கட்டுப்படுத்தப்படாத மனமும், புலன்களும் உடையவனும், அறிவு முதிர்ச்சி அடையாதவனும், கர்வம், வஞ்சனை, பிறர் வாழ்க்கையைக் கெடுப்பவனும், கவலை, சோம்பல், காலம் கடத்துதல் போன்ற குணம் படைத்தவன் தாமசன் என்கிறார்.
கட்டுப்படாத மனம் உடையவன். உள்ளமும், புலன்களும் சீர்படாதவன், பணிவும், மரியாதையும் அற்றவன்.
சூழ்ச்சி, கபடு நிறைந்தவன், பிறரை ஏமாற்றுபவன். பிறர் வாழ்வை பலமுறை கெடுப்பவன். பிறர் உழைப்பிற்கு இடைஞ்சல் செய்பவன்.
இரவு, பகல் எப்போதும் உறங்கிக் கொண்டே இருப்பவன், உலகியல் கடமைகளை ஆற்றாதவன். தொடங்கிய வேலையை இன்று, நாளை என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பவன்.
காலம் கடந்தும் வீணன். இக்குணங்கள் சிறிது இருந்தாலும் தாமசன் ஆகி விடுவான். இதனால் அவனுக்கு வீழ்ச்சிதான் ஏற்படும். மனிதப் பிறப்பில் இருந்து விலங்கு, பறவை, புழு, பூச்சி போன்ற நிலைக்கு இறங்கி விடுவார்கள்.
எனவே, மேன்மையை விரும்புபவர்கள், தம்மிடம் தாமசப் பண்புகள் ஒன்றும் தலை எடுக்காமல் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
அர்ச்சுனா! இப்பொழுது நீ முக்குணங்களுக்கு ஏற்ப புத்திக்கும் மன உறுதிக்கும் ஏற்படும் மூன்று விதமான பாகுபாட்டை முழுமையாகவும், தனித்தனியாகவும் நான் கூறப்போவதை கேள் என்கிறார் கிருஷ்ணர்.
அர்ச்சுனா! புத்தி என்றால் தீர்மானம் செய்யும் தனித்திறன். ஞானம் புத்தியில் இருந்துதான் உண்டாகிறது.
ஞானம் என்பது கர்மத்தைத் தூண்டுவனவற்றுள் ஒன்றாக வருகிறது. புத்தியின் ஏற்புத்திறன் கர்ம அமைப்பின் காரணமாக வருகிறது. இதுவே, இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.
குணங்களுக்கு ஏற்றவாறு புத்தியும், உறுதியும் மும்மூன்று வகைப்படும் புத்தி, உறுதி, சத்வ, ராஜச, தாமச குண வேறு பாட்டினால் மூவகை இலக்கணங்களைப் பிரித்தறியப்பட வேண்டியவை.
சாத்விக புத்தியையும், சாத்விக உறுதியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ராஜச, தாமச புத்தி, உறுதியை விற்று விட வேண்டும் என்கிறார்.