படகு அல்லது தெப்பத்தின் துணை கொண்டும், நீந்தி நீரின் மேற்பரப்பில் ஆற்று ஓட்டத்தின் வழியிலேயே செல்பவன் ஆற்றை எளிதில் கடந்து கரை சேர்கிறான்.

அவ்விதமே இயற்கையின் ஓட்டத்தில் சிக்கிய மனிதன் இயற்கையோடு மோதுகிறான்.

செய்ய வேண்டிய கடமைகளான கர்மங்களைப் பிடிவாதமாக தியாகம் செய்து அந்த இயற்கையைக் கடக்க முடியாமல் அதிலேயே மேலும் சிக்கிக் கொள்கிறான்.

பகவான் கர்ம யோகம், ஞான யோகம் இவற்றைப் பற்றிக் கொண்டு இயற்கைக்கு மேலே உயர்த்திக் கொண்டு கர்மங்களைச் செய்து வருபவன் கர்மத்தளையில் இருந்து விடுபட்டு இயற்கையை கடந்து செல்கிறான். அதாவது, பகவானே அடைந்து விடுகிறான் என்கிறார்.

அர்ச்சுனா! உடல் என்கிற இயந்திரத்தில் அனைத்து பிராணிகளையும் பகவான் தன்னுடைய மாயையினால் அவர் அவர்கள் கர்ம வினைக்கு ஏற்றவாறு சுழலச் செய்து கொண்டு அனைத்து இதயத்திலும் வீற்றிருக்கிறார்.

கேசவா! உடலை இயந்திரத்திற்கு ஒப்பிட்டுக் கூறுவதன் காரணத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! ரயில் வண்டியில் மனிதன் அமர்கிறான். அவன் தானே நகர்ந்து செல்வதில்லை. வாகனம் நகரும்போது அவனும் அசைந்து  சென்று கொண்டுதான் இருக்கிறான்.

அதுபோல, உடலில் உள்ள ஆத்மா அசைவற்றவன். அவனுக்கும் உடல் ஆற்றும் செயலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

இருப்பினும், தொன்று தொட்டு வரும் அஞ்ஞானத்தினால்  உடலுடன் ஏற்பட்ட பிணைப்பு காரணமாக உடலின் செயல்கள் எல்லாம் ஆத்மாவின் செயல்கள் என்று நினைக்கிறேன். இதைத்தான் இயந்திர உருவகம் என்றேன் எனச் சுட்டிக் காட்டுகிறார்.

பரதகுலத் தோன்றலே! நீ எவ்வகையிலும் அந்தப் பரமேஸ்வரனையே தஞ்சம் அடைவாயாக அந்தப் பரமாத்மாவின் அருளினால் நீ உயர்ந்த அமைதியையும், நிலையான பரமபதத்தையும் அடைவாய் என்கிறார்.

கேசவா! “எவ்வகையில் பகவானை தஞ்சம் அடைவது” என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! உறுதியான சிரத்தையுடன் பரமகதி, புகழ்,எஜமான், பராமரிப்பவர்,தூண்டுபவர் காப்பாளர், தமக்கு மிகுந்த நன்மை செய்பவர் என மதித்த அவரையே சார்ந்து எல்லாவித பொறுப்புகளையும் ஒப்படைத்து விட்டு பயமின்றி இருக்க வேண்டும்.

பகவான் எங்கும் நிறைந்தவர் என்பதை உணர்ந்து எல்லோருக்கும் சேவை செய்ய வேண்டும். எவ்வித துக்கமோ, சுகமோ நேரிட்டாலும் அது பகவான் அளித்த வெகுமதி என்று மனம் உவந்து ஏற்று இன்புற்றிருக்க  வேண்டும்.

பகவான் வகுத்தளித்த நிலைகளில் சிறிதும் மனவருத்தம் கொள்ளாது மரியாதை, புகழ் இவற்றில் உள்ள பெருமை இவைகளைத் துறந்து,

பகவானைத் தவிர வேறு எந்த உலகியல் பொருளிலும் ‘எனது’ என்ற பற்றுதலைத் துறந்து மிகுந்த நம்பிக்கையுடன், மிகுந்த பிரியத்துடனும் பகவானுடைய திருநாமம், கல்யாண குணங்கள், பிரபாவம், லீலைகள், தத்துவம், சுயரூபம் இவற்றை எப்போதும் இடைவிடாது கேட்க வேண்டும்.

பகவானையே சிந்திக்க வேண்டும், சொல்ல வேண்டும், பாட வேண்டும் இவ்வித மனப்பாங்கு செயல்கள் எல்லாமே பகவானை தஞ்சம் அடைவதில் அடங்கும்.

அர்ச்சுனா! பகவானைத் தஞ்சம் அடைந்து விட்ட பக்தனிடத்தில் பரமதயாளுவும், சிறந்த நண்பரும், சர்வ வல்லமை படைத்த வருமான பரமாத்மாவினுடைய எல்லையற்ற கிருபையின் வெள்ளம் பெருகும்.

அது அவனுடைய அனைத்துத் துயரங்களையும், தளைகளையும் அறவே அடித்துக் கொண்டு போய்விடும்.

Share.

Leave A Reply