“கேசவா ,ஞானியான மகாபுருஷர் எந்த ஒரு கர்மமும் செய்ய மாட்டார்களா ,என்பதை விவரியுங்கள்” எனக் கேட்கிறான் அர்ஜுனன் .
அர்ஜுனா ,ஞானிக்கு மனத்துடன் புலன்களுடன் தொடர்பு அற்றுப் போய் விடும்.ஆகவே உண்மையில் அவர் எதுவும் செய்வதில்லை .
உலகத்தார் பார்வயில் அவருடைய மனம், புத்தி, புலன்கள் முன் பழக்கத்தின் பிராப்தத்தின் சாஸ்திர முறைப்படியான கர்மங்களைச் செய்து  கொண்டிருக்கும். இத்தகைய கர்மங்களில் மமகாரமோ, அபிமானமோ, பற்றுதலோ, ஆசையோ அவருக்கு இராததால் ,அவர் செய்வது புனிதமாகவும், மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாகவும் இருக்கும் .
ஆயினும்  அவர்களைச் சாஸ்திரங்களின் விதிமுறைகள் எவையும் கட்டுப்படுத்தாது.அந்த மாமனிதன் இவ்வுலகில் கர்மங்களைச் செய்வதாலும் ,செய்யாவிட்டாலும் எவ்விதமான பயனும் இல்லை .
உயிரினங்கள் அனைத்திலும் எதிலுமே அவனுக்குத் தனக்காக ஆக வேண்டியது என்ற தொடர்பு சிறிதும் இருக்காது  என விவரிக்கிறார் கிருஷ்ணன் .
”கேசவா, மகா மனிதன் கர்மம், செய்வதினாலும், செய்யாவிட்டாலும் யாது ஒரு பயனுமில்லை என்று சொல்வதன் பொருளை விவரியுங்கள்”எனக் கேட்கிறான் அர்ஜுனன் .
அர்ஜுனா, மகாமனிதன் எப்பொழுதும் பகவானுடைய ரூபத்தையே எண்ணி மகிழ்ந்து இருப்பதால் அவருக்கு எந்தக் கர்மத்தினாலும் உலகிலோ பரலோகத்திலோ அடைய வேண்டிய பயன் எதுவும் இல்லை .
அவருடைய தேவைகள் எல்லாம் பூர்த்தி ஆகிவிட்டன.அவர் அடைய வேண்டியது எதுவுமில்லை .ஆகவே, அவருக்கு எந்தக் கர்மமும் விதிக்கப்படவில்லை.
ஞானம் பெற்ற பிறகு ஜீவன் முக்தி என்ற சுகம் பெறுவதற்காக கர்மங்களை விட வேண்டுமா, செய்ய வேண்டுமா, என்று  ஞானி  நினைத்துக் கூடப் பார்க்க வேண்டியதில்லை .
ஏனெனில் ஞானம்  பெற்ற பிறகு மனத்திற்கும், புலன்களுக்கும் இன்பம் என்பது   துச்சமானது.அதிலும் அவருக்கு சம்பந்தமில்லை .அவர் எப்போதும் நித்யானந்தத்தில் மூழ்கியிருப்பார் .அவரே ஆனந்த ரூபமாக இருப்பவர்.
ஏதோ ஒரு சுகத்தை அடைவதற்காக செய்வது அல்லது விடுவது என்ற செயல் உள்ளதாக நினைப்பவன் உண்மையில் ஞானி அல்லன்.
ஏதோவொரு சிறந்த நிலையையே ஞானநிலை என்று எண்ணிக் கொண்டு தன்னை ஞானியாக நினைப்பவனே அவன்.எனவே, பற்றின்றி எப்பொழுதும் ஆற்ற வேண்டிய கடமையைச் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிரு அர்ஜுனா , என்றவர் பற்றின்றிக் கர்மங்களைச் செய்கின்ற மனிதன் பரமாத்மாவை அடைகிறான் என உபதேசிக்கிறார் கிருஷ்ணன் .
கேசவா, ”பற்றின்றி எப்பொழுதும் இருப்பது எப்படி என்பதை விவரியுங்கள் என கேட்கிறான் அர்ஜுனன் .
அர்ஜுனா , கர்மங்களைச் செய்வதனால் ஏற்படும் பற்றுதலை விட்டுக் கடமையை ஆற்ற வேண்டும் .பற்றுதலில்  இருந்தே ஆசை பிறக்கிறது.ஆகவே , பயனில் விருப்பத்தை துறந்து கடமையாற்று என ஆணையிடுகிறார் கிருஷ்ணன் .
கேசவா, பரமசித்தி பெற்றவர்களை கூறுங்கள்  என கேட்கிறான் அர்ஜுனன் .
அர்ஜுனா, ஜனகர் முதலிய ஞானிகள் பற்றின்றிக் கர்மங்களைச் செய்ததன் மூலமாகவே சிறந்த பேற்றைப் பெற்றார்கள்.
அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் அஸ்வபதி , இஷ்டவாகு, பிரகலாதன் அம்பரீஷன்  போன்றோர் பற்றற்றுக் கர்மங்களை ஆற்றியதால்  தானாகவே கிடைக்கும் என விளக்குகிறார் கிருஷ்ணன் .
கேசவா,” உலகத்திற்கு வழிகாட்டுவது” என்று எதைச் சொல்கிறீர்கள் என்பதை விவரியுங்கள் என கேட்கிறான் அர்ஜுனன் .
அர்ஜுனா, படைப்பு முறையைச் சரியாக நடத்திச் செல்வது எந்த தடையும் வராமல் பார்ப்பது வழிகாட்டும் மார்க்கமாகும் .
எல்லா பிராணிகளையும் வளர்த்து, காப்பது மனிதனுடைய பொறுப்பாகும். ஆகவே, தனது வர்ணம், ஆசிரமம் இயல்பு ,சூழ்நிலை இவற்றிக்கேற்றவாறு  தனது கடமையை செம்மையாக நடத்தி பிறருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் .
தீய குணங்களையும் தீய நடத்தைகளையும் அகற்றி, அவர்கள் சுயதர்மத்தில் நிலைபெறச் செய்வது தான் உலகிற்கு வழிகாட்டும் முறையாகும் என  விவரிக்கிறார் கிருஷ்ணன் .
மேலும் கூறுகிறார், அர்ஜுனா நீ உலகுக்கு வழிகாட்டும் முறையிலாவது கர்மங்களைச் செம்மையாக ஆற்ற வேண்டும்.
நீ அக்கடமையில் இருந்து தவறினால் படைப்பில் கிளர்ச்சி  ஏற்படும் .கட்டுப்பாட்டில் தவறு ஏற்படும் .எனவே ”படைப்பின் சீரமைப்பைக் கட்டிக் காப்பதற்காக என்னுடைய கர்மங்களை ஆற்ற வேண்டும் ” என நினைத்து  நீயும் கர்மங்களை ஆற்ற வேண்டும்.அவ்வாறு செய்யாமல் விடுவது எந்த விதத்திலும் ஏற்றதில்லை என உபதேசிக்கிறார்  கிருஷ்ணன் .
கேசவா, ஞானி செய்ய வேண்டியது ஒன்றுமில்லை என்றால் அவர் நோக்கில் கடமை ஆற்றுவதில் ஒருபெருமையும் இல்லையென்றால், உலகிற்கு வழிகாட்டியாகக்  கடமை ஆற்றுவது  வெறும் பகட்டாகத்தானே இருக்கும் என வினாவுகிறான் அர்ஜுனன் .
அர்ஜுனா, ஞானியிடம் இவ்விதப் பகட்டு இருக்காது. நாம் சரியாகச் செய்ய வேண்டும் சிரத்தையுடன் செய்ய வேண்டும் .
உலகம் நம்மைக் கவனித்து நாம் செய்கிறபடியேதான் செய்யும் .ஆகவே, சரியாகச் செய்ய வேண்டும் என்று தான் ஞானி செய்வான் .
அதில் பகட்டு இருக்காது பற்று இருக்காது .ஆசை இருக்காது, அகங்காரம் இருக்காது,அவன் கர்மங்களை ஆற்றுவது மிகவும் தனிப்பட்டதாக  இருக்கும் என விளக்கிய கிருஷ்ணன் ….
அர்ஜுனா ,உயர்ந்த மனிதன் எதை எதைச் செய்கிறானோ, ஏனையோரும் அதை அதையே செய்வார்கள்.
அவன் எதைச் சான்றாக எடுத்துக் காட்டுகிறானோ, மனித சமுதாயம் அனைத்தும் அதையே பின்பற்றி  நடக்கும் என்கிறார் கிருஷ்ணன் .
கேசவா, சிறந்தவர் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள் எனக் கேட்கிறான் அர்ஜுனன் .
அர்ஜுனா, நல்ல குணங்களும் நல்ல நடத்தைகளும் , அமைந்ததன் காரணமாக தர்மாத்மா என்று சிலர் புகழ்கிறார்கள்.
உலகில் பெரும்பாலான மக்கள் அவரிடம் சிரத்தையும் ,விசுவாசமும் கொள்கிறார்கள்.இப்படிப்பட்ட புகழ் பெற்ற மதிப்பிற்குரிய மகாத்மாக்களைத்தான் சிறந்தவர் என்று கூறுகிறேன்  என்கிறார் கிருஷ்ணன் .
 கீதை  தொடரும் .
Share.

Leave A Reply