சித்த-சிக்கன மருத்துவம்
————————————–

ஊகாரம் -ஊஞ்சல் 

ஊஞ்சல் ஆடும் மனம் நல்லது,கெட்டது என்பதை தெரிந்து ஊஞ்சல் ஆடும். அன்று…அன்று சமைத்த உணவை சாப்பிடுவது உடல் நலனுக்கு நல்லது.

ஊசுதல் 

மறுநாள்… மறுநாள் என வைக்கும்போது செய்த உணவு சுவை கெட்டு,மணம் கெட்டு இருக்கும். கெட்டது என்று தெரிந்தும் அதை தூக்கிப் போட மனம் இல்லாமல் ஊஞ்சல் ஆடும் மனம் சாப்பிடச் சொல்லும். உடனே அதை சாப்பிட்டு நோயை சம்பாதித்துக் கொண்டு வாந்தி, பேதி ,வயிற்று வலி இப்படி உபாதைகளுக்கு ஆளாகி மருத்துவரிடம் சென்று மருந்து,மாத்திரை என சாப்பிட்டு உடலும், உள்ளமும் கெட்டு மேல் மூச்சு ,கீழ் மூச்சு வாங்கி இத்தனை அவதிகளையும் பட்டுவிட நேரிடும்.

ஊசுன பொருளை சாப்பிடக்கூடாது என்ற மன உறுதி இருந்தால் மீதமுள்ள சிறியதை தூக்கிப் போட்டுவிட்டு நிம்மதியாக ஆரோக்கியமாக இருக்கலாம். ஊஞ்சல் ஆடும் மனம் சாப்பாட்டு விசயத்தில் இருக்கக் கூடாது.

பிடித்த உணவு என்று அதிகம் சாப்பிடவும் கூடாது.பிடிக்காதுஎன்று பட்டினியாக கிடக்கவும் கூடாது.

சாப்பிட்டவுடன் எங்காவது போய் தவிர்க்க முடியாமல் சாப்பிட்டு அவதிப் படுபவர் அதிகம். உணவு நம் வயிற்றுக்கு தேவையானதைத் தான் சாப்பிட வேண்டும்.பிறருக்காக சாப்பிட்டால் வயிற்று உபாதைகளுக்கு ஆளாக நேரிடும்.

ஊட்டம்
ஏதோ சம்பாதித்தோம் ,ஏதோ சாப்பிட்டோம் என்று தான் பலரின் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது.சமைத்த உணவை சுவைத்து, ரசித்து சாப்பிடக் கூட நேரமில்லாமல் இருப்பவர்களும் உண்டு. பசிக்குத் தான் உணவு .சுவை எதுக்கு ? என்று கேட்பவர்களும் உண்டு.

உணவில் ஊட்டச் சத்தும் இருக்க வேண்டும். சுவையும் இருக்க வேண்டும். அவ்விதம் கவனித்து சாப்பிட்டால் மருத்துவருக்குப் பணம் செலவு செய்யத் தேவை இல்லை.

‘’வைத்தியருக்கு கொடுப்பதை
வணிகனுக்கு கொடு ‘’

என்பார்கள்.ஊட்டச் சத்து உள்ள பொருள்களை வணிகரிடம் வாங்கி சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கலாம்.

ஊதாரி 

மனிதன் உழைக்கிறான்…உழைக்கிறான்…உழைத்துக் கொண்டே இருக்கிறான்.

 தேவையில்லாத செலவுகள் செய்து அழித்து விடுகிறான்.மது,புகை பிடித்தல்,கூடாத பழக்கத்தால் சம்பாதித்த பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்து விட்டு குடும்பத்தில் பற்றாக்குறை.

   தான் கெடுவதுடன்,குடும்பத்தினர் சுகாதாராமும் கெட்டு,சுற்றுப்புறமும் கெட்டு மாசுபட்டுப் போக காரணமாகவும் இருக்கிறார்கள்.





   கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் உணர்வார்கள்.கடினமாக உழைத்தால்தான் பணம் சம்பாதிக்க முடியும். சம்பாதித்த பணத்தை முறையாக செலவு செய்தால் தானும், மகிழ்ச்சி பெற்று குடும்பமும் மகிழ்ச்சி அடையும்.

   ஆனால், புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் புகை பிடித்து புற்று நோய் சம்பாதித்துக் கொள்கிறார்கள். இதற்கு பெயர் தான் ‘’ காசு கொடுத்து நோயை வாங்குவது’’.மனிதனுக்கு மட்டுமே சிந்திக்கும் திறனை இறைவன் கொடுத்திருக்கிறான். இது தேவை,இது தேவையில்லை என்பதை சிந்தித்து தனக்குள் ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்தால் இந்த உலகில் வறுமையும் இருக்காது.நோயும் தாக்காது.கொஞ்சம் சிந்திப்போம்.

ஊற்றி 

   ஊற்றி என்றால் வயிறு ,ஒரு சாண் வயிற்றுக்குத் தான் இந்தப் பாடுபடுகிறோம். வயிறு மட்டும் இல்லை என்று கற்பனை செய்து பாருங்கள்.இந்த உலகில் உழைக்க மறந்த,உறங்க மறந்த சூழ்நிலைதான் இருக்கும். எதற்கு உழைக்க வேண்டும்,எதற்கு செலவு செய்து இப்படி பல கேள்விகள்.வயிறு இருப்பதால் தானே எல்லாமும்.

ஊன் 
ஊன்-இறைச்சி. நாக்கு தான் சுவையை உணர்த்துகிறது.’’அள்ளுனு சுள்ளுனு / அகப்பை துனுக்குனு /’’ கேட்கிறது நாக்கு.

மீன், கோழி, ஆடு,மாடு ,பன்றி காடை, கெளதாரி போன்ற இறைச்சிகளை விரும்பி உண்கின்றனர்.கொழுப்பு அதிகரித்து அவதியும் படுகின்றனர்.

இத்துடன் மதுவும் அளவுக்கு அதிகமாக குடித்து குடல் வெந்து அழுகி உயிரைவிட்டு,தன் மனைவியை விதவை ஆக்கி,குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் ஆகி, நீண்டநாள் சந்தோசமாக குடும்பத்துடன் வாழவேண்டியவர்,பாதி ஆயுளில் தானும் இறந்து குடும்பத்தை துன்பத்தில் மூழ்கடிக்கின்றனர்.
மதுவால் விதவையான பெண்கள் தான் எத்தனை பேர்,அவர்கள் கண்ணீர்விட்டு காலத்தைக் கடத்தும் அவலம் தான் எத்தனை …எத்தனை…

தன்னை நம்பி வந்த பெண் என்பதை ஏன் மறக்கிறோம்.தன் குடும்பம் என்பதை ஏன் மறக்கிறோம்.தன் உயிர் விலை மதிப்பற்றது என்பதை ஏன் மறக்கிறோம்.

மதுவில் இருக்கும் ஏதோ ஒரு சுவைக்கு அடிமையாகி தன்னையே மாய்த்துக் கொள்வதற்காகவா பிறவி எடுத்தோம்.

எண்ணிப்பார்த்து உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ளுங்கள். நீங்கள் சம்பாதிக்கும்பணத்தில் அமைதியான ,ஆரோக்கியமான வாழ்வைத் தொடங்குங்கள்.
                                                                                                                                                                                    -மருத்துவம் வளரும்.
=========================================

Share.

Leave A Reply