மனிதர்களின் குணங்களுக்கு ஏற்றவாறு அவரவருக்கு அந்தந்த குணம் அமைந்த உணவு பிடிக்கும்.ஆகவே, மனித குணத்தைச் சொல்லும் போது உணவைப் பற்றி சொல்லி அதில் இருந்து குணங்களையும் கூற முடியும் என்கிறார் கிருஷ்ணன்.
மேலும், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, மிக்க சூடு, காரம் இவற்றுடன் கூடிய வறண்ட எரிச்சல் உண்டு பண்ணக் கூடிய மற்றும் துன்பம், கவலை, நோய் உண்டாக்கக் கூடிய உணவு வகைகள் ராஜச குணம் உடையவர்களின் விருப்பமானவை.
அதாவது, உண்ணும் போது தொண்டையை வருத்தக் கூடியவை நாக்கு, கடைவாய் இவற்றில் எரிச்சல், பற்களுக்கு கூச்சம், மெல்லும் போது வலி, கண்களில் நீர், மூக்கில் நீர், விக்கல் முதலியன துக்கங்களை உண்டு பண்ணக் கூடியவை.
உண்ட பிறகு ஏன் ஒன்றும் என்று வருந்துவது துன்பம். உண்டதனால் வயிற்றில் ஏற்பட்ட வலி நோய்களாகும். இவற்றை உண்பதால் துன்பம், கவலை, நோய் உண்டாவதால் இவற்றை விலக்க வேண்டும் என்கிறார்.
அரைவேக்காடு உணவு, ரசமற்ற, துர்நாற்றம் உடைய உணவு, பழையது, தூய்மை அற்ற உணவுகள் தாமச குணம் உடையவர்களுக்கு விருப்பமானது என்கிறார்.
எந்த யாகம் சாஸ்திரங்களுக்கு உட்பட்டு செய்யப்பட வேண்டிய கடமை என்று மனதை ஒருநிலைப் படுத்திப் பயனில் பட்டற்றவர்களால் செய்யப்படுகின்ற செயல் சாத்விகமான யாகம் ஆகும்.
பகட்டுக்காகவோ அல்லது பயனை கருத்தில் கொண்டோ எந்த யாகம் செய்யப்படுகிறதோ அந்த யாகம் ராஜசம் என்று தெரிந்து கொள். பகட்டு, பயன் என்ற இரண்டு குற்றங்கள் இருப்பதால் இது ராஜசமாகும் என்கிறார்.
சாஸ்திர முறை வழுவியும், அன்னதானம் அளிக்கப்படாமலும், மந்திரம் இல்லாமலும் தட்சனை கொடுக்கப்படாமலும், சிரத்தை இல்லாமலும் செய்யப்படுகின்ற யாகத்தைத் தாமசம் என்கிறார் கிருஷ்ணன்.
தெய்வங்கள், பெரியவர்கள், ஞானிகள் இவர்களை வணங்குவதும், தூய்மையும், நேர்மையும், பிரம்மச்சாரியமும், அகிம்சையும் உடலால் செய்யக்கூடிய தவமாகும்.
புலன்களை அடக்கி உடலில் உள்ள மாசுகள் அனைத்தையும் அகற்றி உடலைத் தூய்மைப் படுத்துவதே உடல் தவமாகும் என்கிறார்.
அதாவது, எது பிறர் மனதைப் புண்படுத்தாமல் இனிமையும், நலனும், அளிக்கக் கூடியதாகவும், உண்மையாகவும், இருக்குமோ, அந்தப் பேச்சும், வேத சாஸ்திரங்களை ஓதுதலும், பகவானுடைய நாம கீர்த்தனமும் வாக்கினால் செய்யக்கூடிய தவம் என்கிறார்.