தானம் செய்வது தம் கடமை எனக் கருதி எந்த தானம் உரிய இடத்திலும் உரிய காலத்திலும் தகுதியானவர்களுக்கும் பிரதி உபகாரம் செய்யாதவர்க்கு தன்னலம் இன்றி கொடுக்கப்படுவது சாத்விகமாகும்.
உதவி செய்தவர்க்கு பதில் உதவி செய்து அதை தீர்த்து விட முடியாது. அவரை அழுத்திக் கொண்டே இருக்கும்.
ஸ்ரீ ராம சரித்திரத்தில் இராமபிரான் ஹனுமானிடம் கூறுகிறார். வானரத் தோழனே கேள்! உன்னைப் போல உபகாரம் செய்தவன். தேவனோ, மனிதனோ, முனிவரோ, உடல் படைத்த வேறு எவருமே இல்லை.
“உனக்கு என்ன பதில் உதவி செய்துவிட முடியும், என் மனது கூட உன் முன்னே நிற்க முடியாது” என்கிறார் ராமன்.
செய் நன்றியை வெளிப்படுத்துவதற்காகச் செய்யப்படும் உபகாரம் தானம் ஆகாது. தயங்காமல் உபகாரம் செய்ய வேண்டும். தயங்குபவர் செய்நன்றி கொன்றவர் ஆவார்.
தானம் செய்பவர் தானம் பெறுபவரிடம் இருந்து சிறிது கூட பதிலுதவி எதிர்பார்க்காமல் தன்னலம் கருதாமல் அளிக்க வேண்டும். அதுவே, சாத்விக தானமாகும் என்கிறார் கிருஷ்ணன்.
மன வருத்தத்தோடும் கைமாறு கருதியும், பயனைக் கருத்தில் கொண்டும் கொடுக்கப்படும் தானம் ராஜசம் எனப்படும் என்கிறார்.
கேசவா! மன வருத்தத்துடன் தானம் அளிப்பது என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! கொடுத்துத் தான் ஆக வேண்டும் என்று பலிகிடக்கலாம், அடம்பிடிக்கலாம், பயமுறுத்தலாம் அல்லது செல்வாக்கு உள்ளவர் மூலம் கட்டாயப்படுத்தலாம்.
அப்போது மனதில் துயரமும், கஷ்டமும் பட்டுக்கொண்டு மனமின்றி வேறு வழியின்றித் தானம் கொடுப்பது மன வருத்தத்துடன் கொடுப்பது ஆகும்.
கேசவா! பயனைக் கருத்தில் கொண்டு தானம் கொடுப்பது என்பதை விவரியுங்கள் என்கிறார் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! மரியாதை, பெருமை, புகழ், சொர்கம் இவற்றைக் கருத்தில் கொண்டு செய்யும் தானம் பயனைக் கருத்தில் கொண்டு செய்வதாகும். இவ்வாறு செய்வது ராஜசமாகும் என்கிறார் கிருஷ்ணன்.