தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
என்று திருமந்திரம் கூறுகிறது. நமது தமிழர்
பண்பாடு குருவைப் போற்றுவது.
கல்வி கொடுத்தவன் வித்தியா குரு
தீக்கை அளிப்பவன் தீட்சா குரு
ஞானம் அளிப்பவன் ஞான குரு
தீட்சா ஒரு தனிப்பட்டவருக்கு ஞானம் அளிப்பவர். ஞானகுருமார் சந்ததிகளுக்கே ஞானம் அளிப்பவர்கள். அவர்கள் உலக குரு என்றே சொல்லப் படுபவர்கள்.
சிவபெருமானின் நெற்றியில் காணப்படும் ஞானக்கண்களை சிவபெருமாள் திறந்த போது ஆறு அருட்பெருஞ்ஜோதி வெளிப்பட அதன் வெப்பம் தாங்காமல் தேவர்கள் எல்லோரும் திசைக்கு ஒருவராக ஓடினார்கள்.
சரவணப் பொய்கையில் இருந்த 1008 இதழ்கள் கொண்ட தாமரையில் வந்து இறங்கிய அந்த ஜோதிப் பிழம்பு ஒரு திருமேனியாக வடிவம் கொண்டு ஆறு குழந்தைகளாக முருகப் பெருமான் அவதாரம் கொண்டார்.
ஆறுமுகங்களும் குணங்களும்…
1-முற்றறிவு -ஞானம்
2-இன்பம்- ஐசுவர்யம்
3-ஆற்றல் -அழகு
4-தன்வயமுடைமை- வீரியம்
5- பேரருளுடைடமை- வைராக்கியம்
6-இயற்கை அறிவு- புகழ்
இவை முருகனின் ஆறு குணங்கள் ஆகும்.
நெருப்பில் தோன்றி, நீரில் வடிவமாகி, விண்ணில் வளர்ந்து, மலையில் குடியிருந்து, காற்றுப் போல் எங்கும் நிறைந்து சுவாசமாக இருக்கும் முருகக் கடவுளைப் பற்றுபவர் வாழ்வில்…
ஆறுமுகங்களின் குணமாகிய ஆறு குணங்களும் அமைந்து எல்லா நலன்களும் பெற்று அவன் புகழ் பாடுவார்கள்.
முருகனின் திருவடியை பற்றியவர். கலியுகத்தில் பிறந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில். இலக்கிய, இலக்கண இமயமாகத் திகழ்ந்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆவார்.
சுவாமிகள் தமிழ் வளர்ச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் முகமலர்ச்சியுடன் வாழ்நாள் முழுவதும் இறைப் பணியுடன் இலக்கியப் பணியும் இணைந்து பணியாற்றிய பைந்தமிழ் தொண்டர் ஆவார். சுவாமிகள் இயற்றிய பாடல்கள் ஐம்பதாயிரம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன.
முருக வழிபாட்டை கௌமார சமயத்தை தமிழகமெங்கும் சென்று பரப்பிய காரணம் கருதி முருகதாச சுவாமிகள் என்றும். உச்சி முதல் உள்ளங்கால் வரை திருநீறு பூசிக் கையில் தண்டாயுதம் கைக் கொண்டும், தலையின் முடியை விரிய அவிழ்த்துத் தொங்கவிட்டும் தோன்றும் கோலத்தைக் கண்டோர் தண்டபாணி சுவாமிகள் என்றும். திருப்புகழ் பாக்கள் பல பாடி உள்ளமையால் திருப்புகழ் சுவாமிகள் என்றும். வண்ணப் பாடல்கள் பல பாடிப் பைந்தமிழுக்குத் தொண்டு செய்தமையால் வண்ணச்சரபம் என்றும் இவர் வாழ்ந்த காலத்தில் மக்களும் கவி மழை பொழியும் கவிஞர்களும் சுவாமிகளைப் போற்றி வணங்கினர்.
முருகனை குருவாக பெற்றும், கௌமார மடத்தில் தண்டபாணி சுவாமிகளை வணங்கி வந்ததன் பலனாக…
2018 இல் முருகபக்த மாநாட்டில் தண்டபாணி முருகன் சன்னிதானத்தில் சரவணபுரம் கௌமார மடாலயம் மடாதிபதி முனைவர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் ஆசிநல்கி “முருகன் மும்மணி மாலை” (முருகன் பக்தி பாடல்கள்) நூலை வெளியிட்டு கொடுத்தார்கள்.
பழனி மலை சென்று பழனி தண்டபாணி சுவாமிகள் பாதங்களில் வைத்து வணங்கி பக்தர்களுக்கு கொடுத்து வந்தோம்.
கோவையில் வசிப்பதால் கோவைக்கு வந்த நாள் முதல் மருதமலை முருகனை அவ்வப்போது தரிசித்து வணங்கி வருவோம்.
முருகன் புத்தகம் வெளியிட்ட பின் போக எண்ணி போகவே முடியவில்லை. ஆண்டுகள் ஓடிக்கொண்டிருந்தாலும், முருகனை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் அலை கடல் போல் தொடர்ந்து கொண்டிருந்தது.
ஆண்டுகள் ஆறான போது மார்கழி பூஜை செய்து கொண்டிருந்தபோது மகன் ச. ம.பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் வந்திருந்தனர். வயது ஆகின்றது நடக்க முடியும்போதே மருதமலை முருகனைப் பார்த்து விட வேண்டும் என்றேன்.
மறுநாள் வெள்ளிக்கிழமை 27. 12. 2024 மறக்க முடியாத நாள் ஆம் வெள்ளிக்கிழமை மருதமலை முருகன் கோயிலுக்கு கிருஷ்ணன், பிரேமா, சாரதா, சங்கருடன் சென்றோம்.
முருகன் பாதங்களில் ‘முருகன் மும்மணி மாலை’ புத்தகத்தை வைத்து வணங்கி தீபார்த்தனை கண்டு வணங்கி வந்து அலுவலகத்தில் புத்தகங்களை கொடுத்தோம். உங்கள் கையால் கொஞ்சம் புத்தகத்தைக் கொடுத்துச் செல்லுங்கள் என்று சொன்னார்கள்.
அதன்படி இருபது புத்தகங்களை எடுத்து வந்தோம்.
கீழே வரும் போது இருவருக்கு கொடுத்துவிட்டு, மூன்றாவது ஒரு தம்பதியர் வந்து கொண்டு இருந்தார்கள்.
நீங்கள் முருகர் பக்தர் தானே என்றேன். ஆமாம் என்றவுடன் ஒரு புத்தகத்தை கொடுத்தேன்.
நீங்கள் முருக பக்தர் தானே என்று என்னிடம் கேட்டார்கள். ஆமம் என்றேன்.
நாம் கொண்டு வந்த வேலை இவர்களுக்கே கொடுக்கலாம் என பையைத் திறந்து ஒரு சிறு வேலை எடுத்தார்கள்.
சாமி கும்பிட்டு விட்டு வந்து ஒரு முருக பக்தரிடம் கொடுக்கலாம் என எண்ணி இருந்தோம். உங்களைப் பார்த்ததும் உங்களுக்கு கொடுக்கிறோம் என கொடுத்தார்கள்.
தீர்க்க ஆயுளுடன், எல்லா நலமும், வளமும் பெற்று, முருகன் அருள் கூடட்டும் என்று வாழ்த்தினேன். முருகன் பாதம் தொட்டவர்களுக்கு மேலும் நலனே செய்வார் என வாழ்த்தவும்.
அந்த முருகனே வாழ்த்துவது போல் உள்ளது என அவர்கள் நெகிழ்ந்தார்கள்.
அவர்கள் கொடுத்த வேலை வாங்கிய நானும் நெகிழ்ந்து போய் சரியான முருக பக்தையிடம் தான் கொடுத்து இருக்கிறீர்கள் என்றவள்…
மகனிடம் இருந்த மீதி புத்தகத்தையும் அவர்களிடமே கொடுத்து உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கொடுங்கள் என்றேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்கள்.
முருகன் அருளை எண்ணி எண்ணி கண்ணீர் பெருகுகிறது. தைப்பூச திருநாளில் இதை சொல்ல முருகன் என்னைப் பணித்திருக்கிறார்.
அம்மாவிடம் வேல் வாங்கிய முருகன். இந்த அம்மாவுக்கு வேல் கொடுத்து இருக்கிறார்.
வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா
டாக்டர் செந்தமிழ் வாணி
ச.மல்லிகா,
ஔவையார் மா மன்றம்,
சக்தி நகர்,
கோவை.
