அலைகள் அசைந்தாடும் கடலின் ஓரத்தில் உடைந்த நிலையில் தரை  தட்டி நின்று கொண்டிருந்தது ஒரு கப்பல் அதன் அருகில் ஒரு அறிவிப்பு பலகை.

அதில்…
உள்ளே சென்று பார்க்க நபர் ஒன்றுக்கு ஐம்பது
ரூபாய்.

மக்கள் வரிசை வரிசையாக சென்று உடைந்த கப்பலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இருள் கவ்வத் தொடங்கியது.

மற்றொரு புறத்தில்… இரண்டு இரண்டு பேர்களாக பெரிய பெரிய பெட்டிகளைத் தூக்கிச் சென்றனர்.

பெட்டிகளை வாங்கி ஒருவர் அடுக்கிக் கொண்டிருந்தான்.

ம்…சீக்கிரம் போங்கள். என்று வேகப்படுத்தி வேலை வாங்கிக் கொண்டிருந்தான் ஒருவன்.

உடைந்த கப்பலின் நேர் எதிரில் ஒரு பெரிய பங்களாவின் மொட்டை மாடியில்…..

அலை கடலை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார் பூபதி.

பதட்டத்துடன் ஓடி வந்து. எதிரில் நின்றாள் வேலைக்காரி விஜி.

ஐயா! ஐயா!அம்மாவை காலையிலிருந்து காணவில்லை…!

என்ன மீனாவை காணாமா?   நன்றாகப் பார்! என்றவர் வேலைக்காரர்கள் அனைவரையும் விசாரித்தார்.

எல்லோரும் ஒரு முகமாக நேற்று ராத்திரிதான் கடைசியாகப் பார்த்ததாக கூறினார்கள்.

ஐயா! போலீசில் புகார் கொடுத்தால் நல்லது என்று ஒரு வேலைக்காரன் சொன்னான்.

சரி, ஏற்பாடு செய். என்ற பூபதி போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

வாருங்கள் வணக்கம்! என்னய்யா இவ்வளவு தூரம் என்றார் இன்ஸ்பெக்டர்.

எங்கள் உதவி எதுவும் வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்றார் இன்ஸ்பெக்டர்.

என் மனைவியை இரண்டு நாளாக காணவில்லை. என்று நிறுத்தினார் பூபதி.

என்ன இரண்டு நாட்களாக காணாமல் போனார்களா? சற்று விவரமாக கூறுங்கள் என்றார் இன்ஸ்பெக்டர்.

நேற்று முன் தினம் முதல் காணவில்லை இன்ஸ்பெக்டர் மிகவும் கவலையாக இருக்கிறது என்றார் பூபதி.

சரி, நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள். நீங்கள் யாரையாவது சந்தேகப் படுகிறீர்களா?என்றார் இன்ஸ்பெக்டர்.

எனக்கு விரோதிகளே இல்லையே இன்ஸ்பெக்டர் யாரை நான் சந்தேகப்படப் போகிறேன்.

ஆனால், இந்த விஷயம் வெளியில் தெரிய வேண்டாம். எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்றார் பூபதி. பத்திரிக்கையில் செய்தியாக வரக்கூடாது என்றார்.

முயற்சிக்கிறேன்!  என்ற இன்ஸ்பெக்டர்  ஆச்சரியமாக பூபதியை பார்த்தார்.

நான் வரட்டுமா என்றார் பூபதி.

கவலைப்படாமல் போய் வாருங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார் இன்ஸ்பெக்டர்.

பூபதி ஸ்டேசனை விட்டு காரில் புறப்பட்டார் வீட்டிற்கு…

எல்லாரும் பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்து தேடுவார்கள். இவர் பத்திரிக்கையில் போடக்கூடாது என்கிறார் என்று எண்ணியவராக அவர் போவதை பார்த்துக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர்.

தபால்களை பார்த்துக்கொண்டு இருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி. மேலிடத்து தபால் ஒன்று அதில்..

இன்ஸ்பெக்டர் ரவி,
போதை பொருள்களையும், பேதை பெண்களையும் கடத்தும் கும்பலை பற்றி மேல் விவரம் எதுவும் இல்லை. இந்த குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்படுங்கள். இல்லை விரைவில் வேறு டிவிஷனுக்கு மாற்றப்படுவீர்கள்!

இன்ஸ்பெக்டர் ரவி சிந்தனையுடன் அடுத்த கடிதத்தை பார்த்தார்!

இன்ஸ்பெக்டர் ரவி, கன்னிகுடா போலீஸ் ஸ்டேஷன், கன்னிகுடா.

அந்தக் கடிதத்தை உடைத்துப் பார்த்தார் உள்ளே சிறு துண்டு கடிதம்.
                             தொடரும்

Share.

Leave A Reply