10-சந்திரசேகர மூர்த்தி
கந்தபுராணம்
கீர்த்தன அன்றியே திங்கள் தன்னிடை ஆர்த்திடு கலையினை அங்கே யிற்கொளா வார்த்திடு சடைமிசை வயங்கச் சேர்த்தினான் சார்ந்திலது அவ்வழித் தக்கன் சாபமே.
எந்தை யவ்வழி மதியினை நோக்கிநீ யாதும்
சிந்தை செய்திடேல்
எம்முடிச் சேர்த்திய சிறப்பால்
அந்தம் இல்லைஇக் கலையிவண் இருந்திடும் அதனால்
வந்து தோன்றுநின் கலையிலா நாடொறும் மரபால்.
நின்ன தொல்கலை
ஐந்துமுப் பகலிடை நிரம்பிப்
பின்ன ரவ்வழி
தேய்ந்துவந் தோர்கலை பிரியாது
இன்ன பான்மையே நிகழுமெக் காலமும் எந்தன்
முன்னே யாவிதோறு இருந்ததெலாம் இயற்றிய முதல்வன்.
பிரம்மதேவருடைய மகன்களில் ஒருவர் தட்சன். தட்சன் அசுவினி முதலிய நட்சத்திரங்கள் ஆகிய இருபத்தேழு பெண்களின் தந்தை.
அத்திரி முனிவர் மனைவியாகிய அனுசியை ஈன்ற சந்திரன் அழகானவனாக இருந்ததால் தட்சன் அவரது இருபத்தேழு பெண்களை சந்திரனுக்கு மணமுடித்து கொடுத்தார்.
பின்பு சந்திரனை நோக்கி இப்பெண்கள் யாவர் இடத்தும் பாராபட்சமின்றிச் சமமாக அன்பு கொண்டிருக்க வேண்டும் என்று கூறி புதல்வியரைச் சந்திரனோடு அனுப்பினார்.
சந்திரன் மாமன் கூறியபடி சிறிது காலம் யாவரிடத்தும் அன்புடையவராய் இருந்தார்.
பின்னர் கார்த்திகை, ரோகிணி என்னும் இருவருமே தனது மனைவியருள் பேரழகு உடையவராக இருந்ததால் அவ்விரு வரிடத்தே மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.
ஏனைய மனைவியரின் முகத்தையும் பார்க்க மறுத்தார். அக்கன்னியர்கள் நெடுநாட்கள் பொறுத்துப் பார்த்து சிறிதும் மனம் சகியாது தமது குறைகளை தந்தை இடம் சொன்னார்கள்.
தந்தையாகிய தட்சன் சந்திரனை அழைத்துப் பலவகையாக புத்திமதிகளை கூறி அனுப்பினார்.
சந்திரன் தட்சன் சொல்லியவற்றை சிறிதும் சிந்திக்காமல் நடந்தார்.
அதை கண்ட பெண்கள் மீண்டும் தந்தையிடம் சென்று…. தந்தையே! எமது கணவர் எம்மை முன்பு போலவே முகம் நோக்காமல் இருக்கின்றார். எனக் குறை கூறினர்.
அதைக் கேட்ட தட்சன் கோபம் கொண்டு…! “நாளுக்கு ஒரு கலையாய் குறைந்து இறக்கக் கடவன்” என்று சாபம் இட்டார்.
சந்திரன் அவ்வாரே தட்சன் சாபத்திற்கு ஏற்ப நாளுக்கு ஒரு கலையாக பதினைந்து தினங்களில் தன் கலைகளை எல்லாம் இழந்தார்.
இறுதியில் ஒரு கலையோடு மனம் வருந்தி தனக்கு நேர்ந்த துன்பத்தை இந்திரனிடம் சொல்லி அழுதார்.
இந்திரன் “நீ பிரம்மதேவனிடம் சொன்னால் பிரம்மதேவன் ஒருகால் தன்னுடைய மகன் தட்சனிடம் சொல்லி உனக்கு சாப விமோசனம் வாங்கித் தரக்கூடும்” எனக் கூறினார்.
அவ்வாறே சந்திரன் பிரம்மதேவனை வேண்டிக் கொள்ள! பிரம்மதேவர் “தட்சன் தந்தை என்று என் சொல்லைக் கேளேன்”
நீ கைலைமலையை அடைந்து சிவபெருமானை வணங்கு, அவர் உனது குறையை தீர்ப்பார் என்று கூறினார்.
சந்திரன் உடனே திருக்கயிலாய கிரியை அடைந்து திருநந்தி தேவரை வணங்கினார்.
பின்னர் அவர் அனுமதி பெற்று மகா சன்னிதானத்துள் சென்று அருட்பெரும் கடலாகிய சிவபெருமானை தரிசித்தார்.
பின்னர் அஷ்டாங்க பஞ்சாங்கமாக அவரை வணங்கித் தனக்கு நேர்ந்த சாபத்தைப் பற்றிக் கூறினான்.
சிவபெருமான் மீதியுள்ள ஒரு கலையைத் தமது சடைமுடியில் தரித்து. “உனது கலை ஒன்று என் முடி மேல் இருந்தால் நாளுக்கொரு கலையாக வளர்ந்தும் தட்சன் சாபத்தால் நாளுக்கொரு கலையாக குறைந்தும் இருக்க வாழ்வாய். “எனவே, எப்போதும் ஒரு கலை உன்னை விட்டு நீங்காது.” என அருள் கொடுத்தார்.
இந்தக் காரணத்தால் எம்பெருமானுக்குச் சந்திரசேகரர் என்று திருப்பெயர் உண்டாயிற்று. எனவே, சந்திரசேகரர் ஆகிய சிவபெருமானை வணங்கி முழு பௌர்ணமி ஆகிய சந்திரனையும் வணங்கி வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவோம்.
