இவ்விதம் பக்தன் துயரங்களையும், தளைகளையும் அறவே அடித்துக் கொண்டு போய்விடும். பின் துயரங்கள், தளைகள் அனைத்தும் நீங்கப் பெற்று எப்பொழுதும் பரமானந்தத்தைப் பெறுகிறான். ஆனந்த மயமான பூரண பிரம்மமான பரமாத்மாவை அடைகிறான் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! மறை பொருளுக்கு எல்லாம் மறைபொருளான ஞானம் என்னால் உனக்கு கூறப்பட்டது. இப்பொழுது நீ ரகசியமான இந்த ஞானத்தை முழுமையாக நன்கு ஆராய்ந்து எப்படி விரும்புகிறாயோ அப்படியே செய் என்கிறார்.
கேசவா! மறை பொருளுக்கு எல்லாம் மறைபொருள் என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! உலகியலிலோ, சாஸ்திரங்களிலோ எத்தனையோ மறைத்து போற்றப்பட வேண்டிய ரகசியங்கள் இருக்கலாம்.
அவை, எல்லாவற்றிலும் பகவானுடைய குணங்கள், பிரபாவங்கள் சுயரூபம் இவற்றின் உண்மை அறிவைப் புகட்டக் கூடிய உபதேசம். மேலும், சிறப்பாக மறைத்துப் போற்றப்பட வேண்டியது ஆகும்.
ஆகவே, இவ்வுபதேசத்தின் பெருமையையும், தகுதியற்றவர்களுக்கு இந்த உபதேசத்தை வெளியிடக்கூடாது. என்பதையும் உணர்த்துவதற்காக “மறைபொருளுக்கு எல்லாம் மறைபொருளான ஞானம்” என்ற அடைமொழி கூறப்பட்டிருக்கிறது.
அர்ச்சுனா! “நீ இந்த ஞானத்தைப் பெறத் தக்கவன் என்று உன்னை மதித்து உன் மேன்மை கருதி உனக்குச் சொல்கிறேன்” என்று கூறுகிறார்.
உனக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடித்து விட்டேன். சொல்ல வேண்டியது இனி மீதம் ஒன்றும் இல்லை என்று குறிப்பிடுகிறார்.
அர்ச்சுனா! உனக்கு கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் முதலிய பலவிதமான சாதனைகளை உபதேசித்து விட்டேன். அவற்றில் எந்த சாதனை உனக்கு நல்லது என்று தோன்றுகிறதோ அதைச் செய். அல்லது வேறு ஏதாவது உனக்கு சரி என்று தோன்றினால் அவ்வாறும் செய்யலாம் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! மறைபொருளுக்கு எல்லாம் மறை பொருளான என்னுடைய மேலான ரகசியமான உரையை மீண்டும் கேள். எனக்கு, நீ மிகவும் உற்ற நண்பனாக இருக்கிறாய். ஆகையால், மேலான நன்மை பயக்கும் என்ற கருத்தை இந்த உரையை நான் உனக்குக் கூறுவேன்.
பரம இரகசியம், உத்தம இரகசியம் என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்ட இரகசியங்களைத் தான் உனக்குக் கூறினேன்.
எங்கெல்லாம் முக்கியமான குணங்கள், பிரபாவங்கள், சுயரூபம், பெருமை, ஆளுமை இவற்றிற்கு நானே ஆதாரம், வல்லமை படைத்தவன் சாட்சத் சகுண நிர்குண பரமாத்மா என்று தாமே கூறிய இடங்கள் “என்னை வழிபாடு செய், என்னை தஞ்சம் அடை” என்று கூறிய இடம் எல்லாம் மிக… மிக மறைத்து போற்றப்பட வேண்டியவை என்கிறார்.
கிருஷ்ணன் தன்னையே ஆராய்ந்து முடிவு எடு என்றவுடன் அர்ச்சுனன் உள்ளத்தில் வருத்தம் ஏற்பட்டது.
ஏன் இப்படிச் சொல்கிறார், எனக்கு பகவான் இடத்தில் நம்பிக்கை இல்லையா, நான் பகவானின் பக்தன் இல்லையா, அன்பன் இல்லையா என்று கலங்கினான் அர்ச்சுனன்.