15-சந்யாநிருத்த மூர்த்தி
    
       ஆகமத்திரட்டு
“பொங்குங் காதரன் காளம் அயின் றேயொன்றும்
        புகலாமல் இருந்தனனோர் கணப்பொழுது புலவோர்
அங்கவனை இடைவிடாது அருச்சனை
முன்புரிந்தார்
         அத்திதி ஏகாதசியா
மடுத்ததிதி யதனிற்
புங்கவர் பாரணம் புரிந்தே
பூர்த்தியுற்றார் தன்மேற்
        பொருந்துதிதி தனில்இமவான் பொற்கொடியை வைத்தே
சங்கரன் சூலஞ்சுழற்றி நடித்தனனோர்  யாமஞ்
        சதுர்மறைநூ லதுபிரதோ டம்மேனவே
சாற்றும்”.

தேவர்கள் சிவனுடைய உதவியின்றித் திருப்பாற்கடலைக் கடைந்தனர்.

அதில் நாட்டி வைத்திருந்த மந்தரமலை
ஆகிய மத்திற்குப் பூட்டப்பட்ட கயிறாக வாசுகி என்னும் பாம்பு இருந்தது. அது தன் தலையையும் வாலையும்
பிடித்து ஈர்க்கும் தேவர் மற்றும் அசுரர் வலிக்குத்
தாங்க முடியாமல் வாய்வழியாக நஞ்சை
கக்கியது.

அவ்விசம் யாவரையும்
எதிர்த்தது. திருமால் அந்த விசத்தை எதிர்த்து உடல் கருகினார்.

தேவர் குழு கைலாயமலையை அடைந்து சிவபிரானுக்கு
விண்ணப்பம் செய்தனர்.

அருட்கடல் ஆகிய சிவபெருமான் நஞ்சை  உண்டு அமுதத்தை கிடைக்கச் செய்தார்.

சிவபெருமான் தேவர்களின் துயரத்தினைத் தொலையும்படி நஞ்சினை அருந்திய காலத்தில்…

உமாதேவி சிவனின் தொண்டையைப் பிடித்துக்கொண்டார். விசம் உடலுக்குள் போகமல் இருக்க இரவு முழுவதும் விழித்திருந்து
அர்ச்சனை செய்து வழிபட்டார்கள். அந்த நாளே ஏகாதசி என்பர்.

மறுநாளாகிய துவாதேசியில்
பண்ணவர் பாராயணம் செய்தனர்.

அதன் மேற்பட்ட திதியாகிய திரயோதசியில் சிவபிரான் மலையராசன் புத்திரி உமாதேவியாரை
நிறுத்தி தன் சூலத்தைச் சுழற்றி, கையில் உடுக்கை ஏந்தி ஒரு சாம காலம் நடனம் சேய்தார்.

அக்காலத்தையே வேதசிவாகமங்கள் பிரதோசமாகும்.

பதினைந்து தினங்களுக்கு ஒருமுறை
வரும் திரயோதசியைப் பிரதோசம் என்பர்.

தினந்தோறும் மாலையும், இரவும் கலக்கும் சாமப் பொழுதையும் பிரதோச காலம் எனவும்.

வருடத்திற்கு ஒரு முறை வரும் மகா சிவராத்திரியை வருடப் பிரதோசம் எனவும் அழைப்பர்.

சிவபிரான் நிருத்தஞ் செயல் கண்ட தேவர்கள்
மகிழ்ந்தனர்.இரு
கரங்களையும் தலைமேல்
தூக்கிக்  குவித்து  மனதை மகாதேவன் பால்
பதித்து அரனே பரம்பொருள் என மகிழ்ந்து ஆனந்தமாக கூத்தாடினர்.அன்புருகிப்
பாடி,சிவபெருமானை
கொண்டாடினர்.

அருளாளர்கள் விடை பெற்றுத் தமதிடத்தை நாடினர்.இத்தகைய நடனகாலத்தில்
தேவர்கள் தங்களுடைய வாத்தியங்களும், திருமால் மிருதங்கமும் வாசித்தனர்.

சிவபெருமான் திருக்கயிலாய கிரியில்
உமாதேவியார் முதலானோர் காணப் பிரதோச காலத்தில் நடனம் செய்ததால் சந்யாநிருத்த மூர்த்தம் என அழைக்கப்படுகிறார்.
அவரை வணங்கி எல்லா நலனும் பெறுவோம்.

Share.

Leave A Reply