற்றில் சிறிது கூட நம்பிக்கை அற்றவர்கள்.
அகங்கார மதம் பிடித்தவர்கள். உலகில் என் வழியில் குறுக்கே நிற்க எவருக்கு இயலும்?என்னுடன் பகைத்துக் கொண்டு எவன் உயிர் வாழ முடியும் என நினைப்பார்கள்.
உலகில் உள்ள சுகங்கள் என் காலடியில் காத்திருக்கின்றன. காத்துக் கொண்டு இருக்கும் என்ற ரீதியில் அமைந்த ஆணவம் நிறைந்தவர்களின் பேச்சைக் குறிப்பிடுகிறார் கிருஷ்ணன்.
நான் செல்வந்தன், பெரிய குடும்பத்தை உடையவன், எனக்கு நிகரானவன் வேறு எவன் இருக்கிறான்?
யாகம், தானம் செய்து இன்பத்தில் திளைக்கப் போகிறேன் என்று அஞ்ஞானத்தினால் மயக்கமுற்று பலவிதமாகத் திரிகின்ற மனம் உடையவர்களும் அசுர குணம் உடையவர்கள். இவர்கள் வலையில் சிக்கிக் கொண்ட மீன்களைப் போல மோகம் என்ற வலையில் வீழ்ந்தவர்கள் இதில் இருந்து வெளியே வர முடியாமல் இருப்பார்கள்.