கேசவா! “நான் உன்னை பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுவிப்பேன்” என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா!  நல்ல கர்மமானாலும் சரி, தீய கர்மமானாலும் சரி, அவற்றின் பயனாகத் தளைகள் ஏற்படத்தான் செய்யும்.

அதன் காரணமாக பல பிறவிகள் பிறந்து சுழல வேண்டி இருக்கும் இக்கரும  தளைகளைத் தான் பாவம் என்று குறிப்பிடுகிறார்.
இப்பாவங்களில் இருந்து நான் உன்னை விடுவிக்கிறேன் என்று கூறுகிறார்.

இவ்வாறு அர்ச்சுனனுக்கு ஆறுதல் கூறிய கிருஷ்ணன். கீதா உபதேசத்தை நிறைவு செய்கிறார். “அர்ச்சுனா! நீ என்னைச் சரணடைந்தாய். இப்போது முழுமையாக என்னைச் சரணடைந்து சோகத்தை முற்றிலும் துறந்து எவ்விதக் கவலையும் கொள்ளாது எப்பொழுதும் பரமேஸ்வரனான என்னையே சார்ந்து இரு” இவ்விடம் சோகத்தை அறவே, களைவதும், பகவானை அடைவதும் தான் கீதையின் முக்கிய கருத்து என்கிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! உனக்குக் கூறப்பட்ட இந்த ரகசியமான கீதா உபதேசத்தை ஒருபோதும் தவம் இல்லாதவனுக்குச் சொல்லக் கூடாது.

பக்தி இல்லாதவனுக்கும் சொல்லக்கூடாது. கேட்க விருப்பாதவனுக்கும் சொல்லக்கூடாது. எவன் என்னிடம் குறை காண்கிறானோ அவனுக்கு ஒரு போதும் சொல்லக் கூடாது என்கிறார்.

அதாவது, கீதா சாஸ்திரம் மிகவும் மறைத்துப் போற்றப்பட வேண்டிய நூல். நீ என்னிடம் மிகவும் அன்புள்ள பக்தனாகவும் தெய்வீக சம்பந்தம் நிறைந்தவனாகவும் இருப்பதால் நீ உபதேசம் பெறத்தக்கவன் என்றும்,  உன் மேன்மையைக் கருதியும் உனக்கு உபதேசம் செய்தேன்.

சுயதர்மத்தைக் கடைப்பிடித்து ஒழுகுவது என்ற தவம் செய்யாதவன், உலகியல் போகங்களில் உள்ள பற்றினால் உலகியல் சிற்றின்ப வேட்கைக்கு ஆட்பட்டு சுயதர்மத்தைக் கைவிட்டுப் பாவ கர்மங்களில் ஈடுபடுகிறவனுக்கு என்னுடைய குணங்கள், பிரபாவங்கள், தத்துவங்கள் நிறைந்த இந்த சாஸ்திரத்தைச் சொல்லக் கூடாது.

ஏனெனில், “அவன் இதைப் புரிந்து கொள்ள முடியாது. இந்த உபதேசத்திற்கும் எனக்கும் மரியாதை இராது” என்கிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply