மலைக்கோயில் மர்மம் 55
முன்கதை சுருக்கம்
கோடை விடுமுறையில் கிராமத்தில் இருக்கும் இராஜா, ரகு ஆகியோர் அங்குள்ள ஒரு மலை மீது ஏறிப்பார்க்கச் செல்கிறார்கள் அங்கு பல அதிசயங்கள் புதைத்து கிடப்பதை காணுகிறார்கள். அவற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் .எனவே அந்த இடத்திற்கு தக்க துணையுடன் செல்கிறார்கள். ஆனால் மலையின் எந்த பகுதியிலும் வழியைக் காண முடியவில்லை .ஒருவழியாக பாறை படிவங்களில் உள்ள கோடிட்ட இடங்களைக் கொண்டு உள்ளே செல்வதற்கு வழி தெரிகின்றதா என்று உற்று பார்க்கிறார்கள். இந்த நேரத்தில் சில ஆட்களுடன் மலை அடிவாரத்திற்கு செல்கிறார் முத்துச்சாமி
மலை அடிவாரப்பகுதியில் குறிப்பிடட்ட இடத்தில் சுற்றி சுற்றிப்பார்த்த அவர்கள் உள்ளே எப்படி செல்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். பாறைகளைக் கொண்டு செயற்கையாக மூடி வைத்துள்ளதை யூகிக்க முடிகிறது. இருந்த போதிலும் மலையின் அடிப்பகுதிக்குள் சென்றால்தான் அங்கு என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
அங்கே மறைவிடமாக பயன்படுத்தி பொருட்களை வைத்து இருந்தவர்கள் மிகவும் கைதேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இரண்டு அடுக்குகளாக பாறைகளை மூடி வைத்து இருக்க வேண்டும்.அப்போது அங்கே கிராமத்தில் இருந்து தாத்தாவும் அவருடன் இரண்டு வயதானவர்களும் வந்து இருந்தனர்.அவர்களுக்கு அந்த மலை குகை பற்றி ஓரளவு தகவல் தெரிந்து இருக்க வேண்டும். அதற்காக அவர்களை முத்துச்சாமி அழைத்துக் கொண்டு வந்து இருக்க வேண்டும் என்பதை ஊகிக்க முடிந்தது.
அந்தப்பெரியவர்களும், மலையில் வழி இருக்குமா என்று இவர்கள் சந்தேகப்பட்டு பார்த்த இடத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தனர் . அப்போது அனுபவம் வாய்ந்த அமாவாசையும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். வந்தவுடன் முத்துச்சாமி தனது பேரன்களை கடிந்து கொண்டார். ஆனால் இப்போது அவருக்கும் இந்த மலையின் ரகசியம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் தானாகவே தொற்றிக் கொண்டது.
இப்போது அந்த கிராமத்து பெரியவர்கள், கடப்பாரை, மண்வெட்டியுடன் என ஐவர் குழு, இராஜா , ரகு , இளைஞர்கள் , மாரியப்பன், ஆடு மேய்க்கும் அமாவாசை ஆகியோர் என ஒரு பத்துப்பேர் கொண்ட ஒரு சிறிய கூட்டமே திரண்டுவிட்டது .எல்லோருக்குமே மலை மர்ம குகை போல் தென்பட்டது. ஆனால் உள்ளே செல்வதற்கான சரியான வழி மட்டும் தென்படாமல் புரியாத புதிராகவே தெரிந்தது .
முத்துச்சாமியுடன் வந்த ஒருவர் மட்டும் மிக தீவிரமாக கவனமுடன் பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் அந்த வட்டாரத்தில் மிகவும் திறமையான கல் சிற்பி ஆவார். அவர் பெயர் கல் மூக்கன் என்ற பெயரும் உண்டு .அவருக்கு கல்லின் தன்மை அவற்றின் உறுதி போன்றவற்றை அறிந்து கொள்ளும் ஆற்றல் உண்டு . எனவே தான் அவர் ஒவ்வொரு பாறை படிவங்களையும் , சதுர வடிவ கற்களையும் ஆராய்ந்து கொண்டு இருந்தார்.
கல் மூக்கன் மற்றும் அவருடன் வந்தவரும் ஏற்கனவே மண் பூச்சு அகற்றப்பட்ட இடத்தில் கற்களை எதைக்கொண்டு மூடி இருப்பார்கள் என ஆராய்ந்து கொண்டு இருந்தார்கள் .அப்போது அந்த இடத்தில் இரண்டு பாறைகளுக்கும் இடையே வெண்மையான கோடு தெரிந்தது . அந்த கோடு உலோக கலவை கொண்டுபாறைகளை இணைத்து இருப்பது மேலோட்டமாக தெரிய வந்தது .
அதைப்பார்த்த கல் மூக்கன் , கிராமத்து பெரியாரை அழைத்தார். ஐயா இந்த பாறைகளை இணைப்பதற்கு மிகவும் திறமையான உலோக கலவையை வைத்து இருக்கிறார்கள். அத்தோடு பாறைகளை தட்டிப்பார்த்ததில் பாறைகளைத் தகர்த்தால் உள்ளே வெற்றிடம் அல்லது உள்ளே பொருட்கள் இருக்கலாம்.. காற்று உள்ளே இருப்பதால் பறைகளை உளி கொண்டு தட்டிப்பார்க்கும் போது ஏற்படும் ஓசையைக் கொண்டு இதை தெரிந்து கொண்டேன்.
இப்போது பாறைகளின் இடுக்குகளில் இருந்து இணைத்துள்ள கலவையை இளக வைப்பதன் மூலம் அங்கே ஏற்படும் இடைவெளியில் பாறைகளை மிக எளிதாக அகற்ற முடியும்.அத்துடன் உள்ளே நுழையும் வழிபதினைந்து அடி உயரமும் , இருபது அடி அகலமும் கொண்ட பெரிய வழியாக இருக்கலாம் .
பாறைகளை தட்டிப்பார்த்ததில் இருந்து இதை ஊகிக்க முடிகிறது.”கல் மூக்கன் ” அவர்களே சரி இந்த வழியை உடைப்பதற்கு என்ன உபாயம் இருக்கிறது கூறுங்கள்” என்று கேட்டார் முத்துச்சாமி .
”அப்படி என்றால் ராஜா சந்தேகப்பட்டு கூறியது போல் உள்ளே ஏதாவது பொருள்கள் அல்லது வெற்றிடம் இருக்கலாம் .எனவே நாம் அனைவரும் கவனமாக இருந்து பாறைகளை உடைப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லவா ? என்றார் முத்துச்சாமி.
”ஆம் ஐயா , நிச்சமயாமாக தெரிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு நிபந்தனை உள்ளே செல்லும் வழியை அடைத்து வைத்திருக்கும் பாறைக் கற்கள் ஏதாவது பிடிப்பு இல்லாமல் இருக்க முடியாது . எனவே இதை பக்குவமாகத்தான் அகற்ற வேண்டும். இல்லை என்றால் கற்கள் சிதறும் போதுஆபத்து ஏற்படலாம். கொஞ்சம் பொறுங்கள் நான் இன்னும் கொஞ்சம் நன்றாகப்பார்த்து விட்டு உங்களுக்கு சொல்கிறேன்” என்றார் கல் மூக்கன் .
கல் மூக்கனும் அவருடன் வந்தவரும் அந்தப்பகுதியை நன்றாக ஆராய்ந்து பார்த்தனர் . பின்னர் செம்மண் கலவையை வைத்துக்கொண்டு உளி மூலம் ஒவ்வொரு இடமாக பார்த்துக் கொண்டு கலவையால் கோடு போட்டபடி வந்தனர் . அதை அளந்து பார்த்தபோது ஏறக்குறை இருபது அடி அகலம், பதினைந்து அடி உயரம் இருந்தது .
முத்துச்சாமியையும், இராஜா , அமாவாசை ஆகியோரை அருகில் அழைத்து ”இந்த அளவுக்கு இது பாறைகளால் மூடப்பட்டு இருக்கிறது. இந்த இடத்தில் உள்ள கற்களை அகற்றினால் உள்ளே எவ்வளவு பெரிய அளவுக்கு இடம் உள்ளது, உள்ளே என்ன இருக்கிறது’ என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றார்.கல் மூக்கன் .
அத்துடன் இங்கே பாறைகளை இணைத்து வைத்துள்ள கலவை அவ்வளவு லேசானது அல்ல ஈயத்துடன் வேறு ஒரு பொருள் கலந்து இந்தக் கலவையை உருவாக்கி இருக்கிறார்கள். இதன் உருக்குத் தன்மையை நன்றாக ஆராய்ந்த பின்னர் தான் கலவையை உருக்க முடியும். என்றார்.
இந்தக்கலவை உருக்குவதற்கு வரகு வைக்கோல் பயன் படுத்தினால் பாறை வெடித்து விழாமல் இந்த உலோக கலவை மட்டும் உருகி விடும் ,’இதை எனது பாட்டனார்கள் செய்ததாக எனது தந்தை ஒரு முறை கூறி இருக்கிறார். நாமும் அவ்வாறு முயற்சித்துப் பார்க்கலாம் என்று கூறினார்.கல் மூக்கன் ,
அனைவருக்கும் இந்த யோசனை சரியெனப்பட்டது. வரகு வைக்கோலும் மற்றும் சில முக்கிய மூலிகை செடிகளின் காய்ந்த சருகுகளையும் சேகரித்துக் கொண்டு முயற்சிக்க அனைவரும் முடிவு செய்தனர்.
தொடரும்….