அட்டாட்ட விக்கிரக லீலை
17- சண்ட தாண்டவ மூர்த்தி

திருவாலங்காட்டு புராணம்

“இன்சுவை பொழியும் சாயல் அபிநயம் இலங்கச் செவ்வாய்
புன்சிறு முறுவல் பூப்பப் புரணஆ னந்தம் பூரித்து அன்புறும் அவையோர் உள்ளம் அயர்தர இயங்கட் கேற்ப
வின்படு  நடனம் காளி யோடு அரன் விளைத்த வேலை.

மடிதரும் உலகம் என்ன வயங்கருள் நல்கி மெல்ல அடி பெயர்ந்து
ஆடல்செய்ய
அருகுஉறும் காளி நோக்கி
ஓடிவுறு நாணின்
மேவி ஒளிமுகம் இறைஞ்சி ஓல்கி
வடிவுறு பாவை போலச் செயலற மயங்கி நின்றாள்.”

வட ஆரண்யம் என்னும் திருவாலங்காட்டின் மகிமையைச் சுனந்த முனிவர், சிவபெருமான் மூலமாக அறிந்தார்.

உடனே, சுனந்த முனிவர் சிவபெருமான் அனுக்கிரகித்த வண்ணம் தாண்டவ தரிசனத்தைக் காண விரும்பி வட ஆரண்யத்தை அடைந்து தவம் மேற்கொண்டார்.

அவ்வாறு இருக்கையில் கண்ணுதல் கைவிரலின் அணியாகிய கார்கோடகன் என்னும் பாம்பு சிவனின் திருவிரலில் விஷத்தை கக்கியது.

உடனே, இடபம் “நம்மை மனதில் கருதாது மமதையோடு நீ செய்த தீமைக்காகத் திருக்கயிலையை விட்டு வெளியேறுக” என்று கூறியது.

  நாகம் நடுங்கி பணிந்தது.அப்போது நாதன் “வட ஆரண்யத்தில் பல  ஆண்டுகளாக அருந்தவம் புரியும் சுனந்தருடன் சண்ட தாண்டவத்தை தரிசித்துப் பிறகு இங்கு வருவாயாக” எனக் கூறினார்.

நாகம் கருடனுக்கு பயந்து சிவனாரிடம் முறையிட்டது. உடனே, இறைவன் இத்தீர்த்தத்தில் மூழ்கி வட ஆரண்யத்தில் ஆரம்பத்தில் முத்தி தீர்த்தத்தில் எழுவாயாக” என்று கூறினார்.

கார்கோடகன் எனும் பாம்பு அவ்வாறே அந்த வட ஆரண்யத்தை அடைந்து அருந்தவம் செய்யும் சுனந்த முனிவரைக் கண்டு தொழுதது.

பின் பாம்பு தனது வரலாற்றறைச் செல்ல சுனந்த முனிவர் மகிழ்ந்து தன் பக்கத்தில் தவம் செய்யும்படி கூறினார்.

பின் பழையபடி நெடுங்காலம் தவம் செய்யத் தொடங்கினார். பிறகு முனிவரைப் புற்று மூடி முடிமேல் புல் முளைத்ததால் அவர் மூஞ்சிகேச முனிவர் எனப் பெயர் பெற்றார்.

அக்காலத்தில் நிசும்பன், சும்பன் என்று இரண்டு அசுரர்கள் இருந்தனர்.

அவர்கள் செய்து வந்த தீமையை பொறுக்க முடியாத தேவர்கள் பார்வதி தேவியை நோக்கி பல காலம் கடுந்தவம் செய்தனர். எனவே, பார்வதி சிவபெருமான் முன் தோன்றி “அமரரே! நீங்கள் விரும்பிய படியே அசுரர்களை நான் அழிப்பேன்” என்று கூறி மலைச்சாரலை அடைந்து முக்காலமும் தவம் செய்து வந்தார்.

அப்போது சண்டன், முண்டன் என்னும் இரண்டு அசுரர்கள் பார்வதி தேவியை அடைந்து “தார்குழலே! ஏன் தனித்து இருக்கிறாய் சொல்ல முடியாத வலிமையை உடைய சும்பனுடன் சேர்க” என்று கூறினார்.

அதற்குப் பார்வதி “அருந்தவத்தில் இருக்கும் போது ஆண் மக்களுடன் நான் பேசுவதில்லை. அதனால், அரை நிமிடத்தில் இங்கிருந்து சென்று விடுங்கள்.”  என்று கூறினார். அவர்கள் இருவரும் சும்பா சுரனிடத்தில் பார்வதி தேவியின் அழகைப் பற்றி வியர்ந்து கூறினர்.

அப்போது சும்பாசுரனின் ஏவலால் சில படையுடன் மீண்டும் சென்று அழைத்தும் பார்வதி தேவி வராததால், கைபற்றி இழுத்து வரக்கருதினர்.

அப்போது பார்வதி தேவி கோபம் கொண்டதால் தேவியின் தோளில் இருந்து அனேகம் சேனையும், ஒரு சக்தியும் தோன்றி அவ்விருவரையும் கொன்றது.

“சண்டனையும், முண்டனையும் கொன்றதால் தேவி சாமுண்டி என்ற பெயர் பெற்று உலகில் உள்ளோர் தொழ வாழ்க” என அச்சக்திக்கு அருள் செய்தார்.

அவற்றை அறிந்த நிசும்பன், சும்பன் என்போர் அசுரர்களுடன் ஆரவாரித்து வந்து அம்மையை எதிர்த்து அம்புகளை மழையாகப் பெய்ய பார்வதி தேவியார் தன்னுடைய உடலில் இருந்து சப்த மாதர்களையும், சிவதூதியரையும் தோற்றுவித்துப் போருக்கு அனுப்பினார்.

அவர்கள் அசுர சேனையை அழித்தனர். பின் தாமே முதலில்
நிசும்பனையும் பிறகு சும்பனையும் கொன்றார்.

ஆற்றல் உடைய அந்த இரண்டு அசுரர்களுக்கும் இளையவளாகிய குரோதி என்பவளின் மகன் இரத்த பீசன் அவன் தனது உடலில் இருந்து சொட்டும் ஒவ்வொரு துளி இரத்தமும் தரை மேல் விழுந்தால் அத்துளி தன்னைப்போலவே உருவாகும் வரம் பெற்றவன்.

இரத்தபீசன் போர்  செய்தியறிந்து இமைப்பொழுதில் எதிர்க்கத் தொடங்கினான்.

அவனுடன் சப்தமாதர்கள் போரிடுகையில் ஒவ்வொரு துளி ரத்தமும் ஒரு உரு ஏற்றது கண்டு திகைத்தனர்.

உடனே, ஓடி வந்து பார்வதி தேவியிடம் சப்த மாதர்கள் உரைத்தனர்.

தேவியார் கோபம் கொண்டதால் திருத்தோளில் இருந்து காளி தோன்றினாள்.

பார்வதி தேவி, “பெண்ணே! நான் ரத்த பீசனைக் கொல்லுகையில் உதிரும் ஒவ்வொரு துளி இரத்தத்தையும் பூமியில் விழாமல் உன் கைக் கபாலத்தில் ஏந்தி உண்ணக் கடவாய்” என்று கூறினார்.

அவள் உதிரும் இரத்தத்தை உண்ண,  தேவியார் இரத்தபீசனை ஒரு நொடிப் பொழுதில் அழித்தார்.

காளியை மகிழ்வித்து அவளுக்கு சண்டி என்ற பெயரையும்,தெய்வீகமும், சிவபெருமானிடம் நடனம் செய்து அவர் பக்கத்தில் வசித்தல் ஆகிய வரத்தையும் தேவி வழங்கினார்.

பின்னர் சப்த மாதர்கட்கும் அருள் செய்து மறைந்தார்.

காளி அசுரனிடம் அருந்திய ஆற்றலாலும், இறைவியாரிடம் பெற்ற வரத்தாலும் இருமாப்பு அடைந்தார்.

மேலும்,பிற உடலில் உள்ள கொழுப்பு மாமிசம் முதலியவற்றை ருசித்து, மோகினி, இடாகினி,பிசாசு பூதங்கள் ஆகியவை சூல ஒரு வனத்தில் இருந்து மற்றொரு வனத்திற்குப் போய் வந்து கொண்டிருந்தார்.

பின்பு உலகம் முழுவதையும் சுற்றத் தொடங்கினாள் இறுதியில் வடாரண்யத்தின் அருகில் வந்து யாவரையும் துன்புறுத்தி வாழ்ந்திருந்தாள்.

ஒரு நாள் திருவாலங் காடு சென்ற நாரத முனிவருக்கு காளியின் இந்தத் தீச்செயல்களைப் பற்றி கார்க்கோடக முனிவர் கூறினார்.

நாரதர் இச்செய்தியை கேட்டுச் செல்லும் போது காளி அவரை விழுங்க வந்தாள்.

அவர் மறைந்து சென்று திருமாலைக் கண்டு செய்தியைச் சொன்னார். திருமால் சிவபெருமானிடம் செய்தியைச் சொல்ல இறைவன், “இப்பொழுதே அக்காளியின் வன்மை குறைய வடவனம் அடைவோம்” என்று கூறி சுனந்த முனிவர் கார்கோடக முனிவர்களுக்கும் கருணை செய்யக் கருதி ஆலவனம் அடைந்தார்.

சிவபெருமான் வயிரவர் வடிவும் கொண்டதால் அவருடன் வந்த பூத கணங்களுடன் காளியின் படைகள் போர் செய்து எதிர்த்து காளியின் படைகள் தோற்றன.

காளிக்கு இச்செய்தியை சிலர் கூற காளி போர்க் கோலம் கொண்டு வந்து சிவபெருமான் கண்டு பயப்பட, “நடன யுத்தம் செய்வோம்” என கூறினாள்.

சிவபெருமான் அதற்குச் சம்மதித்து முஞசிகேச கார்க்கோடகர்களுக்குத்
தரிசனம் தந்து திருநடனத்துக்குத் தேவருடன் வந்தார்.

நடனப் போட்டிக் காலத்தில் தேவர்கள் அவரவர்களுக்கு உரிய பல வாத்தியங்களை வாசித்தனர்.

இடைவிடாமல் அற்புதம், இரௌத்திரம், கருணை, அருவருப்பு, சாந்தம், சிருங்காரம், பயம், பெருநகை, வீரம் என்னும் நவரசங்களும், அபிநயமும் விளங்க, வாத்தியங்களுக்கு ஏற்பச் சிவனார் சண்டதாண்டவத்தைக் காளியுடன் செய்யும் போது சிவபெருமானின் காதில் இருந்த குண்டலம் வேகத்தால் நழுவிக் கீழே விழுந்தது.

அதனைச் சிவபெருமானே தன் திருவடி ஒன்றினால் எடுத்துத் தன் தலையின் மேல் வைத்து திருநடனம் செய்து காளியைத் தோல்வி அடையச் செய்தார்.

காளி செயலற்று வெட்கிப் பணிந்து நின்றாள்.  சிவபெருமான் “ஈண்டோர் சக்தியாய் இருத்தி” என அனுக்கிரகம் வழங்கினார்.

இரு முனிவரும், எண்ணில் அடங்கா அடியார்களும் தமது தாண்டவக் கோலத்தை எல்லாக் காலமும் தரிசிக்கும் படியாக அங்கே இருக்கின்றார்.


இக்காரணத்தால் இறைவன் சண்ட தாண்டவ மூர்த்தி என பெயர் பெற்றார். அவரை வணங்கி நாம் எல்லா நலமும் பெறுவோம்.

Share.

Leave A Reply