26-இலவம் பஞ்சிற்றுயில்
வீட்டிற்கு முன் வாசல் பக்கம் சின்ன செடி வளர்ந்து இருந்தது. அதன் இலை ஐந்து இதழாக விரிந்து பார்க்க அழகாக இருந்தது.
அந்த இலையின் அழகை கண்டு அந்தச் செடியை வளர்த்தார்கள். அந்த செடி மரமாக வளர்ந்து கூடை போல் நிழல் கொடுத்தது.
அதன் கீழ் சிறுவர்கள், சிறுமிகள் விளையாடினர். பூத்து, காய் காய்த்தது. அதன் காய் நீளமாகத் தொங்கியது.காய் முத்தி வெடித்து பஞ்சு பறந்தது.
அப்போது பறந்து வந்த பஞ்சை எடுத்து ஊதி விளையாடினார்கள் சிறுவர்கள்.
முற்றிய காய்களை எடுத்து வைத்துக் கொண்டாள் அந்த வீட்டுப் பெண்மணி.
அக்கா இதில் என்ன செய்யலாம் என்று ஆர்வமாக கேட்டார்கள் சிறுவர்கள்.
இது இலவம் பஞ்சு இதில் பொம்மை செய்யலாம். தலைகாணி தைக்கலாம், இலவம் பஞ்சு மெத்தையில் தூங்கினால் சுகமாகவும் நல்லா தூக்கமும் வரும் என்றாள் மணி.
மேலும், சொன்னாள்… ஔவை பாட்டி அந்தக் காலத்திலேயே
“இலவம் பஞ்சிற் றுயில்” என்று சொல்லி இருக்கிறார்கள் என்றாள்.
இலவம் பஞ்சு காயை உடைத்துப் பார்த்த சிறுவர்கள் உள்ளே அடுக்கி வைத்தாற் போல் வெண்பஞ்சுகளும், முத்துக்கள் போன்று நடுவில் விதைகளையும் பார்த்து வியந்த சிறுவர்கள் கீழே விழுந்த காய்களை எடுத்து மணியிடம் கொடுத்தனர்.