வெற்றி என்பது என்ன அவ்வளவு சுலபமான ஒன்றா ? வெற்றி பெற்றவர்கள் எல்லாம் என்ன கண்ணை மூடிக்கொண்டு வாழ்க்கையில் வெற்றியைத் தொட்டுவிட்டார்களா ?
நம்மில் நிறையப் பேர் நினைத்துக்கொண்டு இருக்கோம், வெற்றிங்கிறது என்னமோ ஒரு சாலையைக் கடந்து ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் போகிறமாதிரிதான் என்று… நம்முடைய மனசு வெற்றி அடைஞ்சவங்களைப் பார்த்து ஏங்குகிறது, நம்முடன் படிச்ச பையன் இன்றைக்கு நல்ல வேலையில் இருக்கான், நன்றாகச் சம்பாதிக்கிறான். நம்ம வாழ்க்கையில் ஒரு நல்லது நடக்கவில்லையே, நம்ம வாழ்க்கையிலே எப்போ ஒரு அதிர்ஷ்டம் வரப்போகிறதுஎன்று காத்துக்கொண்டு இருக்கிறோம் .
அவனுக்கு எப்பவுமே ஒரு அதிர்ஷ்டம் இருக்கு, எதை பண்ணினாலும் ஜெயிக்கிறான். நம்ம வாழ்க்கையிலே ஏன் அந்த அதிர்ஷ்டம் வரலேன்னு இராத்திரி பகலா யோசிக்கிறோம். கோயில் கோயிலா போய் என்ன என்னமோ பண்ணி அந்த அதிர்ஷ்ட தேவதை நம்ம வாழ்க்கையிலே வர ரொம்பவே கஷ்டப்படுகிறோம்.
நல்லா யோசிச்சுப்பாருங்க வெற்றி என்பது ஒரு நேர் கோடு அல்ல, சுலபமாகக் கிடைப்பதற்கு . . வெற்றி அடைஞ்சவங்க வாழ்க்கையைப் புரட்டிப் பாருங்க, வெற்றியாளர்களின் பின்னால் இருப்பது கடின உழைப்பு, விடா முயற்சி மற்றும் சந்தர்ப்பத்தை சரியா பயன்படுத்துதல்.
இந்த மூணு விசயம் கண்டிப்பாக ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் இருக்கும்.
கடின உழைப்பு மட்டும் வெற்றியைத் தராது, எதற்காக நம்முடைய கடின உழைப்பு என்பதைப் பொறுத்து வெற்றி நிர்ணயிக்கப் படுகிறது. நம்முடைய கடின உழைப்பு எல்லா நேரங்களிலும் வெற்றியைத் தராது, சில தோல்விகள், ஏன் பல தோல்விகளை நாம் கடந்து தான் வரவேண்டும். அதுதான் நமது விடா முயற்சி. தோல்வியால் மனம் தளராமல், தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து விடா முயற்சியுடன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்.
விடா முயற்சியுடன் கூடிய கடின உழைப்புடன் காலத்தை, சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன் படுத்த வேண்டும் . காலமும், சந்தர்ப்பமும் திரும்ப வராதவை, இன்றைக்கு இல்லைன்னா நாளைக்கு புதிய நேரம், புதிய சந்தர்ப்பம் தான் வரும்..
இன்றைக்கு நாம் வீணாக்குகிற ஒவ்வொரு மணித்துளியும், ஒவ்வொரு சந்தர்ப்பமும் திரும்ப வரப்போவது இல்லை.வெற்றி என்பது வீட்டுலே இருந்து கொண்டு, அன்னைக்கு அந்த சந்தர்ப்பத்திலே நான் மட்டும் ஒரு தொழில் தொடங்கி இருந்தால் இப்ப எப்படி இருப்பேன் தெரியுமான்னு அங்கலாய்ப்பது இல்லை..
வெற்றி என்பது நம்முடைய வாழ்க்கையிலே வரும். சந்தர்ப்பங்களை ஆராய்ந்து, நம்முடைய தகுதி, நம்முடைய திறமையை தக்க சமயத்திலே விடா முயற்சியோடு கடின உழைப்பைக் கொடுத்தால் வெற்றி நம்ம கையிலே வரும்.
-
பரமபத விளையாட்டு இதைத்தான் சொல்லுது . வாழ்க்கைங்கிறது வெற்றி, தோல்வி நிறைந்தது. விடா முயற்சியோட விளையாட விளையாட ஒருநாள் நாம வெற்றியை அடைவோம். முக்கியமான விசயம் எவ்வளவு பாம்பு கொத்தினாலும், விடா முயற்சியோடு தொடர்ந்து விளையாடனும். வெற்றி கிடைக்கிற வரை தொடர்ந்து விளையாடனும்.
குழந்தைகளோட பரமபதம் விளையாட்டு விளையாடுங்க, அப்படியே வாழ்க்கையோட தத்துவத்தையும் கொஞ்சம் அவங்களுக்குச் சொல்லிக் கொடுங்க.
-
வாழ்க்கையில் நீங்க தொலைத்த சந்தர்ப்பத்தைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. இனி வரும் சந்தர்ப்பங்களை விடா முயற்சியுடன் ஒரு கை பாருங்க, வெற்றி என்பது ரொம்ப ரொம்ப பக்கத்துல தான் இருக்கு, தொலைத்து விடாதீர்கள்.