11 இடபாரூட மூர்த்தி
மூரி வெள்ளியில்
ஏறுவிட்டு இழிந்தனன் முதல்வன்
மேரு மால்வரை
யோருதனி வில்லோடு மேவித்
தேரி னோர்தனி எடுத்துற மிதித்தலும் தெறித்துப் பாரும் அச்சும் அற்று இழிந்தது தேர்த்தடம் பரப்பு
மடுத்து எடுத்தனன்
வெள்விடை யுருக்கொடு மாயன்
எடுத்த அப்பரம் பொறுக்கலான்
இனிருதொளை நாசி
விடுத்தெ ழுந்தன
குருதிநீர் விழத்துணை பிதுங்கி
படுத்த வாய்வழி உமிழ்ந்தனன் குருதிநீர்ப் பரவை
எந்தை யேஉனக்கு அபயமற்று எவ்வுயிர்த் தொகைக்கும்
தந்தை யேஉனக்கு அபயம்எத் தலைவர்க்கும் முதலாம்
முந்தை யேயுனக்கு கபயமென் றிரந்தனர் மொழிந்தார்
இந்து சேகரன் மாயவற் குறித்தனன் இரங்கி
சத்தி யோர்புடை இருக்கவும் யானுமோர் சத்தி
ஒத்தி டப்புரிந்து அருளினை யாதுபோ லுடையாய்
வித்த கத்தனி ஏறுஉளை யாயினும் வினையேன் அத்த னித்திற லேறெனத் தாங்குதற்கு அருள்வாய்.
திரிபுர அசுரர்கள், தேவர்களையும் உலக மக்களையும் துன்புறுத்தத் தொடங்கினர். துன்பம் தாங்க மாட்டாத தேவர்கள் அசுரர்களை அடக்க சிறந்தவர் சிவபெருமானே என்ற முடிவுக்கு வந்தனர்.
திருக்கையிலாயம் அடைந்த தேவர்கள் தங்களது வருகையை சிவபெருமானிடம் தெரிவிக்க வேண்டி நந்தி தேவரை வணங்கினர்.
நந்தி தேவரும் சிவபெருமானிடம் சென்று தேவர்கள் வருகையைப் பற்றி கூறினார்.
அசுரர்கள் செய்யும் கொடுமையை கேள்விப்பட்ட சிவபெருமான். அசுரர்கள் மேல் போர் கொள்ளக் கருவிகளைத் தயார் செய்ய கட்டளையிட்டார்.
தேவர்களும் போர் கருவிகளைத் தயார் செய்து சிவபெருமானிடம் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.
சிவபெருமானும், உமா தேவியாருடன் தரும தேவதையாகிய வெண்மை நிறம் கொண்ட இடப வாகனத்தின் மேல் ஏறி திருக்கைலாய மலையில் இருந்து இறங்கி வருகின்றனர்.
நான்முகன், திருமால், மற்றும் விண்ணவர்கள் சிவனாரின் இத்திருக் காட்சியை கண்டு தலையின் மேல் கைகளை குவித்து சிவதுதிகளைப் பாடி மகிழ்ந்தனர்.
தேவர்களால் செய்யப்பட்ட தேரினைக் கண்ட சிவபெருமான் இடப வாகனத்தில் இருந்து இறங்கி மேருமலையை வில்லாகக் கொண்டு தேரில் ஏறி மிதித்தவுடன் தேரின் அச்சு முறிந்தது.
அது கண்ட திருமால் சிவபெருமானிடத்துக் கொண்ட அன்பின் பெருக்கால் அப்பொழுதே ஒரு இடப உருவம் கொண்டு தாங்கினார்.
சிவனைத் தாங்கி நின்ற திருமால் “என்னைத் தவிரச் சிவனை தாங்கும் சக்தி யாரிடம் உள்ளது. எனது தவமே சிறந்தது. எனக்கு அளித்த வரமே உலகிலேயே சிறந்தது.”
என இறுமாந்திரந்தார்.
பக்திக்கு முதலிடம் கொடுப்பவனாகிய சிவனார், திருமாலின் மனதில் இருந்த மமதையை அறிந்து ஒரு திருவிளையாடல் புரிந்தார்.
அதனால், திருமால் ஐயனைத் தாங்க மாட்டாமல் இரு செவிகளும், வாய் வழியிலும், மூக்கு வழியிலும் இரத்தம் சொட்ட இரு கண்களும் பிதுங்கக் கால்களை மடித்து நிலத்தில் விழுந்தார்.
அது கண்ட தேவர்கள் பயந்து சிவ நாமங்களைகா கூறிச் சிவத்துதி செய்யலாயினர்.
திருமாலும் தம்மை மன்னிக்கும்படி வேண்டினார்.
திருமாலின் மமதை அழிந்ததைக் கண்ட சிவபெருமான் மனம் குளிர்ந்து பூமியில் இறங்கினார். ஈசன் இறங்கிய பின்னர் திருமால் மீண்டும் வலிமை பெற்று நின்றார்.
இது கண்ட தேவர்கள் திகைத்து நின்றனர். திருமாலை நோக்கி ‘உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’ எனச் சிவபெருமான் கேட்டார்.
இதைக் கேட்ட திருமால் மனம்மகிழ்ந்து ‘தேவனது வாம பாகத்திலிருந்து பிரியாது ஒரு சக்தியாக இருக்கவும், தேவருக்குத் தொண்டாற்றும் தருமவிடை ஒன்று இருப்பினும் மால் விடை என நானும் தங்களைத் தாங்கும் வலிமை பெற வேண்டும்’ என வேண்டினார்.
அருட் பெருங்கடலாகிய சிவன் தமது அடியவர்களுள் சிறந்த திருமாலுக்கு இந்த வரத்தையும், வலிமையையும் வரமாகக் கொடுத்து அருளினார். மேலும், திருமாலின் விருப்பப்படி அரியாகிய இடபத்தை வாகனமாகக் கொண்டு அதன் மேல் ஏறி அமர்ந்தார். எனவே, சிவபெருமானுக்கு
இடபாரூட மூர்த்தி என ஒரு திருப் பெயர் உண்டாயிற்று . எனவே, அவரை வணங்கி நாம் எல்லா நலமும் வரமும் பெறுவோம்.
