நோயற்றவன் உடலுக்கு ஒவ்வாத பொருளை அருந்தி நோய் அதிகமாகி துன்புறுகிறான். அல்லது இறந்து போகிறான்.
மனிதன் விளைவை ஆலோசியாமல் சுகம் என நினைத்து போகப் பொருட்களில் ஈடுபட்டு முடிவில் பலவிதமான பயங்கரமான துன்பங்களை அனுபவிக்கிறான் என்கிறார் கிருஷ்ணன்.
கணநேர சுகபோகதினால் உள்ள பற்றினால் சுகம் போலத் தோற்றம் அளிக்கிறது, ராஜசக் குணத்தின் விளைவு ராஜசமானது. அது மனிதனைப் பந்தப்படுத்தும். எனவே, மேன்மையை விரும்புபவர்கள் இவ்வித சுகத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்கிறார்.
எந்த சுகம் அனுபவிக்கும் காலத்தில் ஆத்மாவை மயக்கம் அடையச் செய்கின்ற தூக்கம், சோம்பல், கவனமின்மை இவற்றில் இருந்து தோன்றும் சுகம் தாமசம் எனப்படும்.
அர்ச்சுனா! உறக்கத்தின் போது மனம், புலன்கள் இவற்றின் செயல்கள் நின்று விடுகின்றன. களைப்பினால் ஏற்படும் துன்பமும் ஏற்படுவதில்லை.
மனம், புலன்களுக்கு ஓய்வு கிடைக்கிறது. அதனால், அது சுகம் போலத் தோன்றுகிறது. அதைத்தான் தூக்கத்தினால் ஏற்படும் சுகம் என்கிறார் இது கணநேரத்தில் அழியக் கூடியது.
மனம், புத்தி, புலன்கள் எல்லாம் உணர்வின்றி இருப்பதால் எதையும் அனுபவிக்கும் திறன் இருக்காது. மயக்கத்தை கொடுக்கும் சுகம் இதில் பற்று வைப்பவன் விளைவாக மனிதன் அஞ்ஞானமயமான மரமாகவோ, மலையாகவோ ஜடப்பிறவி எடுப்பான்.
மனதை மகிழ்வுறச் செய்வதற்காக பற்றின் வசப்பட்டுச் செய்யப் படுகின்ற வீணான செயல்களையும் கடமைகளை அலட்சியம் செய்து செய்யாமல் விட்டு விடுகிறான்.
மன மகிழ்ச்சிக்காக வீணான செயல்களில் ஈடுபடுவதிலும், கடமைகளைப் புறக்கணிப்பதனாலும் உழைப்பில் இருந்து தப்புவதிலும், அறியாமையினாலும் சுகம் ஏற்படுத்தும் போது…
செய்யத்தக்கது, செய்யத் தகாதது என்ற அறிவு சிறிதும் இருப்பதில்லை, விவேகம் இருப்பதில்லை, அறிவு மங்குகிறது, அறிவு மழுங்கி விடுவதால் செய்ய வேண்டியதில் அசட்டை ஏற்படுகிறது.
இந்த அசட்டையினால் ஏற்பட்ட சுகம் அனுபவ வேலையில் ஆத்மாவை மயக்கி வைத்திருக்கிறது. இந்தப் பற்றினால் ஈடுபடும் போது பொய், கபடம், இம்சை முதலிய பாவச் செயல்களுடைய செயல்களில் இறங்குவர் என்கிறார்.
சோம்பல், உறக்கம், கவனமின்மை இவை தமோ குணத்தின் விளைவுகள் ஏற்படுத்தும் தாமச சுகமாகும். மனிதனை பந்தப்படுத்துகிறது.
ஆகவே, மேன்மையை விரும்புகிறவன் நொடிப் பொழுதே இன்பம் அளிக்கும் மோகத்தை அளிக்கின்ற சுகம் போலத் தோற்றம் அளிக்கின்ற தாமச சுகத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! இம்மண்ணுலகிலோ, ஆகாயத்திலோ, பூமிக்கு அடியிலோ இம்மூன்று குணங்களில் இருந்து விடுபடவில்லை.
பிராமணன், சத்ரியன், வைசியன் இவர்களிடையே மற்றும் நான்காம் வர்ணத்தவர்களுடைய கர்மங்கள் இயல்பில் இருந்து உண்டான குணங்களுக்கு ஏற்பப் பிரிக்கப் பட்டிருக்கின்றது.