கேசவா! நான் தங்கள் பக்தன். என் பக்தன் அழிய மாட்டான், வீழ்ச்சி அடைய மாட்டான் என்று கூறினீர்கள். இப்போது நீ அழிவாய், வீழ்ச்சி அடைவாய் என்கிறீர்கள். இம் முரண்பாட்டிற்கு என்ன விளக்கம் கூறப்போகிறீர்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! ஒரு கால் என்ற சொல்லை உபயோகப்படுத்தி இருக்கிறேன். எனது பக்தனுக்கு ஒரு காலும் வீழ்ச்சி ஏற்படாது என்பது முற்றிலும் உண்மை.

அர்ச்சுனன் எனது பக்தன் என்பதும் உண்மை.ஆகவே, அவர் பகவானுடைய சொல்லைக் கேட்காமலோ, ஆணையைக் கடைப்பிடிக்காமலோ ஒருபோதும் இருக்க மாட்டார்.

ஆனால், அகங்காரத்துக்கு கட்டுப்பட்டு பகவானுடைய ஆணையைப் பொருட்படுத்தாவிட்டால் அவரை பகவானுடைய பக்தன் என்று கருத இயலாது. எனவே, வீழ்ச்சி ஏற்படும் என எச்சரிக்கிறார் கிருஷ்ணன்.

எந்த அகங்காரத்தில் வசப்பட்டு நீ “நான் யுத்தம் செய்ய மாட்டேன்” என்று நினைக்கிறாயோ உன்னுடைய இந்தத் தீர்மானம் பொய்யானது.

ஏனெனில் உன்னுடைய இயல்பு வலுவில் போரில் ஈடுபடுத்தும். நீ யுத்தம் செய்ய மாட்டேன் என்பது வெறும் அகங்காரத்தின் குரல். யுத்தம் செய்யாமல் இருப்பது உன் கையில் இல்லை.

அஞ்ஞானத்தினால் உண்டான அகங்காரத்திற்கு ஆட்பட்டு உன்னை அறிவாளி என்றும், திறன் படைத்தவன் என்றும், சுதந்திரமானவன் என்றும் நினைத்துக் கொண்டு இந்தக் காரியத்தை இப்படித்தான் செய்வேன், இப்படி செய்ய மாட்டேன் என்று கூறுவது சற்றும் சரியல்ல என்கிறார் கிருஷ்ணன்.

குந்தியின் மைந்தனே! நீ மயக்கத்தின் காரணமாக எந்தச் செயலைச் செய்வதற்கு விரும்பவில்லையோ அதையும் உன்னுடைய இயல்பான கர்ம வினையினால்  கட்டப்பட்டு உன் வசம் இழந்து செய்யப் போகிறாய் என்கிறார்.

அதாவது, நீ வீரத்தாயின் புதல்வன் அல்லவா! நீயும் சூரவீரன் ஆயிற்றே. ஆகவே, உன்னால் யுத்தம் புரியாமல் இருக்க முடியாது என்கிறார்.

உனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அது உன்னை பலாத்காரமாகத் தன்பால் இழுத்துச் செல்லும். நீ உன் இயல்புக்குக் கட்டுப்பட்டு செய்யத்தான் வேண்டி இருக்கும்.

எனவே, எனது ஆணைக்கேற்ப நீ அதைச் செய்வாயானால் கர்மத்தளையில் இருந்து விடுபட்டு என்னை அடைவாய்.

இல்லை என்றால் விருப்பு, வெறுப்பாகிய வலையில் சிக்கிப் பிறப்பு, இறப்பு என்ற உலகியல் கடலில் உழன்று கொண்டே இருப்பாய் என்கிறார்.

அதாவது, ஆற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய்விடும் மனிதன் ஆற்றோட்டத்தில் எதிர்நீச்சல் போட்டு நதியைக் கடக்க முடியாமல் தன் அழிவைத் தேடிக் கொள்கிறான்.

Share.

Leave A Reply