இவ்வுலக ஆட்சி என்ன ?மூவுலக ஆட்சியே எனக்குக் கிடைக்குமானாலும் நான் குலநாசத்தை விரும்பவில்லை என்கிறான் அர்ஜுனன். 

அர்ஜுனா,வெற்றி தோல்வி இலாப நஷ்டம்,சுக துக்கம், இவற்றை சமமாகக் கருது.அதற்குப்பின் யுத்தத்திற்குத் தயாராகு என்கிறார் கிருஷ்ணன்.

வெற்றி,தோல்வி,லாப, நஷ்டம்,சுக,துக்கம் இவற்றை சமமாக கொள்வது எப்படி ? எனக் கேட்கிறான் அர்ஜுனன் .

போரில் ஏற்படும் வெற்றி, தோல்விகளினால் மனதில் விருப்பு,வெறுப்போ, இன்ப,துன்பமோ போன்ற மாறுதல் உணர்வுகள் உண்டாகக்கூடாது.அவற்றை சமமாகக் கருத வேண்டும் என்றார் கிருஷ்ணன்.

மேலும் கூறுகிறார் நான் கூறிய மனப்பாங்குடன் யுத்தம் செய்வதால் பாவம் சிறிதளவு கூட உன்னைத் தீண்டாது நற்செயலாலோ ,தீய செயலாலோ ஏற்படக்கூடிய கர்ம பந்தத்திலிருந்து முற்றிலும் விடுபடுவாய் என்ற கிருஷ்ணன்…

இந்த புத்தி உனக்கு ஞானயோக விஷயத்தில் கூறப்பட்டது.இனி இதனைக் கர்மயோக விஷயத்தில் கேள்.

அந்த புத்தியோடு கூடியவனாக ஆகி கர்மபந்தத்தை முழுமையாக விலக்கி விட்டு ,முற்றிலும் அழித்து விடுவாய் என்கிறார் கிருஷ்ணன்.

‘கர்ம பந்தம்’ என்ற சொல்லுக்கு என்ன பொருள் ?மேலே சொன்ன சமபுத்தியால் எவ்வாறு அழிப்பது என கேட்கிறான் அர்ஜுனன் .

அர்ஜுனா,முன் பல பிறவிகளில் செய்த நல்லதும்,தீயதுமான வினைகளின் சம்சாரத்தினால் இந்த ஜீவன் பந்தப்பட்டிருக்கிறது.

இந்த மனிதப் பிறவியிலும், அகங்காரம், மமகாரம்,பற்றுதல்,பயனில் ஆசை இவற்றால் மேலும் பல புதிய கர்மங்களைச் செய்வதால் இந்த பந்தம் மேலும் வலுப்பெறுகிறது.

ஜீவன் மேலும் பிறப்பு, இறப்பு என்ற சுழலில் உழலுதலுக்குக் காரணமான பல முன் பிறவிகளில் சேர்ந்த நல்லதும்,தீயதுமான சம்சாரத் தொகுப்பே ‘கர்ம பந்தம்’ஆகும்.

கர்மம் சரியான பலன் தருமா ? தராதா ? என்ற கவலையை விட்டு சமபாவனையுடன் விருப்பு வெறுப்பு, மகிழ்ச்சி ,துன்பம் முதலிய விகாரங்களுக்கு ஆட்படாமல் கடமையைச் செய்ய வேண்டும்.

இப்படிச் செய்தால் இப்பிறவியிலும் பல முன் பிறவிகளிலும் செய்த கர்மங்களுக்கும் இனிமேல் செய்யப் போகும் கர்மங்களுக்கும் பயனை உண்டாக்கும் திறமை அழித்துவிடுகிறது.

வறுக்கப்பட்ட தான்யங்கள் முளைவிடாது.அதுபோல பிறவி அழிக்கப்படுகிறது இதுதான் சமபுத்தியினால் கர்மபந்தத்தின் பயனாகும் என்கிறார்.

அர்ஜுனா,நீ சத்ரியன் யுத்தம் செய்வது உன்னுடைய குல தர்மமாகும் .அதை எக்காரணத்தைக் கொண்டும் தவிர்ப்பது முறையன்று .அதைச் செய்வது தான் உனக்கு மேன்மைதரும் என்றவர்…

இடைக்கழியில் வைத்த தீபம் எப்படி உள்ளும்,புறமும் ,வெளிச்சம் காட்டுமோ, அதுபோல ஞானயோகத்திற்கும், கர்மயோகத்திற்கும் நடுவில் கூறுகிறார்.

இவ்விதம் கூறுவதால் அர்ஜுனனின் அகமும்,புறமும் உணர்ந்து ஒளி உண்டாகட்டும் என உணர்த்துகிறார் கிருஷ்ணன்.

‘’இந்த கர்மயோகத்தில் ஆரம்பம் அழிவதில்லை என்று கூறுவதற்கான காரணத்தை கூறுங்கள்’’என்கிறான் அர்ஜுனன்.

‘’இந்த கர்ம யோகத்தில் சாதனை செய்ய முனைந்து அதை முழுமையாகச் செய்து முடிப்பதற்கு முன் மனிதன் அதை நடுவில் விட்டுவிடுகிறான் என்று வைத்துக் கொள்வோம் அது அழிவதில்லை.

ஆரம்பத்தின் சம்சாரத்தின் சாதகனின் உள்ளத்தில் ஊன்றிவிடுகிறது .அடுத்த பிறவியில் கூட அது பலவந்தமாக அந்த சாதனையில் ஈடுபடுத்துகிறது.அது அழிவதில்லை .இதுவே கர்மயோகத்தில் ‘சத்’ எனப்படுகிறது.

ஆனால், நடைமுறை வாழ்க்கையில் ஒரு விவசாயி நிலத்தில் விதை விதைத்துவிட்டு,அதற்குத் தண்ணீர் பாய்ச்சிச் காப்பாற்றாமல் விட்டுவிட்டால், அந்த விதை வீணாகிவிடுகிறது.ஆனால் கர்ம யோகத்தில் பிறவியால் தொடர்கிறது என விளக்குகிறார் கிருஷ்ணன்.

‘’கடமையைச் செய்.கடமையைச் செய் என்கிறீர்கள்.அதனால் விபரீதம் ஏற்படாதா ?’’ எனக் கேட்கிறான் அர்ஜுனன் .

கர்மம் செய்தால் தீய பயன் நேரும் கர்மயோகத்தில் பயன் வேண்டும் என்ற எண்ணமே இல்லை.அதனால் விபரீதமான பயன் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்றவர் மேலும் விளக்குகிறார்.

பயன் கருதி கர்மம் செய்தால் தெய்வத்திற்கோ, பித்ருக்களுக்கோ ,மனிதர்களுக்கோ ,சேவை செய்யும் போது தவறு நேர்ந்தால் அவர்கள் கோபம் கொள்ளும் போது சாதகனுக்குத் தீங்கு நேரலாம்.

ஆனால் தன்னலம் கருதாத கர்மயோகத்தில் யாகம், தானம், சேவை முதலிய கடமைகளில் குறை ஏற்பட்டாலும் விபரீத விளைவாக தீங்கு நேராது.

அதாவது, சாதனை முற்றுப் பெறாததினால் இப்பிறவியில் அந்த சாதகனுக்கு பரமபதம் கிடைக்காவிட்டாலும்,சாதனையைக் கடைப்பிடிப்பவனுக்கு முன்வினைப் பயனாகவும்,இப்பிறவியிலேயே கர்மயோகத்தில் தவிர்க்க முடியாமல் நேரிடும் இம்சையே ,நரக வாசமோ ஏற்படாது.

முன்செய்த புண்யங்களின் விளைவால் இவ்வுலகிலோ,பரமலோகத்திலோ கிடைக்கும் சுகபோகங்களுக்குத் தடையும் ஏற்படாது.முன் பழக்கத்தினால் மறுபடியும் அதே சாதனையில் ஈடுபடுவான் என்கிறார் கிருஷ்ணன்.

‘’கடமையைச் செய் என்கிறீர்கள் .இப்போது கர்மயோகம் என்கிறீர்கள் ,அதைச் சற்று விளக்கிக் கூறுங்கள் ‘’எனக் கேட்கிறான் அர்ஜுனன்.

சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட உயர்ந்த கடமைகளே ‘கர்மம்’ எனப்படுகிறது.சமநோக்கு பாவனையே ‘யோகம்’ அதாவது மமகாரம்,அகங்காரம்,காமம்,குரோதம்,பேராசை ,மோகம் இவை இல்லாமல் சமபாவனையுடன் தந்து வர்ணம்,ஆசிரமம்,இயல்பு,சூழ்நிலை இவற்றிற்கேற்ப சாஸ்திரங்களில் கடமைகளை ஆற்றுவதுதான் கர்மயோகம்.இதையே சமத்வயோகம்,புத்தியோகம் என சொல்லப்படுகிறது என்கிறார் கிருஷ்ணன்.

இந்த கர்மயோகத்தில் சாதனை நிறைவு பெறுமானால்……அது அந்த சாதகனை அதே கணத்தில் பரபிரம்மமாகிய பரமாத்மாவிடம் சேர்க்கும். பூரண சாதகனின் பயனை அறிந்தாயா / என்றவர் மேலும் கூறுகிறார்.

சமபாவனையில் முழுவதும் நிலைத்து நில்லாமல் ஓரளவு சமபாவனையுடன் கடமைகளைச் செவ்வனே ஆற்றினாலும் ….

அந்த சிறு சமபாவனைகூட உயிர் பிரியும் காலத்தில் பிரம்மா நிர்வாணத்தை அடையச் செய்யும் என்கிறார் மேலும்…..

பயன் கருதி பற்றுடன் எத்தனை ஆயிரம் ஆண்டுகள்,எவ்வளவு பெரிய யாகங்கள்,எவ்வளவு பெரிய பெரிய யாகங்கள்,தானங்கள்,தவங்கள்,புண்யதல வாசம் செய்தாலும்,விரதம் , உபவாசம் செய்தாலும் மனிதன் சம்சாரச் சூழலில் இருந்து வெளியேற முடியாது.

மாறாக சாஸ்திர முறைக்கேற்ப பிட்ஷை எடுத்தல் போர்த்தொழில் ,சிற்பம், வாணிகம், உழவுத் தொழில்,தொண்டு ஆகிய வாழ்க்கை நடத்துவதற்காகச் செய்யப்படும் சிறு தொழில் கூட முழுமனதுடன் செய்யப்பட்டால் அவனை ஒரு கணத்தில் சம்சாரத்திலிருந்து கரை ஏற்றிவிடும்.

ஆகவே ,காரியங்களில் செயலைக் காட்டிலும் மனப்பாங்குதான் முக்கியம்.ஆனால், ஒருபோதும் பலன் அற்றுப் போவதில்லை .வேறு தீய பயனை தருவதும் இல்லை. முடிவில் சாதகனை முழுமையாக மனமுடையவனாக மாற்றி அவனை கரையேற்றி விடுகிறது.அதுதான் சிறிதேயான சமபாவத்தின் மகிமை என்கிறார் கிருஷ்ணன்.

‘’கர்மயோகத்தில் சிறிது முயற்சி கூடப் பிறவி பயத்திலிருந்து காப்பாற்று மானால் கர்மயோகத்தைப் பூரணமாக சாதிப்பதற்கு என்ன அவசியம்’’ எனக் கேட்கிறான் அர்ஜுனன்.

‘’கர்மயோகத்தில் சிறிது முயற்சி கூட காப்பாற்றத்தான் செய்கிறது. இதில் சந்தேகமேயில்லை .ஆனால் அப்படி எப்போதும் செய்யும் என்று கால நிர்ணயம் கிடையாது. இப்பிறவியிலேயே செய்யுமா ?அடுத்த பிறவிகளிலா என்று தெரியாது.

முழுமை பெற்று பரிபூரண நிலையில் தான் கரையேற்றும் .ஆகவே நலனை மங்களத்தை விரைவில் அடைய ஆவன செய்ய வேண்டும்’’ என்கிறார் கிருஷ்ணன்.
அர்ஜுனா/ இந்தக் கர்மயோகத்தில் தீர்மானமாக புத்தி ஒன்றுதான் இருக்கிறது.ஆனால், ஒரு விஷயத்திலும் நிச்சய புத்தி இல்லாத விவேகமற்ற பயனில் ஆசையுள்ள மனிதர்களுடைய புத்திகள் நிச்சயமாகப் பல நோக்கங்களுடையனவாகவும் முடிவற்றவனாகவும் இருக்கின்றன.
சத்,சித் ஆனந்தமயமான பரபிரம்மம் ஒன்றே ஒன்றுதான்.எனவே கர்மயோகி அவசியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய நிச்சய புத்தி,’சத்யம்’ என்ற ‘சத்’ சித் புத்திகளேயாகும் என்கிறார் கிருஷ்ணன் .

மேலும் ,அர்ஜுனா, யோகங்களில் மூழ்கியவர்களும், சொர்க்கமே மேலானது என்று நினைப்பவர்களும், கர்மங்களின் பயன்களைப் புகழ்ந்துரைக்கும் வேதவாக்கியங்களின் பிரியம் வைத்து வேறொன்றும் இல்லை என்று வாதம் செய்கின்றவர்களுமான அறிவிலிகள்…
கர்மங்களின் பயணமான பிறவியை அளிக்கின்ற போகங்கள், மற்றும் செல்வங்கள் பெறுதற்குரிய பல வகையான கர்மங்களைக் கூறுகின்ற மலர்போலக் கவர்ச்சியான எந்தப் பேச்சை எடுத்துப் பேசுகிறார்களோ/ அந்தப்பேச்சினால் மனம் பற்றுள்ளவர்களுக்கு பரமாத்மாவிடம் நிச்சயமான புத்தி நிலைபெற்று இருப்பதில்லை என்கிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply