ஏழாவது
   சுகாசன மூர்த்தி

வெள்ளி மலையின் உச்சியில் ஒளி வீசும் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில், அதன் மையத்தில் மகாதேவன் வீற்றிருக்கிறார்.

அவரைச் சுற்றி பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் இருக்கிறார்கள்.

அடுத்த வரிசையில் பதினோரு கோடி உருத்திரர்களும், இந்திரர், திக்குப்பாலர்களும், அட்ட வசுக்களும் இருக்கிறார்கள்.

அடுத்த வரிசையில் முப்பத்து மூன்று  கோடி தேவர்கள் இருக்கிறார்கள்.

அடுத்த வரிசையில் நாற்பத்தியெண்ணாயிரம் முனிவர்களும், நவசித்தர்களும் இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் சிவ தியானத்திலேயே இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் “சிவ சிவ” என்ற ஒளியே கேட்கிறது.

வேதங்கள் மகா தேவரின் பெருமையைக் கூறிக் கொண்டிருக்கின்றன. நாரதர் மகா தேவனின் புகழ் பாடி கொண்டு இருக்கிறார்.

எண்ணில் அடங்காதோர் மகாதேவன் முன் நின்று வரங்கள் கேட்டு வணங்குகின்றனர்.

அவரவர்கள் விரும்பின வரங்கள் கேட்டு வணங்குகின்றனர்.

அவரவர்கள் விரும்பின வரங்களைக் கொடுத்து மகிழ்ச்சியுடன் தத்தம் இடங்களுக்குச் செல்ல மகாதேவன் ஆணை இடுகிறார்.

அனைவரும் தத்தம் இருப்பிடம் சென்ற பின்பு அருள் வடிவாகிய உமாதேவி பெருமானின் திருவடிகளைப் பற்றி “பெருமானே சிவ ஆகமங்களின் உண்மை இத்தகையது என அடியேன் எளிதில் உணரும்படி திருவுளஞ் செய்து திருவாய் மலர்ந்து அருள வேண்டும் என கேட்கின்றார். “

சிவபெருமான் பார்வதியை நோக்கி ஐவகை பாசபந்தத்தின் நிலைமையையும், அவைகள் நீங்குமாறும், அவற்றை நீக்கினால் அடையும் தன்மையையும், வேதசிவாகமத்தின் தோற்றம் பற்றியும் திருவாய் மலர்ந்து அருளினார்.

எம்பெருமான் திருவாய் மலர்ந்து அருளிய காரணத்தால் சிவபெருமான் ‘சுகாசன மூர்த்தி’ என பெயர் பெறுகிறார். அவரை வணங்கி வேண்டியதை வேண்டிய படி பெறுவோம்.
  

Share.

Leave A Reply