“நான் இப்போது உங்களுக்குச் சொன்ன இந்த கீதா சாஸ்திரம் யாரோ ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதன்று. எல்லா யோக சக்திகளுக்கும் தலைவரான சர்வ வல்லமை படைத்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின்,
“திரு முகத் தாமரையில் இருந்து அவர் அர்ச்சுனனுக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் நேராகக் கேட்டது.” என்று திருதராஷ்டிரருக்கு கீதையின் தனிப்பெருஞ் சிறப்பைக் கூறுகிறார் சஞ்சயன்.
அரசே! பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கும், அர்ச்சுனனுக்கும் இடையே நடந்த இந்த ரகசியமான நன்மை தரக்கூடிய அற்புதமான உரையாடலை நினைத்து நினைத்து நான் மீண்டும் மீண்டும் மகிழ்கிறேன்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கும், அர்ச்சுனனுக்கும் இடையே நடந்த இந்த தெய்வீகமான உரையாடலான கீதா சாஸ்திரம் கற்பவர், கற்பிப்பவர், கேட்பவர், சிந்திப்பவர், விளக்குபவர்கள் ஆன மனிதர்கள் அனைவரையும் தூய்மைப் படுத்துகிறது.
அவர்களுக்கு மேன்மை அளிக்கிறது. இது பகவானுடைய ஆச்சரியமான குணங்கள், பிரபாவங்கள், ஆளுமை, தத்துவம், ரகசியம், சுயரூபம் இவற்றை அற்புதமாக விளக்குகிறது.
“பகவான் செய்த உபதேசம் என் உள்ளத்தை வெகுவாகக் கவர்ந்து விட்டது. எனவே, வேறு எதுவுமே உயர்வாகத் தோன்றவில்லை.
என் உள்ளத்தில் மீண்டும்.. மீண்டும் பகவானுடைய உபதேசமே ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கருத்துக்களில் எல்லையற்ற மகிழ்ச்சியைக் காண்கிறேன். பிரம்மையிலும், மகிழ்ச்சியிலும் நான் திளைத்துக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் சஞ்சயன்.
அரசே! பாவங்கள் அனைத்தையும் போக்கக் கூடிய பகவான் ஸ்ரீஹரியின் மிகவும் அற்புதமான அழகான அந்த திரு உருவையும் நினைத்து… நினைத்து என்னுடைய மனதில் பெரு வியப்பு உண்டாகிறது.
மேலும், நான் மேலும்… மேலும் மகிழ்ச்சி அடைகிறேன். பாவங்களையும், அஞ்ஞானத்தையும், துயரத்தையும் ஹரிநாமம் கரணம் செய்கிறது.
பக்தர்களுடைய மனதையும் கவரக்கூடியது. ஆகவே, பகவானை ‘ஹரி’ என்று அழைக்கிறார்கள் என்கிறான் சஞ்சயன்.
மேலும், பகவானுடைய விஸ்வரூபமானது என் உள்ளத்தில் இருந்து அகலவே இல்லை. அக்காட்சியை நான் மேலும், மேலும் நினைத்துக் கொண்டே இருக்கிறேன்.
பகவானுடைய அதிசயமான, அரிதானதுமான அந்த தெய்வீக வடிவத்தின் தரிசனம் எனக்கு எப்படிக் கிடைத்தது என்று மிகவும் வியப்பு உண்டாகிறது.
இந்த விஸ்வரூபத்தின் தரிசனம் கிடைக்கக்கூடிய அளவுக்கு எனக்குப் புண்ணியமே இல்லையே! ஆகா! பகவானுடைய அளவில்லாத கருணை தான் என்னுடைய பாக்கியத்திற்குக் காரணம்.