மதிய உணவிற்கு வீட்டற்கு வந்திருந்த திவாகர் மனைவியிடம்கேட்டான். "என்ன ஜோதி" கொழந் தைக ரெண்டையும் காணோம்’   .
"பக்கத்துல ஆடிட்டரம்மா வீட்டுக்குப் போயிருக்குக"என்றாள் கணவனுக்கு சாப்பாடு பரிமாறிக்கொண்டே…

"ம்,  அங்கெல்லாம் எதுக்கடி அனுப்பறே ?அவங்கெல்லாம் ரொம்ப வசதியானவங்க ? நம்ப குழந்தைக வேறு ரொம்ப குறும்பு,எதையாவது விலையுயர்ந்த பொருட்களை எடுத்துப் போட்டு உடைச்சு  வெச்சுடிச்சுகன்னா,வீண் மனச்சங்கடம்" சாப்பாட்டை  உருட்டியபடியே சொன்னான் திவாகர்.

"இல்லங்க அந்தம்மாவே வலியவந்து நம்ம குழந்தைகளை அவங்க வீட்டுக்கு வரச் சொல்லிக் கேட்டு கூட்டிட்டுப் போனாங்க "
திவாகர்  நெற்றி சுருக்கி மனைவியை பார்க்க " ஆமாங்க அவங்க வீட்டிலேயும் ஒரு குழந்தை இருக்குதல்ல ? அது கூட விளையாடத்தான் கூட்டிட்டுப் போயிருக்காங்க ‘


அதற்கு மேல் எதுவும் பேசாமல் மவுனமாய் சாப்பிட்டுக்கொண்டிருந்த திவாகரின் முகபாவனை,ஜோதிக்கு எரிச்சலாயிருந்தது."எப்பவும் இப்படித் தான்.பணக்காரங்க கூட பழகக்கூடாது, பேசக்கூடாது.அவங்க எல்லாம் சிங்கமா? புலியா ? நம்மை கடிச்சுதிங்க ? தனக்குள் சொல்லிக்கொண்டாள் ஜோதி.

அடுத்த வாரத்தில் ஒரு நாள் உயர் அதிகாரியுடன் போனில் பேசிக்கொண்டு இருக்கையில் குழந்தைகள் கத்தி கலாட்டா செய்து கொண்டு இருந்தன. உடனே கோபமடைந்த திவாகர் ,"போங்கடா ஆடிட்டரம்மா வீட்டுக்குப் போயி கொஞ்ச நேரம் விளையாடிட்டு வாங்க" என்று சொன்னான் திவாகர்.
அப்போது சமையலறையில் இருந்து பாய்ந்து வந்தாள் ஜோதி."வேண்டாம், வேண்டாம் அங்கெல்லாம் போக வேண்டாம்..இங்கேயே நம் வாசலிலே விளையாடட்டும்"என்றாள்.

இதற்குள் தனது பேச்சை முடித்துக்கொண்ட திவாகர் ஜோதியின் பேச்சில் தெரிந்த நெருடலை உணர்ந்து, "ஏன்? என்ன அங்கே போய் குறும்புத்தனம் செய்து விட்டீர்களா ‘? என்றபடி குழந்தைகளை அதட்டலாக பார்த்தான் திவாகர்.
"அதுகளை ஏன் அதட்டறீங்க?அவர்கள் ஒன்னும் பண்ணலை என்றாள்.

"பிறகு ஏன் போகவேண்டாம்னு தடை போடறே"என்றான் திவாகர்.

"அது வந்துங்க ஒரு நாள் ஆடிட்டரம்மா வீட்டுக்குப் போன குழந்தைகள் ரெம்ப நேரமாயும் வரவில்லை என்பதால் கூட்டிட்டு வர நானே நேரில் போனேன்.அப்போது அவங்க வீட்டில் ஆடிட்டரம்மாவும் வேறு ஒரு பணக்கார பெண்மணியும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.சரி விருந்தினர் இருக்கும் போது நாம் ஏன் போகவேண்டும் என்று தயங்கியபடி குழந்தைகளை கூப்பிட வாயெடுத்த போது,அவங்க பேசிக்கொண்டு இருந்தது என் காதில் விழுந்திச்சு அது நம்ம குழந்தைகளைப் பற்றிய பேச்சாக இருந்ததினால் கூர்ந்து கவனித்தேன்.

‘என்ன மேனகா இது,எதுக்கு இந்த மாதிரி லோ கிளாஸ் குழந்தைகளை எல்லாம் உன் குழந்தை கூட விளையாட விடறே ‘அந்தப் பெண்மணி ஆடிட்டரம்மாவிடம் கேட்க…

"சேச்சே நான் அதுகளை எல்லாம் என் குழந்தையோடு விளையாடவோ,தொடவோ விடுவதில்லை கொஞ்சம் தள்ளி நின்னு குட்டிக்கரணமோ அல்லது ஏதாவது குரங்கு சேட்டையோ  செய்யச் சொல்லுவேன்,அதைப் பார்த்து என் குழந்தை மகிழ்ச்சியுடன் சிரிக்கும் அவ்வளவு தான்’
"கரெக்ட்.. கரெக்ட் அதோடு நிறுத்திக்க …"

"அது மட்டுமல்ல இதுகளைப் பார்த்தால் அதுகள் செய்யும் சேட்டைகளைப் பார்த்து என் குழந்தை மகிழ்ச்சி அடைவதுடன் ,விளையாட்டு காட்டச் சொல்லி சாப்பாடு ஊட்டுவேன்"

"ஓ பொம்மை களைக் காட்டி சோறு ஊட்டுகிற மாதிரிஅப்படித்தானே "

"சில சமயங்களில் தீனிகளை அதுகளுக்கு தர்ற மாதிரி நீட்டுவேன்,உண்மையென நினைச்சு கையை நீட்டும் போது கையை பின்னாடி இழுத்துக்கொள்வேன். அதைப்பார்த்து என் குழந்தை சந்தோஷப் படும்., அந்த தீனியை உடனே தான் வாங்கிச் சாப்பிட்டுவிடும்.
"சரி கடைசியில் அந்த பொம்மைகளுக்கும் கொஞ்சமாவது குடுப்பியா ‘

"அய்யய்யோ.. அதெல்லாம் காஸ்ட்லி ஸ்நாக்ஸ்,அதைக் குடுக்க முடியுமா ?"

ஆடிட்டரம்மா சொல்லச் சொல்ல வெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்தா ஜோதிக்கு உடம்பெல்லாம் எரிந்தது.அடிப்பாவி உன் குழந்தை நல்லா சாப்பிட என் குழந்தைகள் விளையாட்டு பொம்மையா? அதுகளும் குழந்தை தானே ? அதுகளுக்கும் அந்த தின்பண்டத்தை சாப்பிடனுன்னு ஆசை இருக்காதா/ குடுக்கிறபோல பாவ்லா காட்டி காட்டி ஏமாத்தியிருக்கியே ,என உள்ளுக்குள் குமுறியபடியே உரத்த குரலில் தன் குழந்தைகளை அழைத்தாள் ஜோதி,வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்த குழந்தைகளை பொங்கி வரும் கண்ணீரை அடக்கிக் கொண்டு குழந்தைகளை அள்ளி அணைத்துக்கொண்டு அங்கிருந்து நடந்தாள் ஜோதி.

ஜோதி சொல்லியவற்றை முழுமையாக கேட்டு முடித்த திவாகர் நிதானமாகப் பாடினான்."பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை.மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை ".
Share.

Leave A Reply