அம்மா அப்படிச் சொன்னது எனக்குள் ஏகக் கோபத்தை உண்டாக்கியது. 

”ச்சை…. என்ன மனுஷி இவள் ?” என மனதிற்குள் நினைத்துக் கொண்டு கடுமையான முகத்தோடு சுடிதார் துப்பட்டாவை கோபமாய்த் திருகியபடி ,அண்ணன் திவாகரைப் பார்த்தேன். 

அவன் முகமும் கிட்டத்தட்ட அதே போல் தான் இருந்தது. பின்னே… இருக்காதா ? ‘ஒரு தனியார் கம்பெனியில் முப்பத்தியேழு வருடம் மாடாய் உடைத்து ஓடாய்த் தேய்ந்து …. இறுதியில் ஹெட் கிளார்க் என்கிற அந்தஸ்தை எட்டிப் பிடித்த கையோடு அப்பாவுக்கு இன்று பணி நிறைவு பிரிவுபசார விழாவைஎல்லாம் முடித்துக் கொண்டு கையில் பூமாலை.. சந்தன மாலை… இதர பரிசுப் பொருட்களோடு வந்திறங்கிய அவர் வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாய் அம்மா அப்படிச் சொன்னது யாருக்குமே கோபத்தைத்தான் ஏற்படுத்தும்.

”த பாருங்க .. என்னோட பெரிய அண்ணன் மகன் கே.பி.எஸ்.காலேஜ்ல அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜராயிருக்கான் .. அவன் கிட்ட சொல்லி வெச்சிருக்கேன்… அவங்க அலுவலகத்தில் கணக்கு வழக்குப் பார்க்கறதுக்கு உங்க மாதிரி பணி நிறைவு ஆளுங்க தான் வேணுமாம்… அதனால இன்னிக்கு சாயந்திரமோ.. இல்ல நாளைக்குக் காலையிலோ… போய்ப் பாருங்க … ஒ.கே. ஆயிடுச்சுன்னா உடனே சேரணுமாம்” 



தன் ஆயுளில் பாதிக்கும் மேலான காலத்தை உழைப்பிற்கே தந்து …

உதிரத்தைக் கொட்டிய மனுஷன் ..இன்று தான் அந்த இருக்கச் சிறையிலிருந்து விடுதலை பெற்றிருக்கான்… பாவம்.. முப்பத்தியேழு வருஷம் நமக்காக உழைச்ச ஜீவன்.. 

ஒரு மூணு மாசமோ.. ஆறுமாசமோ ..ஓய்வு எடுக்கட்டுமே ..அதற்குப் பிறகு என்ன செய்யலாம்கறதைப் பற்றி யோசிக்கிலாமே.. என்று தோணாதா இந்த அம்மாவுக்கு ? 

..ஹும் ..இந்த அம்மாவோட தேவை பணம் ,..பணம் ..அது மட்டுமே போதும் … அப்பாவோட உடம்பைப் பத்தியோ..மனசை பத்தியோ துளிக்கூட கவலையில்லை..கர்மம்..

என்ன ஜென்மமோ ?”அம்மாவின் அதிகாரத் தோரணையுடன் அந்தக் கட்டளையை அப்பா சிரித்த முகத்துடன் கேட்டுக்கொண்டதோடு நில்லாமல், 

” அப்படியா கவுரி ?.. அப்படின்னா இன்னிக்கு சாயந்திரமே நான் போய்ப் பர்த்துடறேனே ?… பீளமேடு வ.உ.சி. காலனிலதானே வீடு ?” என்னு கேட்க .’..ம..அதே தான்… ரங்கநாதன் 

அவன் பேரு ””சரி..சரி..”ஏன் இந்த அப்பாவும் இப்படி இருக்கிறார் ?.. அவராவது சொல்லாமல்ல ..”ஏண்டி..இன்னிக்குதாண்டி பணிநிறைவாகி வந்திருக்கேன்..அதுக்குள்ளாற ஏண்டி ஆரம்பிக்கிற உன்னோட ராமாயணத்தை ?.. நான் கொஞ்ச நாளைக்கு ஜாலியா ஓய்வெடுக்கப் போறேன்..அதுக்கப்புறம் பேசு …” ன்னு.

தொடர்ந்து அந்த இடத்தில் இருந்து அவர்களுக்கிடையிலான உடையாடலைக் கேட்டால் எனக்குள் ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் கோபம் என்னையும் மீறி வெளிப்பட்டு விடுமோ..என்கிற அச்சத்தில் அங்கிருந்து நகர்ந்தேன்.

அண்ணனும் என் கூடவே நடந்து உள் அறைக்குள் வர ,அவனிடம் கொட்டினேன் என் ஆதங்கத்தை..என் கொந்தளிப்பை. 

என் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவன் இன்னொரு கருத்தையும் சொன்னான்.”பொதுவா ..வீட்டுலே ஆண் வாரிசு இல்லாமலோ…அல்லது ஆண் வாரிசு இருந்தும் தான் ரிடையர்டு ஆகும் காலத்தில் அவன் சம்பார்த்தனைக்கு வராமல் இருந்தாலோ தான் சில பெரியவர்கள் ஓய்வுபெற்ற பிறகும் வேலைக்குப் போவார்கள்.. 

இங்க தான் நான் வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டேனே.. நான் காப்பாத்த மாட்டேனா இந்தக் குடும்பத்தை ?…நான் பண்ணி வைக்க மாட்டேனா என் கூடப் பொறந்தவளோட கல்யாணத்தை ?””அண்ணா 

நான் இதை விடப் போறதில்லை. அண்ணா,  அப்பா.. வெளியே போகட்டும்..

அப்புறம் வெச்சுக்கறேன் இந்த அம்மாவுக்கு கச்சேரி ”மாலை ஆறு மணியிருக்கும். அப்பாவும் வெளியே போயிருந்தார்.. அண்ணனும் வெளியே போயிருந்தான், தனியாக சமயலறையில் இருந்த அம்மாவிடம் போய் ஆரம்பித்தேன். 

பொறுமையாய் என் கத்தல் முழுவதையும் கேட்டு முடித்தவள்,’அவ்வளவுதானா?…இன்னும் ஏதாவது இருக்கா ?” என்பது போல் குறுஞ்சிரிப்புடன் என்னைப் பார்க்க ,”நான் கோபமாய்க் கத்திட்டிருக்கேன்..நீயென்ன சிரிக்கிறே ?”

”பின்னே ?..சிரிக்காம என்ன பண்றது.. அடியே இவளே.. நீ என்னைப் புரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதானா ?..சரி நானே சொல்றேன் கேட்டுக்கோ..பொதுவாகவே..ரிடையர்டு ஆகிற ஆண்கள் மனசளவுல திடும்னு சரிஞ்சிடுவாங்க .. 

”நமக்கு வயசாயிடுச்சு ..நாம் இனி எதுக்கும் லாயக்கில்லை .. ன்னு அவங்க ஒரு வினாடி நினைச்சிட்டாப் போதும் ..அவ்வளவு தான் ..அவங்க உடல் ஆரோக்கியம் தன்னாலே போய்டும்..எப்படியும் வேலை இல்லாததினால் எதோ ஒரு சமயத்துல சின்னதா ஒரு பணப் பிரச்சினை வரும்..அப்படி வந்திட்டாப் போச்சு ..என்னவோ தனக்கு பெரிய வறுமை வந்திட்ட மாதிரித் தோணும் ..

அது அப்படியே வளர்ந்து கடைசில ஆளையே முடிச்சிடும் ..”சொல்லிக் கொண்டிருந்த அம்மாவின் முகத்தையே ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன்.”

அதனால ரிட்டயர்டு ஆனாலும் தன் உழைப்பை நிறுத்தாமல் ..அந்த ஓட்டத்தில் எந்தவிதத் தடையையும் ஏற்படுத்தக் கொள்ளாமல் ..தொடர்ந்து உழைப்பு ரேசில் ஓடிக் கொண்டேயிருக்கிற போது..உடல் மற்றும் மன ஆரோக்கியத்திருக்கு எள்ளளவும் சேதாரம் ஏற்படாது…அதனால் தான் அப்பாவை அந்த ஓட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஓடச் சொன்னேன்…

என் உல் மன எண்ணத்தைப் புரிந்து கொண்டதால் அவரும் உடனே சம்மதிச்சு…உடனே கிளம்பிப் போயிட்டார்…..அது தாண்டி எங்களோட இத்தனை வருட தாம்பத்தியத்தின் வெற்றிச் சூத்திரம் 

”அம்மாவின் பேச்சு என்னை வியப்பின் எல்லைக்கே கொண்டு போனது.”சமயலறையில் வெறும் பாத்திரங்களோடும்…கேஸ் அடுப்போடும் ..குக்கரோடும் மட்டுமே புழங்கிக் கொண்டிருக்கும் அம்மாவிற்கும் இப்படியோடு மனோதத்துவமா?

Share.

Leave A Reply