கேசவா! பிராணனை உச்சந்தலையில் நடைபெறச் செய்ய வேண்டும் என்பதை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன். 

அர்ச்சுனா! மனதை இதயத்தில் நிலை நிறுத்திய பிறகு பிராணனை மேல் நோக்கி நாடியின் மூலம் இதயத்தில் மேலாக எழுப்பி உச்சந்தலையில் நிலைபெறச் செய்ய வேண்டும் என விவரிக்கிறார் கிருஷ்ணன்.

கேசவா! ஓம்காரத்தை ஒரே எழுத்து உடையது என்று கூறும் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! ஓம்காரம் ஓர் எழுத்து உடையது.இது இரண்டற்ற அழியாத பரப்பிரம்ம பரமாத்மாவின் பெயர்.

பெயரும், பெயருக்கு உடையவனும் வேறல்ல. ஓர் அகாரம், பிரமம் என்று அறிந்து கொண்டு எவன் எதை விரும்புகிறானோ அவன் அதை அடைகிறான் என்கிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! எவன் வேறு சிந்தனை அற்று எப்பொழுதும் இடைவிடாமல் புருசோத்தமனான  என்னை நினைத்து எப்பொழுதும் இடைவிடாமல் என்னிடம் ஒன்றிவிட்ட யோகி என்னை எளிதில் அடைய முடியும் என்கிறார் கிருஷ்ணன்.

கேசவா! இப்படிப்பட்ட பக்தனுக்கு பகவான் எளிதில் அடையக் கூடியவர் என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா!எப்பொழுதும் பகவானைச் சிந்தித்துக் கொண்டிருக்கும் பிரியம் மிகுந்த பக்தன் பகவானுடைய பிரிவை ஒரு கணம் கூட பொறுக்க மாட்டான்.

பகவானுக்கும் அவர்களுடைய பிரிவு சகிக்க முடியாது. எனவே, பகவானே அப்படிப்பட்ட பக்தனுடன் இணைய வேண்டும் என்று நினைத்த பிறகு அங்கே கடினம் என்று கருத்துக்கு இடம் இருக்காது. இவர்களே எளிதாக அடையக் கூடியவர்கள் என்கிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! மிக உயர்ந்த சித்தியை அடைந்த மகாத்மாக்கள் என்னை அடைந்து விட்ட பிறகு துன்பங்களுக்கு உறைவிடம் ஆனதும், நிலையற்றதுமான மறுபிறவியை அடைவதில்லை என்கிறார் கிருஷ்ணன்.

கேசவா! உயர்ந்த சித்தி என்பதையும் அவர்களை ‘மகாத்மா’ என்று ஏன் அழைக்கப்படுகிறார்கள் என்பதையும் விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! உயர்ந்த சிரத்தையுடனும், பிரியமுடனும் எப்போதும் சிந்திக்கும் பக்தன் சாதனையின் எல்லை நிலையை அடைந்த பிறகு வேறு ஒரு சாதனையும் புரிய வேண்டியது எஞ்சி இருக்காது.

அக்கணமே பகவானுடைய நேரடியான அனுக்கிரகத்தைப் பெற்று விடுகிறான். அந்த மிக உயர்ந்த எல்லையை எய்திய நிலையைத்தான் ‘பரமசித்தி’ என்று கூறப்படுகிறது. பரமசித்தி பெற்றுவிட்ட ஞானியான பக்தனையே ‘மகாத்மா’ என்று அழைக்கப்படுகிறான் என்கிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply