கேசவா!அஞ்ஞானத்தினால் பொய்யான கருத்துக்களை ஏற்றுக் கொள்வது என்பதன் விளக்கத்தை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா!அஞ்ஞானத்திற்கு ஆட்பட்டு சாஸ்திரங்களுக்கு விரோதமான முடிவுகளைக் கற்பனை செய்து கொண்டு அவற்றைப் பிடிவாதமாக ஏற்றுக் கொள்வது அஞ்ஞானம் என்று விவரிக்கிறார்.

இவர்கள் உணவு,நடையுடை, பாவனை, பழக்கவழக்கம், கொடுக்கல், வாங்கல், தொழில், வாணிகம் இவை அனைத்துமே சாஸ்திர முறை மீறி தூய்மையற்ற செயல்களைச் செய்வார்கள் என விவரிக்கிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! மரண காலம் வரை தொடர்கின்ற எண்ணற்ற கவலைகளைப் பற்றிக் கொண்டு போகங்கள்  அனுபவிப்பதையே நாட்டமாக கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

போகங்களை நுகர்வதும், உலகியல் பொருட்களைச் சேர்ப்பதும், அவற்றை அனுபவிப்பதும், வாழ்க்கையின் குறிக்கோள் என அதிலேயே ஆழ்ந்து விடுவார்கள்.

சுகம் என்பது பேகங்களை அனுபவிப்பது தான் என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள் என்கிறார் கிருஷ்ணன்.

ஆசையாகிய நூற்றுக் கணக்கான கயிறுகளால் பிணைக்கப்பட்டவர்கள்
ஆக ஆசையையும், சினத்தையுமே பற்றுக் கோடாகக் கொண்டு சிற்றின்ப போகங்களை அனுபவிப்பதற்காக நீதிக்குப் புறம்பான முறைகளில் செல்வம் முதலியவற்றை திரட்டுவதிலேயே முயற்சி செய்வார்கள்.

கேசவா!’ஆசைகளாகிய நூற்றுக் கணக்கான கயிறுகளால் பிணைக்கப் பட்டு’ என்பதன் பொருளை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! அசுரத்தன்மை படைத்தவர்களின் மனதில் சிற்றின்ப போகங்களைப் பற்றி பலவித கற்பனைகள் தோன்றுகின்றன.
அக்கற்பனைகளில் எழுந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் பற்பல ஆசைகளில் ஈடுபடுவார்கள்.

அவர்கள் மனம் ஒரு  நேரம் ஏதோ ஒரு பொருளிலும், மறு நேரம் வேறு ஒன்றிலும் இழுக்கப்படுகிறது இப்படி ஆசைத் தளைகள் பல இறுக்கிக் கொள்வதால் அவர்கள் அவற்றிலிருந்து விடுபடுவதில்லை. அதனால்,அவர்கள் ஆசைக் கயிறுகளால் பிணைக்கப்பட்டுக் கிடக்கிறார்கள் என்கிறார் கிருஷ்ணன்.

கேசவா! காம, குரோத செயல்களைப் பற்றி கூறுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பகவானையோ, மற்ற தெய்வங்களையோ, நாடுவது இல்லை. நல்ல கர்மத்தையோ,நல்ல எண்ணத்தையோ செய்வதும் இல்லை.

காமத்தையும், குரோதத்தையும் மட்டும் பற்றிக் கொள்கிறார்கள் இதைத்தான் காமத்திற்கும், குரோதத்திற்கும் ஆட்பட்டவர்கள் என்கிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply