கேசவா! ஒலி முதலிய புலன்நுகர் போகப் பொருட்களைத் துறந்து தூய்மையான இடத்தில் தனித்திருந்து என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! எல்லாப் புலன்களாலும் நுகரக்கூடிய போகப் பொருட்கள் அனைத்தையும் துறந்து அவற்றை நுகர்வதில் தன் வாழ்க்கையின் அருமையான நேரத்தைக் கழிக்காமல்…
சாதனை புரிவதற்கு உகந்த தூய காற்று வசதி, மக்கள் சந்ததி இல்லாத சூழ்நிலை உள்ள நதிக்கரையோ கோவிலோ, காடோ, மலைக் குகையோ, பெருக்கி மெழுகிச் சுத்தப்படுத்தப்பட்ட துப்புரவான இடமோ இருந்தால் அங்கு வசிக்க வேண்டும். இதுதான் ஒலி முதலிய போகப் பொருட்களைத் துறந்து தனிமையில் இருப்பது என்பதாகும்.
கேசவா! அகங்காரம், உடல் வலிமை, கர்வம், காமம், கோபம், சொத்து சேர்த்தல் இவற்றை நீக்கி தியான யோகத்தில் இடைவிடாது ஈடுபட்டிருப்பது என்றால் என்ன பொருள் என்பதை விளக்குங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! உடலிலோ, புலன்களிலோ, மனதிலோ உள்ள நான் என்ற நினைப்பு அகங்காரம் எனப்படும்.
இதன் காரணமாகத்தான் மனமும், புத்தியும், உடலும் செய்கின்ற காரியங்களுக்குத் தான் கர்த்தா என்று மனிதன் நினைக்கிறான். இந்த தேகா பிமானத்தை அறவே துறப்பதுதான் அகங்காரத்தை தியாகம் செய்வதாகும்.
செல்வம், உறவுமுறை, படிப்பு, பிறப்பு, உடல் வலிமை இவற்றை நினைத்துப் பெருமிதம் கொள்ளுதல் கர்வம் ஆகும். இதை முற்றும் விலக்க வேண்டும்.
இவ்வுலக, பரலோக போகங்களை அனுபவிக்க வேண்டும். என்ற, ஆசை காமம் ஆகும். அதை அறவே துறப்பதே காமத்தை தியாகம் செய்வதாகும்.
நீதிக்கு விரோதமாக நடக்கிறவர்களிடமோ, உள்ளத்தில் ஓர் எரிச்சல் ஏற்படுகிறது. உடனே, கண்கள் சிவந்து விடுகின்றன, உதடு துடிக்கிறது, உள்ளத்தில் அனல் வீசுகிறது.
முகம் விகாரம் அடைகிறது. இதுதான் கோபம் இதை துறக்க வேண்டும். எந்த நிலையிலும் இது ஏற்படாமல் அமைதி காக்க வேண்டும். உணர்ச்சிகள் தலையெடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுவே, குரோதத்தை தியாகம் செய்வதாகும்.
உலகியல் போகங்களை அனுபவிப்பதற்காகச் சேர்த்து வைப்பதும், என் சொத்து என்று நினைப்பதும் ஒரு விதத்தில் பரிகிரகம் இதை துறக்க வேண்டும்.
இவ்விதம் எல்லாவற்றையும் துறந்து சாதனை புரிபவன் இந்த சாதனை முற்றிய பிறகு பிரம்ம சுயரூபத்தை அடையத் தகுதி பெறுகிறான். மேலும், அக்கணமே அவன் பிரம்மத்தோடு ஐக்கியமாகி விடுகிறான்.
அவனுடைய பார்வையில் ஆத்மா வேறு, பரமாத்மா வேறு அன்று, தானே சத்,சித், ஆனந்தமயமான பிரம்மம் என்ற திடநிலை ஏற்படுகிறது.
அப்போது அகில உலகத்திலும் தான் இருப்பதாகவும், அகில உலகமும் தன்னிடம் இருப்பதாகக் கற்பிக்கப் பட்டதாகவும் காண்கிறான்.
சத்,சித், ஆனந்தமயமான பிரம்மத்தில் ஒன்றிய மனத்தெளிவு உடைய யோகி எதற்கும் வருந்துவதில்லை, எதையும் எதிர்பார்ப்பதில்லை.
அனைத்து பிராணிகளிடமும் சமபாவனையோடு இருந்து கொண்டு என்னுடைய உயர்ந்த பராபக்தியைப் பெறுகிறான்.