அர்ச்சுனனின் வருத்தத்தைப் பார்த்த கிருஷ்ணன். அர்ச்சுனா! நீ எனக்கு மிகவும் பிரியமானவன். உனக்கும், எனக்கும் உள்ள பாசப் பிணைப்பு அசையாதது உறுதி மிகுந்தது.
ஆகவே, நீ எவ்விதத்திலும் வருந்தாதே என்று உற்சாகம் மூட்டுகிறார்.நீ எனக்கு மிகவும் நெருங்கிய அன்பன். அதனால், உன் மேன்மையின் பொருட்டு உன்னிடம் வெளிப் படுத்துகிறேன்.
“நான் இப்போது சொல்லப்போவது உனக்கு மிகவும் நன்மை பயப்பதாக இருக்கும்” என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! நீ என்னிடம் மனதைச் செலுத்து என்னிடமே பக்தி கொண்டிரு. என்னையே வழிபடு என்னையே வணங்கு இப்படிச் செய்வதால் நீ என்னையே அடைவாய். இதை நான் உனக்கு உண்மையென உறுதி கூறுகிறேன்.
ஏனெனில் நீ எனக்கு மிகவும் அன்புக் குரியவனாக இருக்கிறாய். உனக்கு என்னிடம் திடமான நம்பிக்கை வளர வேண்டும் என்ற எண்ணத்தினாலும்….
அர்ச்சுனனை நிமித்தமாகக் கொண்டு, தகுதி பெற்ற மற்ற பக்தர்களுடைய நம்பிக்கையைத் திடப்படுத்துவதற்காகவும் பகவான் மேலே சொன்னவாறு சபதம் செய்கிறார்.
மேலே சொன்ன விதம். சாதனை புரிகின்ற பக்தர் தம்மை வந்து அடைவர். இதில் நம்பிக்கை கொண்டு மனிதன் அத்தகைய சாதனைகளை புரிய மேலும்… மேலும் முயற்சி செய்ய வேண்டும் என்கிறார்.
நான்கு சாதனைகளில் ஏதாவது ஒன்றை கைக்கொண்டாலும் மற்ற சாதனைகள் தாமாகவே வந்து சேர்ந்துவிடும். சிரத்தையும், பக்தியும் இந்த நான்கிலுமே பொதுவாக உள்ளவைதாம் என்கிறார் கிருஷ்ணன்.
தர்மங்கள் அனைத்தையும் அதாவது கடமைகள் அனைத்தையும் என்னிடம் அர்ப்பணம் செய்துவிட்டு சர்வ வல்லமை பொருந்திய, எல்லாவற்றிற்கும் ஆதாரமான பரமேஸ்வரனான என் ஒருவனையே சரண் அடைவாயாக!
நான் உன்னைப் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுவிப்பேன் வருந்தாதே!
மனம், உடல், புலன்கள் மூலம் ஆற்றப்படும் கடமைகளிலும் அவற்றின் பயன்களான அனைத்துப் போகங்களிலும் ஆசை, பற்று, மமகாரம், அபிமானம் இவற்றை அறவே துறந்து விடு.
இதுவே, பகவானுக்காகவே,பகவான் உடைய ஆணையின் தூண்டுதலால் செய்விக்கிற படி ஆட்டுவிப்பவன் கைப் பாவை போலச் செயல்படுவது தான், எல்லா தர்மங்களையும் அர்ப்பணம் செய்வதாகும்.