எந்தச் செயல் கடுமையான உழைப்பினால் நிறைவேறக் கூடியதோ அவ்வாறே போகப் பயனில் கருத்துடையதும், அகங்காரம் உடையவனால் செய்யப்படுகிறதோ அந்தச் செயல் ராஜசம் எனப்படுகிறது.
ராஜச கர்மம் செய்பவன் பற்றும், ஆசையும் கொண்டு ஒவ்வொரு நாளும் புதுப்புதுக் கர்மங்களைச் செய்து பெருக்கிக் கொள்கிறான். அதனால், மிகுந்த கடின உழைப்பைத் தருகின்ற அத்தகைய கர்மங்களை ராஜசம் என்று கூறுகிறார்.
சாத்விக தர்மம் செய்பவனுக்கு உடலில் ‘தான்’ என்ற அகங்காரம் கிடையாது. கர்மங்களைப் புரியும் கடவுள் நான் என்ற எண்ணமும் இராது.ஆகவே, அவன் எதைச் செய்தாலும் உடலில் சோர்வோ, துன்பமோ மனதிற்குத் தெரிவதில்லை என்கிறார்.
எந்தச் செயல் விளைவையும,இழப்பையும், துன்பத்தையும், திறமையையும் ஆராயாமல் வெறும் அஞ்ஞானத்தினால் தொடங்கப்படுகிறதோ அந்தக் கர்மம் தாமசம் என்கிறார்.
அதாவது, எந்தக் கர்மத்தையும் ஆரம்பிப்பதற்கு முன் ‘எண்ணித் துணிய கர்மம்’ என்கிறார்.
இச்செயலினால் ஏற்படக்கூடிய எதிர்கால விளைவு என்ன? எவ்விதமான சுகம் ஏற்படும்? என்ன துன்பம் நேரும் என்று அதன் விளைவைச் சிந்திக்க வேண்டும்.
இந்தக் காரியத்திற்கு இவ்வளவு நேரம் ஆகும். இந்த அளவு தர்மத்திற்கு குறைவு ஏற்படும். என்னென்ன கேடுகள் விளையும் என்று இழப்புகள் பற்றியும் யோசிக்க வேண்டும்.
இவ்விதம் விளைவு, இழப்பு, துன்பம், திறமை இவை பற்றியோ, இவற்றில் ஏதாவது ஒன்றைப் பற்றியோ கூட ஆராயாமல், ‘எது நடக்குமோ நடக்கட்டும். பார்ப்போம்’ என்று தகாத செயலை ஆரம்பித்து விடுவது தான் அஞ்ஞானத்தினால் செய்ய ஆரம்பிப்பது ஆகும்.
ஆலோசியாமல் தொடங்கப்படும் செயல் தாமசக் குணத்தின் செயலான மோகத்தினால் ஆரம்பிக்கப்படுகிறது
ஆகவே, அது தாமசம் எனப்படுகிறது. நரக வாழ்வை அனுபவிக்க நேரும். ஆகவே, மேன்மையை விரும்புபவன் ஒருநாளும் இவ்வித கர்மத்தை செய்யக்கூடாது என்கிறார்.
பற்றற்றவனாகவும், நான் என்ற அகங்காரத்தைக் காட்டும் சொல்லைக் கூறாதவனாகவும், உறுதியும், ஊக்கமும், உடையவனாகவும் செயல் கை கூடுதல், கை கூடாமை இவற்றில் மகிழ்ச்சி, துயரம் முதலிய மாறுபாடற்றவனாகவும் இருக்கின்ற அந்தக் கடமை சாத்விகன் எனப்படும்.