பரதகுலச் செம்மலே அர்ச்சுனா! மூன்று விதமான சுகம் பற்றி சொல்கிறேன் என்னிடம் கேள் என்கிறார் கிருஷ்ணன்.
அதாவது, சுகத்தில் சாதகனான மனிதன் பஜனை, தியானம், சேவை முதலிய பயிற்சியினால் இன்புறுபவன். முடிவில் துன்பத்தையும் அடைகிறான். அப்படிப்பட்ட சுகம் முதலில் விஷத்தை போல தோன்றினாலும் முடிவில் அமிர்தத்திற்கு ஒப்பாகும். பகவானைப் பற்றிய தெளிவான சுகமே சாத்விகம் எனப்படும்.
அர்ச்சுனா! வீட்டில் உள்ளவர்கள் கல்வியின் பெருமை பற்றி சொல்வதை எல்லாம் கேட்டு ஒரு சிறுவன் படிக்க ஆரம்பிக்கிறான்.
கல்வியின் பெருமையை முற்றிலும் அனுபவத்தில் பெறாததால், கல்வி பயிலும் போது தொடக்கத்தில் விளையாட்டுகளை விட்டுவிட்டுப் படிப்பில் ஈடுபடுவது மிகவும் துன்பமாகவும், கடினமாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது அதுபோல…
சாத்விக சுகத்தைப் பெறுவதற்காகப் பயிற்சியில் இறங்கியவனுக்கு போகங்களைத் துறந்து புலன்களை அடக்கி விவேகம், வைராக்கியம், புலன் அடக்கம், மன அடக்கம், பொறுமை முதலிய சாதனைகளைக் கடைபிடிப்பது மிகுந்த சிரமம் நிறைந்ததாகவும் துன்பம் தருவதாகவும் தோன்றுகிறது.
இதுதான் ஆரம்பக் காலத்தில் சாத்விக சுகம். விஷம் போன்று தோன்றுவதாகும். பின் தியானத்தினால் உண்டாகும் சுகம் அனுபவத்திற்கு வர ஆரம்பித்தவுடன் அமுதம் போலத் தோன்றுகிறது.
அச்சமயத்தில் உலகியல் சுகபோகங்கள் அனைத்தும் அவனுக்கு அற்பமாகவும், மதிப்பற்றதாகவும், துக்கமயமானவையாகவும் தோன்றி விடுகிறது.
பகவானைப் பற்றிய தெளிவான அறிவினால் இந்த சுகம் சாத்விகமானது. இதுவே, உயர்ந்த சுகம். ராஜச, தாமச, சுகங்கள் உண்மையில் சுகங்களே அல்ல.
பெயரளவில் தான் அவை சுகங்கள். அவற்றின் விளைவு துக்கம் தான். ஆகவே, மேன்மையை விரும்புபவர் ராஜச, தாமச சுகங்களில் சிக்கிக் கொள்ளாமல் சாத்விக சுகத்திலேயே எப்போதும் திளைத்து இருக்க வேண்டும் என்கிறார்.
போகப் பொருட்களில் புலன்கள் திளைப்பதால் உண்டாகும் சுகம். தொடக்கத்தில் அனுபவிக்கும் காலத்தில் அமுதத்திற்கு ஒப்பாகத் தோன்றினாலும், விளைவில் நஞ்சுக்கு ஒப்பாகும். அச்சுகம் ராஜசம் எனப்படும் என்கிறார்.
அதாவது, போகங்களில் பற்றுப் பெருகப் பெருக அவை கிடைக்கா விட்டால் அவை கிடைக்கவில்லையே என்ற துன்பம் ஏற்படுகிறது.
அவை கைநழுவி விட்டால் போய்விட்டனவே என்ற வருத்தம் உண்டாகிறது. தன்னிடம் உள்ள செல்வத்தை காட்டிலும் பிறரிடம் இருந்தால் பொறாமை ஏற்படுகிறது.
சுகபோகம் அனுபவித்த பிறகு உடல் களைத்துப் போய் பலம், வீரியம், புத்தி, ஒளி மழுங்கி விடுகின்றன. ஆற்றல் குறைந்து விடுகிறது.
சோர்ந்து போய்
பேரின்னல்களுக்கு ஆளாகிறான். இவ்வாறு இன்னும் பற்பல துன்பத்தின் விளைவுகள் நேர்கின்றது. கணநேர சுகம் உண்மையில் துக்கமே ஆகும்.