14 -புஜங்கத்ராச மூர்த்தி

கந்தபுராணம்

“ஏந்திய பின்னர் வேள்வி எரியதற் கிடையே யெண்ணில்
பாந்தளங் கொழுந்து தீயோர் பண்ணியினாற் சீற்றம் கொண்டு போந்தன அவற்றை மாயோன் புள்ளினுக் கஞ்சித் தன்பால் சேர்ந்ததோர் பணிகளோடு செவ்விதிற் புனைந்தான் எங்கோன்.”


தாறு என்னும் வனத்தில் வசித்து வந்த முனிவர்கள் தவமே சிறந்தது என்றும், அவர்களது மனைவியர் கற்பை சிறந்தது என்றும் கருதினர்.

கடவுளார் பெருமானாகிய கண்ணுதலைப் பரம்பொருள் என்பதை அறியாமல் மமதை கொண்டு வாழ்ந்திருந்தனர்.

அக்காலத்தில் சிவபெருமான் திகம்பரமாய்ப் பிட்சாடணத் திருக்கோலம் கொண்டும், திருமால் அழகான மோகினி வடிவேற்றும் அவ்விடத்திற்குச் சென்று அந்த முனி பத்தினிகளின் அகந்தையையும், முனிவர்களின் அகந்தையையும்  அழித்தனர்.

உடனே, கொடிய விச மரங்களைக் குச்சியாக்கி, வேம்பு போன்றவற்றினை நெய்யினால்  முக்கி அபசார வேள்வி  செய்தனர் தாருவன முனிவர்கள்.

அதிலிருந்து வெளிவந்த பல பொருட்களையும் பரமபதியின் பேரில் பிரயோகிக்க, சிவபெருமான் அவற்றை எல்லாம் உடை, பாதச் சிலம்பு, ஆயுதம், சிரோமாலை, சேனை முதலியவாக செய்து கொண்டார்.

தாம் பிரயோகித்தவை பயன்படாதது கண்ட தாருவன முனிவர்கள் யாகக்கினியில் இருந்து எழுந்த பாம்புகளையும் சிவபெருமான் மேல் ஏவி விட…

அந்த நாகங்கள் அச்சம் இல்லாமல் உலகையே அழிக்கும் பொருட்டு அதிவேகமாய் தமது காளி, காளஸ்திரி,  எமன், எமதூதன் என்னும் நான்கு நச்சுப் பற்களில் இருந்தும் துளைகள் வழியாக நஞ்சு சிந்திக்கொண்டு சிவபெருமானை அடைந்தன.

சிவபெருமான் முன்னொரு காலத்தில் திருமாலின் வாகனமாகிய கருடனுக்கு அஞ்சி வந்த பாம்புகளுக்கு அடைக்கலம் கொடுத்துத் தமது உடலில் தாங்கி இருந்ததுடன் இந்தப் பாம்புகளையும் ஏற்று “உமது குலத்தாருடன் ஒன்று கூடி வாழுங்கள்” என்று அருள்புரிந்து….

அப்பாம்புகள் பயப்படும்படி தம் திருக்கரத்தால் பற்றிச் சிறிது நேரம் நடித்து, திருக்கரம்,திருவடி,அரை முதலிய இடங்களில் கங்கணம், காலனி,  அரைநாண், கடி சூத்திரம் ஆகியவைகளாக அணிந்து அருளினார்.

தாருவனத்து முனிவர் செலுத்திய பாம்புகள் அச்சுறுத்தியமையால் சிவபெருமான்
புஜங்கத்ராச மூர்த்தி எனத் திருப் பெயர் பெற்றார். அவரை வணங்கி நாமும் நலம் பெறுவோம்.

Share.

Leave A Reply