சின்ன வயதிலே எல்லோரும் கிரிக்கெட் விளையாடப் போவாங்க, கால்பந்து ஆர்வமாக விளையாடுவாங்க, ஓட்டப்பந்தயத்திலே எல்லாம் பரிசு வாங்குவாங்க. சின்ன வயதில் பரிசு வாங்குகிற எல்லோரும் ஓட்டப்பந்தய வீரர்களாக வருவது இல்லை. கிரிக்கெட் விளையாடுகிற எல்லோரும் திறமையான விளையாட்டு வீரர்களாக மாறுவதில்லை .
கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கள், நன்றாகப் படிக்கிற எல்லோரும் நாளைக்கு மருத்துவராகவோ இல்லை என்ஜினீயர் ஆகவோ போகனுமுன்னு கனவு காண்கிறார்கள்., கனவு காணுகிற எல்லோரும் அவர்கள் நினைக்கிற மாதிரி மாறி விடுகிறார்களா ?
குழந்தைகளை விடுங்கள், நம்ம வாழ்க்கையிலே நமக்கு எவ்வளவு கனவு, ஒவ்வொரு நேரத்திலும் ஒருவிதமான கனவு, நம்ம காணுகிற கனவு எல்லாம் நடந்து விடுகிறதா? ஒரு சாதாரண மனிதனுக்கு ஒரு நாளைக்கு 50,000 எண்ணங்கள் உருவாகிறது, ஒரு நிமிடத்துக்கு 50-60 எண்ணங்கள் நம்ம எண்ணத்தில் உதிக்கிறது, ஒரு நிமிடம் யோசிச்சுப் பாருங்கள், நம்முடைய மூளை எவ்வளவு விசயங்களை உள்வாங்குகிறது. எவ்வளவு விசயங்களை அலசி ஆராய்கிறது.
ஒருநாளைக்கு 50,000 எண்ணங்கள்
ஒரு வாரத்துக்கு 3,50,000 எண்ணங்கள்
ஒரு மாதத்திற்கு 15,50,000 எண்ணங்கள்
15.5 லட்சம் எண்ணங்கள் ஒரு மாதத்திலே நமக்குள்ளே வந்தா, எப்படி நம்மால் ஒரு கனவை, ஒரு முயற்சியை, ஒரு வெற்றியை அடைய முடியும்? இது எப்படி வெற்றியோட உச்சத்தைத் தொட்டவுங்களால் முடிஞ்சது? எப்படி நம்மை வெற்றியை நோக்கி நகர்த்துவது?
ரொம்ப சின்ன விசயம், உங்களுக்குள்ளே வருகிற எண்ணங்களை எவ்வளவு அதிகமாக ஒரே ஒரு கனவை நோக்கி எண்ணுகிறீர்களோ, அவ்வளவு தூரம் நீங்கள் வெற்றியை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உதாரணத்துக்கு, ஒரு நாளைக்கு வரும் 50,000 எண்ணங்களில், 30,000 எண்ணங்கள் உங்களுடைய கனவை நோக்கி இருந்தால் கண்டிப்பாக உங்களால் நீங்கள் நினைப்பதை அடைய முடியும்.
இப்போது இருக்கிற இந்த உலகம் உங்களுடைய எண்ணங்களை உங்களுடைய இலட்சியங்களில் இருந்து பிரித்து வைக்கிறது, உங்களுடைய எண்ணங்கள் எவ்வளவு பிளவுபட்டு இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்களால் வாழ்க்கையிலே ஜெயிக்க முடியாது.
எண்ணங்களை ஒருமுகப் படுத்துவது என்பது ஒரு கலை. அதை நாம் பழக்கப் படுத்த வேண்டும் .நமது எண்ணங்கள் ஒருமுகப் படும் போது, நமது கனவுகள் நினைவாகும்.
-
எண்ணங்களை ஒருமுகப் படுத்த நம்மை நாமே பழக்கப்படுத்த வேண்டும் , உதாரணத்துக்கு, அமைதியாகத் தூங்கப்போவதற்கு முன்னால், உங்களுடைய கனவைப் பற்றி ஒரு நிமிடம் முழுமையாக யோசியுங்கள் ., அடுத்த நாள் 2 நிமிடம் யோசியுங்கள் , ஒரு வாரத்துக்கு 5 நிமிடம் உங்கள் கனவைப் பற்றி மட்டும் யோசியுங்கள். மேஜிக் நடக்கும், உங்களை அறியாமலே பகலில் கூட உங்கள் கனவைப் பற்றி யோசிக்கத் தொடங்குவீர்கள் . முயற்சி செய்து பாருங்கள்.
-
குழந்தைகளுக்கு எண்ணங்களை ஒருமுகப் படுத்தச் சொல்லிக் கொடுங்கள், தொலைக்காட்சி, தொலைபேசி இல்லாமல் ஒரு விளையாட்டை மட்டும் பத்து நிமிடம் விளையாடச் சொல்லுங்கள், ஒரு விளையாட்டை மட்டும் 30 நிமிடம் விளையாடச் சொல்லுங்கள், அவர்களுடைய மனசு, எண்ணங்கள் தானாகவே ஒருமுகப் படும்.