18- கங்காதர மூர்த்தி

திருக்கயிலாய மலையின் அருகில் உள்ள ஒரு சிங்கார வனத்தில் சிவபெருமான் உலாவிக் கொண்டு இருக்கையில்.

பார்வதி தேவி  விளையாட்டாக சிவபெருமானை பின் வந்து தமது திருக்கரங்கள் கொண்டு சிவபெருமானது திருவிழிகளை மூடினார்.

அதனால், அளவில்லாத உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாம் துன்புறும் வண்ணம் இருள் நிறைந்தது.

சூரியன், சந்திரன், தீ ஆகியவற்றின் ஒளியும், தேவர்களின் ஒளியும் மற்றும் உலகில் உள்ள அனைத்துப் பிரகாசமும் குறைந்து பேரிருள் சூழ்ந்தது.

சிவபெருமானின் திருவிழி ஒளியால் எல்லா வெளிச்சமும் இயங்குவதால், பார்வதி தேவி சிவபெருமானது கண்களைத் தன் கைகளால் மூடிய அக்கணப் பொழுதில் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் துன்பம் ஏற்பட்டது.

அத்துன்பத்தைப் போக்க எண்ணிய சிவபெருமான் தன் நெற்றியின் நடுவில் இருக்கும் நீளமான நெற்றிக்கண்ணை ஒரு நொடிப் பொழுது திறந்தார்.

அவ் ஒளியைக் கொண்டு உலகின் துன்பத்தைப் போக்கி, எங்கும் நிறைந்து இருந்த பேர் இருளைப் போக்கினார். அதனால் சந்திரன், சூரியன், தீ ஆகியவைகள் ஒளியைப் பெறச் செய்தார்.

உலகில் இருந்த அனைத்து உயிர்களும் தங்கள் உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சியால் உமையம்மையை இடப்பாகத்தில் தாங்கி இருக்கும் சிவபெருமானைப் போற்றினர்.

இச்செய்தியை பார்வதி தேவி அறிந்து  மனதில் மிகவும் ஆச்சரியப்பட்டு, சிவபெருமானது இருவிழிகளையும் மூடிய தன் இரண்டு கைகளையும் நொடிப் பொழுதில் எடுத்தாள்.

அவ்வாறு எடுக்கையில் அச்சத்தால்… அம்மையாரின் கைவிரல் பத்திலும் வியர்வை தோன்றியது. அதைக் கண்ட அம்மையார் விரலில் இருந்த வியர்வையை  உதறினார்.

பத்து விரலில் இருந்து உதிர்ந்த வியர்வை பத்துக் கங்கைகளாக அவை பெருக்கெடுத்து சமுத்திரத்தைச் சென்று அடைந்தன.

கங்கை சேர்ந்த சமுத்திரம் கணக்கில்லாமல் மூவுலகம் முழுவதையும் மூடிப் பரவியது. இதுகண்ட இந்திரன், பிரம்மன், திருமால் மூவரும் மோசம் வந்துவிட்டது என்று எண்ணி அஞ்சினர்.

உடனே, அவர்கள் மூவரும் திருக்கயிலாய மலையை அடைந்தனர். பின் அங்கு நந்தி தேவரின் அனுமதி பெற்றுத் திரு சன்னிதானத்திற்குள் சென்றனர்.

அங்கு சென்று சிவபெருமானை வணங்கி, “தேவதேவா ஏதோ ஒரு பெரிய வெள்ளம் எங்கும் பெருக்கெடுத்து  ஓடி உலகம் அனைத்தையும் அழியும் வண்ணம் எல்லை இல்லாமல் எங்கும் பரவி உலகம் முழுவதையும் கவர்ந்தது.
அதனை அடக்கி   உலகத்தை காத்தருள வேண்டும் என்று முறையிட்டனர்.” 

உடனே, சிவபெருமான் பார்வதி தேவியின் விரலில் இருந்து உதிர்ந்த வியர்வை துளிகள் பற்றி கூறினார்.

உலகம் முழுவதையும் சூழ்ந்த அந்த வெள்ளத்தை நினைத்து அதனை அருகில் வரச் செய்தார். வெள்ளத்தை தமது தலைமுடியில் ஒரு மயிர் முனையில் தரித்தார்.

அதை கண்ட மூவரும் சிவபெருமானை வணங்கி, “அருள் வெள்ளமே! உலகம் முழுவதையும் அழிக்கும்படி வந்த அவ்வெள்ளம் பார்வதி தேவியின் திருவிரலில் இருந்து வந்ததாலும், சிவபெருமானது சடை மீது சேர்ந்ததாலும் புனிதமானது.

ஆகவே, அக்கங்கையை எங்கள் மூவருக்கும் சிறிது வழங்க வேண்டும் என்று கூறினார்.

பின்பு சிவபெருமானிடம் விடைபெற்று இந்திரன் அமராவதி நகருக்கும், பிரம்மன் மனோவதி பட்டணத்திற்கும், திருமால் வைகுந்த பதவிக்கும் கங்கையைக் கொண்டு சேர்த்தனர்.

சிவபெருமான் தலையின் மேல் கங்கையை எடுத்து சூட்டிக் கொண்டு உலகத்தை காத்த  காரணத்தால் சிவபெருமானுக்கு கங்காதர மூர்த்தி என்று ஒரு பெயர் வந்தது.
அவரை வணங்கி வாழ்வில் எல்லா நலனும் பெறுவோம்.

Share.

Leave A Reply