உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதது தண்ணீர்.காற்று.தண்ணீரை பாதுகாக்கவும், காற்றை மாசுஅடையாமல் பாதுகாப்பதும் நமது கடமை. குறிப்பாக தண்ணீரை நாம் நம் வருங்கால சந்ததிகளுக்காக சேமித்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


நமது பாட்டனார் காலத்தில் இருந்த நீர் நிலைகளில் பத்தில் ஒன்று கூட இப்போது இல்லை. கண்மாய், நீரோடைகள்,ஆறுகள்,கிணறுகள் ,குட்டைகள் போன்றவற்றின் பெயர்கள் எல்லாம் எழுத்தளவில் தான் உள்ளது அதன் அடையாளங்கள். காணாமல் போய்விட்டது. பல இடங்களில் கட்டிடங்கள் தான் காட்சியளிக்கின்றன.

தண்ணீரை சேமிப்பதும்,நீர்நிலைகளை பாதுகாப்பதும் மிகவும் முக்கியமான ஒன்று. விஞ்ஞானிகள்  உலகத்தில் தண்ணீர் தேவைக்காக ஒருவரை ஒருவர் தாக்கி போராடும் சூழல் உருவாகும் என்று அபாய மணிஅடித்துள்ளார்கள்.


இப்போது இருந்து கூட நாம் தண்ணீரை சிக்கனமாகவும் -மாசுபடாமலும் பாதுகாக்கத்தொடங்கவேண்டும்.குழந்தைகளுக்கு தண்ணீரின் அருமையை எடுத்துச் சொல்வது நமது கடமையாகும். நம்மை சுற்றி  நகரமாக,கிராமமாக எப்படி இருந்தாலும்  இருக்கும் இடங்களில் உள்ள குளம், குட்டைகள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். அற்ப சந்தோசங்களுக்காக அழிக்க முயலுபவர்களை தடுத்து பாதுகாக்க வேண்டும். எல்லாவற்றையும் அரசே செய்யவேண்டும் என்ற எண்ணத்தைதவிர்த்து மக்கள் தங்கள் பங்களிப்பை பாகுபாடின்றி செய்தால் இந்த நாடு நன்மை விளைவிக்கும்.

ஏற்கனவே அழிந்தது போக இருக்கும் நீர் ஆதாரங்களை நாம் தூர் வாரி தண்ணீரைசேமித்து வைத்தால் வருங்காலத்தவருக்கு அது பயன்தரும்.தண்ணீர் இல்லாமல் இருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் யோசனை செய்து பாருங்கள்.
நகரத்தில் உள்ளவர்களுக்கு ஒருநாள் வழக்கமாக வழங்கப்படும் தண்ணீர் வழங்க முடியவில்லை,அல்லது கிடைக்கவில்லை என்றால் என்ன பாடு பட வேண்டி உள்ளது.நீர் கிடைக்கும் இடம் தேடி ஓடவேண்டி வரும்.அதேபோல் நகரம் அல்லாத பகுதியில் வசிப்பவர்களுக்கு ஒரு வருடம் பருவமழை பொய்த்துப் போனால் என்ன ஆகும் ?கண்மாய் காய்ந்து விடும் அங்கே கபடி தான் விளையாடுவார்கள்.விளைபொருட்கள் விளையாமல் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும்.


சமீபத்தில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது .அதோடு காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டதால் நாம் எதிர்பார்த்ததைவிட சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக மழைகொட்டித் தீர்த்தது. இதனால் இந்தப்பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அரசும் மற்றவர்களும் உதவிகள் செய்து அவர்களை மீட்டெடுத்து உள்ளனர்.

இந்த நூற்றாண்டில் நாம் பார்த்த அதிக மழை என்று கூட சொல்லலாம்.வீடுகளும்,சாலைகளும் தெரியாத அளவுக்கு எங்கு திரும்பினாலும் தண்ணீர் தான்..திரும்பிய பக்கமெல்லாம் தண்ணீர்,தண்ணீர்.அதிகமாக வரும் தண்ணீரை தேக்கி வைக்க வசதிகள் நம்மிடம் இல்லை.மிகச் சிறந்த வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி  தண்ணீரை சேமிக்க நல்ல திட்டங்களை யோசிக்கவேண்டும்.செயல் படுத்தவேண்டும்.


பரந்து விரிந்து கிடக்கும்  நம் நாட்டில் தண்ணீர் சேமித்து வைக்க குளம் -குட்டைகள் குறைந்து விட்டதே இதற்கு காரணம்.பொதுவாக ஒரு கிராமத்தை எடுத்துக்கொண்டால் இருநூறு,முன்னூறு வீடுகள் இருக்கும். அந்த ஊருக்கு தேவையான கண்மாய்,ஊரணி,சிற்றாறுகள்,கிணறுகள் ஏராளமாய் இருக்கும்.அவை மழை தண்ணீரை உள்வாங்கிக்கொள்ளும்.சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள்,வீடுகள் எண்ணிக்கை நமக்கு தெரியாததல்ல.ஆனால் அதற்கேற்ப தண்ணீர் தேக்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு ஏதும் இல்லை.

இனிமேலாவது புதிய நகரங்களை விரிவாக்கம் செய்யும் போது கட்டாயம் தண்ணீர் செல்வதற்கும்,தேக்கி வைப்பதற்கும்  திட்டங்கள் இருக்கவேண்டும்.அதை அதிகாரிகள் முழுமையாக கடைப்பிடிக்கவேண்டும்.அப்போது தான் பாதுகாப்பான வாழ்விற்கு உறுதி கிடைக்கும். அதன் மூலம்  வருங்காலத்தில் மழைகொடையை நாம் வளமாக வாழ பயன்படுத்திக்கொள்ள முடியும்.

 நம் முன்பு ஏதாவது ஒன்று  தேவைக்கு அதிகமாக இருந்தால் அதைப்பற்றி நாம் சிறிதும் அக்கறையோ, கவனமோ செலுத்துவதில்லை.அதே நேரத்தில் அது கிடைக்கவில்லை என்றால் தான் அதன் அருமையை நாம் உணர்ந்து பரபரப்புக்கு ஆளாகி விடுகிறோம். 


விஞ்ஞானிகளும்,ஆன்றோர்களும் கூறும் ஆலோசனைப்படி  வீணாகும் தண்ணீரை சேமிக்கும் முறைகளை நாம் பின் பற்றவேண்டும்.அப்படி செய்தால் நம் வாழ்வும்,வருங்கால சந்ததியினர் வாழ்வும் நிச்சயம் மலர்ச்சி அடையும்.

Share.

Leave A Reply