அர்ச்சுனா! எந்த புத்தி பிறவிருத்தி மார்க்கத்தையும், நிவர்த்தி மார்க்கத்தையும் செய்யத் தகுந்தது, தகாதது, பயம், பயமின்மையையும், தளையையும், மோட்சத்தையும் உண்மையாக அறிகிறதோ அந்தப் புத்தி சாத்விகமானது என்கிறார்.
மனிதன் எந்த புத்தியினால் தர்மத்தையும், அதர்மத்தையும், செய்யத் தகுந்த, தகாத காரியத்தையும் உள்ளபடி அறியாமல் தவறாக புரிந்து கொள்ளும் புத்தி ராஜசம் எனப்படும் என்கிறார்.
தமோ குணத்தினால் புத்தி சூழப்பட்டு அதர்மத்தை தர்மம் என்றும், எல்லாப் பொருட்களையும் அவற்றின் உண்மைத் தன்மைக்கு மாறாக நினைப்பது தாமச புத்தி என்கிறார்.
அதாவது, கடவுளை இகழ்வது, தேவதைகளை இகழ்வது, சாஸ்திரங்களை எதிர்ப்பது. தாய், தந்தை, பெரியோர்களை அவமானப் படுத்துவது.
தர்மங்களுக்கு மாறாக நடப்பது. வீண் ஆடம்பரம், பொய், கபடம், விபச்சாரம், தீங்கு விளைவிப்பது, மனம் போன படி நடப்பது போன்ற செயல்களை தர்மம் என்று நினைப்பதுதான் அதர்மத்தைத் தர்மம் என நினைப்பதாகும் என்கிறார்.
தாமச குணத்தில் ஆழ்ந்து விட்டபடியால், புத்தியில் பகுத்துணரும் ஆற்றல் முழுமையாக மழுங்கிவிட்டது போல் ஆகிவிடும்.
உண்மைக்கு மாறாகவே முடிவு செய்து விடுவதால் தலைகீழ் நிலையில் வீழ்த்தி விடுகிறது.
மேன்மையை விரும்புபவன் இத்தகைய விபரீதமான தாமச புத்தியை விட்டுவிட வேண்டும் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! பகவானைத் தவிர வேறு எந்த விசயத்திலும் சிந்திக்காது தியான யோகத்தின் மூலம் மனம், பிராணன், புலன்கள் இவற்றின் செயல்களை நிலை நிறுத்துதல் உறுதியாகும் என்கிறார்.
எக்காரணம் கொண்டும் போக விசயங்களில் பற்றுக் கொள்ள விடாமலும், சஞ்சலத்திற்கு இடம் கொடுக்காமலும் மனம், புத்தியை தன் வசத்தில் வைத்துக் கொள்வது சாத்விக தகுதியாகும்.
இத்தகைய உறுதி விரைவில் சாதகனைப் பரமாத்மாவிடம் சேர்க்கும். ஆகவே, மேன்மையை விரும்புபவன் தனது உறுதியை எப்பொழுதும் சாத்விகமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
அர்ச்சுனா! பயனில் விருப்பம் உடைய மனிதன் எந்த உறுதியினால் மிகுந்த பற்றோடு அறம், பொருள், இன்பம் அடைவதிலேயே உறுதியாக இருக்கிறானோ அவன் உறுதி ராஜசமாகும் என்கிறார்.
அர்ச்சுனா! தீய புத்தி கொண்டவன் எந்த உறுதியினால் தூக்கம், கவலை, துயரம், செருக்கு இவைகளை விடாமல் உறுதியுடன் பற்றுகிறானோ அவன் உறுதி தாமசமாகும் என்கிறார்.
துறக்கத்தக்க தாமசத் தன்மைகளை உறுதியின் காரணமாக மனிதன் விடாமல் பிடித்துக் கொண்டிருப்பவனுக்கு இயல்பாக அமைந்து விடும்.
அந்த தாமச உறுதி எல்லாத் தீமைகளுக்கும் காரணமாகும். ஆகவே,மேன்மையை விரும்புபவன் விரைவில் அடியோடு விட்டு விட வேண்டும் என்கிறார்.