20- கல்யாண சுந்தர மூர்த்தி

திருக்கைலாய மலையில் அனைத்து தேவர்களும் இருக்கையில், நவரத்தின மண்டபத்தில் சிவபெருமான் சிறப்புக் கொண்டு எழுந்தருளி இருக்கையில்…

தேவியார் சிங்காசனத்தை விட்டு எழுந்து இறைவனை வணங்கி கைகூப்பி நின்றார்.

தேவர்களை மதிக்காத தக்கன் மகள் என்பதால் தாட்சாயணி என்று பெயர் பெற்றேன். அந்த அவப் பெயரை மாற்றத் தயவு செய்ய வேண்டும் என்று வேண்டினார்.

சிவபெருமானும் “மாதே! மலையரையன் உன்னை மகளாகப் பெற தவம் செய்கின்றார். அவருக்கு குழந்தையாக நீ
பிறப்பாயாக, பிறகு உன்னை  யாம் வந்து மணம் செய்கின்றோம்.”  என்றார்.

உமையம்மையார் அது போலவே இமாசலத்தில் உள்ள தாமரை தடாகத்தில் மூன்று வயது குழந்தை வடிவம் ஏற்று வாழ்ந்தார். அக்குழந்தையைக் கண்ட மலைமன்னன் மகிழ்ந்தார்.

குழந்தையைக் கொண்டு போய் தனது மனைவி மேனை கையில் கொடுத்தார். மகிழ்ச்சி அடைந்த மேனை குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தாள்.குழந்தைக்கு பாலூட்டி வளர்த்தாள்.

அம்மையார் ஐந்து வயதினை அடைந்ததும் அருள் மேலீட்டால் தந்தையாகிய பர்வத ராஜனுக்கு அறிவித்து அவரது அனுமதி பெற்று மலைச் சாரலில் பர்ணசாலை அமைத்து சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார்.

சிவனும் முனிவர் போல் யோகத்தில் இருந்தார். உலகம் முழுவதும் பெண்கள் முயக்கற்றுப் பிரம்மன் படைப்பு தவறாகியது.

இதைக் கண்ட தேவர் அதை விலக்க எண்ணினார். அதற்காக மன்மதனை அனுப்பி மலர் வில்லை சிவபெருமான் மீது செலுத்தி அவர் யோகத்தைக் கலைக்க சொன்னார்.

மன்மதன் அவ்வாறு செய்ததால் கோபம் கொண்ட சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து மன்மதனை சாம்பலாக்கினார்.

அருகில், இருந்த மன்மதனின் மனைவி ரதி சிவபெருமானை பார்த்து புலம்பி வேண்டினாள்.

சிவபெருமான் பார்வதி தேவியை நான் மணந்தபின் உன் கணவனைத் திருப்பித் தருவோம் என்று கூறினார். ரதி இமாசலம்  சென்று கவலையுடன் வாழத் தொடங்கினாள்.

சிவபெருமான் முனிவர்களுக்கு அருள் பாலித்தார். பின் இமயமலையை அடைந்து அங்கு அவர் மனைவியார் மேற்கொண்டிருந்த கடுமையான தவத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். பிறகு சிவபெருமான் அந்தணர் வடிவு பெற்று…

பார்வதி தேவியை நோக்கி “ எதை வேண்டி தவம் செய்கின்றாய்?”  என்று கேட்டார். அதற்கு தேவியார் “சிவபெருமான் என்னை மணம் செய்வதற்காக தவம் செய்கின்றேன்” என்றாள்.

அதற்கு அந்தணக் கோலத்தில் இருந்து சிவபெருமான் பெண்ணே! என்னை மணம் செய்து கொள் என்றார். இதைக் கேட்ட இறைவியார் கோபம் கொண்டு “கொடியவனே! இங்கிருந்து போய் விடு” என்றுரைத்தாள்.

உடனே சிவபெருமான் இடப்பவாகனத்தில் ஏறி காட்சி தந்தார்.

அதைக் கண்ட பார்வதி தேவி வெட்கம் கொண்டு சிவபெருமானை நோக்கி கைகூப்பி வணங்கினார்.

“பெருமாள் என்று அறியாமல் தவறாக பேசிவிட்டோன்.அதனால், தவற்றை மன்னித்து அருள வேண்டும்” என்று கேட்டாள்.

உடனே, சிவபெருமான் “நீ பேசியதை யாம் என்னைப் போற்றியதாக எடுத்துக் கொண்டோம்.” தவக் கோலத்தை விடுத்து வருக, விரைவில் யாம் உம்மை மணம்  புரிந்து கொள்வோம்.” என்று கூறி அவ்விடத்தில் இருந்து மறைந்தார்.

பார்வதிதேவி நடந்ததைப் பருவதராஜனிடம் கூறினாள். அதைக் கேட்டு பருவதராஜன் மகிழ்ச்சி அடைந்தார். சிவபெருமான்
கைலைமலையை அடைந்து சப்தரிஷிகளை வரவழைத்து “மலையராசன் மகளை எனக்கு மனம் பேசுங்கள்” என்றார்.

மாதவர்கள்
இமோற்கிரியை அடைந்து பர்வதராசனை கண்டு  சிவபெருமானது மனக் கருத்தைப் பற்றி சொன்னார்கள்.

உடனே, அவரும் மணம் முடித்துக் கொடுக்கச் சம்மதித்தார். இச்செய்தியை அவர்கள் சிவபெருமானிடம் சொல்லிவிட்டு அவரவர் இடத்திற்கு சென்று விட்டனர்.

இமோற்கிரியின் அரசன் விச்சுவகன்மனை தமது நகரத்திற்கு வரவழைத்து சிறப்பு அலங்காரம் செய்தார்.

“பங்குனி உத்திரத் தினம்
உத்தம தினம் என்பதால், உமையை மணம் செய்ய வருக” என்று சிவனாரைக் கேட்டுக் கொண்டார்.

சிவபெருமான் நந்தி  தேவரை அழைத்து “தேவர்கள் அனைவரையும் வர அழையுங்கள்” என்றார்.

நந்திதேவர் சிந்தித்த அளவில் கோடி உருத்திரர்கள்,  நூற்றுவ ருத்திரர்கள்,  கீழண்ட கடாகத்தில் உள்ள காலாக்கினி உருத்திரர், கூர்மாண்டர், ஆடகேசுரர், திருமால், பிரம்மன், இந்திரன் முதலிய திக்குப் பாலகர்கள், நவசித்தர்கள்,  அஷ்டவசுக்கள், சப்தரிஷிகள், யட்சகின்னர கருட காந்தருவர் முதலிய கணங்கள், வேதாகம சாத்திரங்கள், யுகாதி காலபேதங்கள் முதலிய யாவரும் கூட்டமாக வந்து கைலையை அடைந்து நந்தி தேவரைப் பணிந்து வணங்கினர்.

பிரம்மன் பல ரத்தின ஆபரணங்களைச் சிவபெருமான் முன் வைத்து அணியும் படி வேண்டினர்.

சிவபெருமாள் ‘அணிந்தாம்’  என்று அவற்றைத் தொட்டு, பாம்புகள் ஆகிய ஆபரணமே பொற்பணியாகத் தோற்றுவித்து இடப வாகனத்தில் ஏறிவரத் தேவர்கள் மலர் மழை பெய்தனர்.

  கணேசர், கந்தன், வீரபத்திரர், வயிரவர் ஆகியோர் தத்தம் வாகனங்களில் ஏறி வரவும், சப்தரிஷிகள் ஆசீர்வதிக்கவும், பானுகம்பன் ஆயிரம் வாய்களால் சங்கத் தொனி செய்யவும், வாணாசுரன் சிவார்ச்சனை செய்த ஆயிரங்களால் குடமுழ வடிக்கவும், குணத் தலைவர்கள் பல வாத்தியங்களை முழங்கவும், நந்திதேவர் பொன்னால் ஆன பிரம்பைக்  கையில் ஏந்தித் தேவமுனிவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன் சென்றார்.

இந்திரன் களாஞ்சி ஏந்தவும், ஈசானன் அடப்பை தாங்கவும், வாயுதேவன் அலவட்டம் வீசவும், அக்கினி தீபம் ஏந்தவும், வர்ணன் பூரண கும்பம் எடுக்கவும், நிருதி தர்ப்பணம் ஏந்தவும், குபேரன் நவநிதிகளைப் பாதையில் சிந்த வரலாயினர். 

மேலும், எமன் அன்புத் தொழில் புரியவும், நாகராசர்கள் மாணிக்க தீபம் ஏந்தவும், வேதங்கள் திருவடியைச் சுமக்கவும், கங்கை, காவிரி முதலிய நதிக் கன்னியர்கள் சாமரைக் கொண்டு
வீசிவரவும், குண்டோதரன் குடை பிடிக்கவும், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் இருபுறமும் கைகுவித்து வரவும்.

சிவபெருமான் திருவெண்ணீற்றைப் பூசி ஆபரணங்கள் அணிந்து அனைத்து அலங்காரத்துடனும் இமாசலத்தை அடைந்தார். பின்னர் பருவதராஜன் அரண்மனையை அடைந்து திருமால்
கைலாகு கொடுக்க இடப வாகனத்தில் இருந்து இறங்கினார்.

பர்வதராஜன் மனைவி மேனை அனைத்து மாங்கல்யப் பெண்களுடனும் சேர்ந்து சிவபெருமானது திருவடிகளைக் கழுவினர். பின் சபைச் சடங்குகளைப் பிரம்மன் செய்தார். சிவபெருமான் இரத்தின சிம்மாசனத்தில்
வீற்றிருந்தார். அவரவர் அவரவருக்குரிய ஆசனத்தில் அமர்ந்திருந்தனர்.

அப்போது அனைவரும் ஒரே திசையில் கூடுகின்றதால் வடதிசை தாழ்ந்தது அதை கண்ட சிவபெருமான் அகத்திய முனிவரை நோக்கி நீங்கள் ஒருவரை எனக்கு ஒத்தவராகையால் நீர் தென்திசையில் இருந்தால் உலகம் சமமாக இருக்கும் உனக்கு எம் திருமண கோலத்தில் பிறகு காட்டுவோம் என்றார்.

உடனே அகத்தியர் பெருமானின் கட்டளைக்கு அடிபணிந்து இமாசலத்தில் இருந்து அகன்றார். அகத்தியர் அங்கிருந்து அகன்ற பின்னர் உலகம் உயர்வு தாழ்வு சமமாக இருந்தது.

வழியில் மாயை செய்த தவற்றிற்கு அதைச் சபித்து, பின்னர் வழி விடாமல் நின்ற விந்தமலையை அடக்கி, வாதாபி, வில்லவர் என்னும் இரு ஆசுரர்களைக் கொன்று இறுதியில் குற்றாலத்தில் உள்ள திருமாலைப் பெருமான் வடிவாக்கி பொதிய மலை சேர்ந்து சிவத் தியானத்தில் இருந்தார்.

பின் ஒரு காலத்தில் திருமணக் கோலத்தைச் சிவனாரின் திருவருளால் தரிசித்தார்.

பார்வதி தேவி பல வகையான ஆடை, ஆபரணங்களை அணிந்து கொண்டு அலங்கரிக்கப்பட்டவராய் அனைத்து தோழிகளும் சுற்றி நிற்க அம்மையார் வந்து நின்றார்.

பின்னர் சிவபெருமானை வணங்க, பெருமான் “தேவி! பக்கத்தில் வருக” என்றார்.

இருவரும் ஆசனத்தில் அமர்ந்திருந்தனர். மேனை அருகில் இருக்க பர்வதராஜன் பெருமான் பாதத்தைப் பூசை செய்து  பார்வதி கையைப் பெருமான் திருக்கரத்தில் கொடுத்தார்.

சிவபெருமான் மாங்கல்யத்தைக் கட்டித் திருமணத்தை முடித்தார்.

மன்மதனின் மனைவி ரதி தன் கணவனை பெறுவதற்காக அந்த வேலையில் சிவபெருமானை வேண்டினாள்.

பெருமான் தமது எண்ணத்தில் காமனைக் கருத அவன் முன் தோன்றினான்.

சிவபெருமான் “உன்னுடைய மனைவிக்கு மட்டும் உருவம் கொண்டு உலகில் உள்ள மற்ற அனைவருக்கும் அரூபியாய் இருப்பாயாக” என்று அருளினார்.

பின்னர் தேவியாருடன் அங்கிருந்து சென்று திரு கைலாய மலையை அடைந்தார். பின் தேவர்களை அவரவர் இடத்திற்கு அனுப்பி வைத்தார்.

பார்வதி தேவியை மணம் செய்வதற்காகச் சிவபெருமான் எழுந்தருளிய திருக்கோலமே கல்யாண சுந்தரமூர்த்தி என பெயர் பெறக் காரணம் ஆயிற்று. இருவரையும் வணங்கி அருள் ஆசி பெறுவோம்.

Share.

Leave A Reply